Showing posts with label துபாய். Show all posts
Showing posts with label துபாய். Show all posts

துபாய் கோம்போ மீல்-1 (சவர்மா கடிக்க, சுலைமானி குடிக்க)

நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களை எல்லாம் சந்திக்கிறேன்...உங்களில் பல பேர் என்னை மறந்திருக்கலாம். புதியவர்களுக்கு என்னைத் தெரியாது...அமீரகப் பதிவர்களை மட்டும் அவ்வப்போது சந்திக்கும் வாய்ப்பினை பெற்றிருப்பதால் அவர்களுக்கு மட்டும் என்னைத் தெரிய வாய்ப்பிருக்கிறது..:-)

நான் ஒரு தொடர் பதிவர் அல்ல...எப்பவெல்லாம் தோணுதோ அப்போது தான் எழுதுவேன்...சில நேரங்களில் அது வருட இடைவெளியைக் கூட ஏற்படுத்தி விடுவதுண்டு...சமீபத்தின் இடைவேளையும் அப்படித்தான், முகப்புத்தகத்தின் இரண்டடி எழுத்துக்களில் கட்டுண்டு, அரட்டையும், கும்மியுமாக ஓடிய நாட்கள்... அமீரக தமிழ் அமைப்புகளின் செயல்பாடுகளில் நான் சற்று அதிகம் காட்டிய ஆர்வம், இவை எல்லாவற்றையும் விட என் இரண்டாவது மகளின் அன்பு இடையூரல்...ஒரு நிமிடம் சும்ம இருக்க மாட்டாள்...அதை இழுப்பது, இதை உடைப்பது, கம்ப்யூட்டரில் தண்ணீரை அள்ளி ஊற்றுவது, டீவி யை வயரைப் பிடித்து இழுத்து போட்டுவது இப்படி சேட்டைகள் ஏராளம்...

சமீபத்தில் எந்திரன் படத்தைப் பார்த்து விட்டு, என் மகளுக்கு பிடித்த ஒரே காட்சி,சிட்டி ரஜினிக்காந்த் டிவியைப் போட்டு உடைப்பது தான்...! படம் பார்த்து வந்ததிலிருந்து என் மகளுக்கு ஒரே கொண்டாட்டம் " வாப்பா டிவியை போட்டு உடைச்சிட்டாங்க...அவங்க டிவியை உடைச்சிட்டாங்கன்னு" அந்த வாரம் முழுதும் உற்சாகமாக சொல்லிக் கொண்டே இருந்தாள்...ஊரில் ஒரு டிவி ஏற்கனவே உடைத்த முன் அனுபவம் இருந்ததால், இங்கே இருக்கிற டிவியை காப்பாற்றுவது பெரிய பாடாகி விட்டது:-)

சமீபத்தில் அமீரகத்தில் ஒரு விழா முடிந்த தருவாயில் அதிகாலையிலேயே பதிவர் குசும்பன் என்னை அழைத்திருந்தார்...என்ன காலையிலேயே ? என்றேன்.

"சித்தப்பூ பேமிலி ஊரிலிருந்து வந்த பின்னும் எப்படி உங்களால் அமைப்புகளுக்காக இப்படி வீடியோ காட்சிகள் செய்ய முடிகிறது ?என்றார்"

அதை நான் செய்ய வில்லை என்று தலையில் அடித்து சத்தியம் பண்ணியதும் அவருக்கு பெருத்த சந்தோஷம்...அவருக்கு நான் செய்ததைப் பற்றியெல்லாம் அவருக்கு கவலை இல்லை, அவர் கவலை எல்லாம் என் சின்னப்பிள்ளையை வைத்துக் கொண்டு நான் எப்படி செய்தேன் என்பது தான்...
ஒய் ப்ளட் சேம் பிளட் :-)
(அவர் மகன் இனியவனை வைத்துக் கொண்டு அவர் படும் பாடு அவருக்குத் தெரியும் அல்லவா..?)

*************
பதிவில் நாம் எழுதியதெல்லாம் யார் படிக்கப் போகிறார்கள்..? என்ற எண்ணம் எனக்கு அவ்வப்போது ஏற்படுவதுண்டு, அதைத் தகற்கும் வகையில் அவ்வப்போது எனக்கு வரும் தனிமடல்கள் என் எழுத்து தீயிற்கு எண்ணெய் ஊற்றுவதாகவே அமையும்.

அந்த வகையில் சமீபத்தில் திருச்சி சையது வெளியிடப்போகும் "நட்புக்காக" சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள 26 சிறந்த எழுத்தாளர்களின் கதைகளில், என் கதையான "சிறகு தொலைத்த சிட்டுக் குருவிகள்" இடம் பெறுவதுடன் அதற்கு அணிந்துரை எழுதிய பாரதிதாசன் பல்கலைக்கழக தமிழியல் துறைத் தலைவர் பேராசிரியர் எழில்வேந்தன் அனைத்து கதைகளிலும் இது முடி மணியாகத் திகழ்கிறது என்று பாராட்டியிருப்பது, மற்றும் என் கதைகளில் சிலவற்றைப் படித்த பிரபலங்களில் சிலரான பேராசிரியர் பெரியார் தாசன் அப்துல்லா, கவிச்சித்தர் மு. மேத்தா, காவியத்திலகம் ஜின்னாஹ் சரியுத்தீன் ஆகியோர் நீங்கள் கண்டிப்பாக சிறுகதைத் தொகுப்பு வெளியிட வேண்டுமென்று என்னிடம் உரிமையுடன் என்னிடம் கேட்டுக் கொண்டது, போன்ற நிகழ்வுகள் எனக்கு மேலும் மேலும் எழுத வேண்டுமென்ற ஆர்வத்தைத் தூண்டக் கூடியதாகவே உள்ளது.

ஆனால் அதற்கான ஒரு நேர்த்தியான நேரம் கிடைக்காத வேளையில்,இந்த வெள்ளிக் கிழமை பதிவர் பாஸ்ட் பௌலர் நவ்பலுடன் பேசிக்கொண்டிருந்த போது, கிரிக்கெட் சம்பந்தமாக அவர் உட்பட சில பதிவர்கள் இணைந்து எழுதிவரும் "ஆடுகளம்" வலைப்பூவில் நீங்களும் எழுதுங்களேன்...என்று விளையாட்டாய் கேட்டது வினையாக மாறி விட்டது..:-) மீண்டும் அடித்தாட ஒரு வாய்ப்பு,

நாமலெல்லாம் சுனாமியிலேயே சும்மிங் போடறவங்க...சும்மிங் பூல் கிடைத்தா விடுவோமா..? ( எது இருக்கிறதோ இல்லையோ நாலு பஞ்ச் டைலாக் முக்கியம்..:-)) மீண்டும் இறங்கியாச்சு...( தேரை இழுத்து தெருவுலே விட்ட நவ்பல் போன்ற நண்பர்களுக்கு நன்றி...!) அடிச்சு ஆடுறதா ? இல்லை அடிவாங்கி ஓடுறதான்னு பார்க்கலாம்..:-)



ஆடுகளத்தில்....
******
ஆமா இதற்கு எதற்கு "துபாய் கோம்போ மீல்" என்று எதற்கு பேர் வைத்திருக்கிறாய்...சவர்மா, சுலைமானி என்று எதையும் கண்ணில் காட்ட வில்லையே? என்று கேட்பவர்களுக்கு, கொத்துபரோட்டா, டைரிகுறிப்பு, இந்த வரிசையில் இனி இதுவும் தொடர்ந்து வரும் கண்ணில் கண்ட செய்திகளுடன்....முன்பு எனக்களித்த அதே ஆதரவை மீண்டும் எதிர் நோக்கும்
உங்கள்......
கீழைராஸா பாலையிலிருந்து.....

மரணம் தேடிப் பறந்த மனிதப்பறவைகள்…


இன்னும் சில நொடியில்-விமானம்
தரையிறங்குமென்றபோது
எவரும் அறியவில்லை
அப்படி ஒரு செய்தி இடியென
தலையிறங்குமென்று..

பத்தாயிரம் மைல்கள்
பதனமாக வந்த பயணம்
பத்து மைல் இருக்கையிலே
பாவியவன்
பாசக்கயிற்றில் சிக்கியதே

தியாகத்தில் இவர்கள்
தீக்குச்சிகள்..என்பதாலோ
தீப்பெட்டியாக விமானம்
தீப்பற்றிக் கொண்டனவோ..?

எரிந்தது நீங்கள் மட்டுமல்ல
ஏக்கங்களும் கனவுகளும்
மரித்தது நீங்கள் மட்டுமல்ல
ஆசைகளும், உணர்வுகளும்…

தகவல்கள் எரியாது காக்க
எதையும் தாங்கும்
கருப்புப் பெட்டியாம்..!
உயர்வான உயிர்களைக் காக்க
உதவாக்கரை
உலோகப் பெட்டியாம்..!

உறக்கமில்லா இரவுகளில்
உழைத்திட்ட இம்மக்களென
உறங்கழைத்துச் சென்றானோ?
உலகம் காக்கும்பேரிறைவன்
இரக்கமில்லா இந்நிகழ்வை
இன்னும் பலர் நம்பாமல்,
ஏர் இந்தியா என்றாலே
எப்போதும் தாமதம் தான்
என்றெண்ணிக் காத்திருப்போர்
ஏர்போட்டில் ஏராளம்…

இயற்கையை நம் கையில்
எடுத்திட்ட பெருமிதத்தை
இது போன்ற சம்பவங்கள்
தடுத்திடச் செய்கிறதே..
பறவையின் பறக்கும்குணம்
பார்த்து செய்த விமானம்- இவர்கள்
உலகை விட்டு பறக்கையிலே
உதவிக்கு வரவில்லையே…?

யானை இருந்தாலும் ஆயிரம் பொன்
செத்தாலும் ஆயிரம் பொன்
இவர்களும் யானைகள் தான்…
இருக்கும் போது தன் ஆசைகள்
எரித்து குடும்பம் காத்தார்கள்
செத்தபோது தங்களை எரித்து
குடும்பம் காக்கிறார்கள்…

பறந்து சென்று பணம்தேடி-பந்தம்
துறந்து தனம் தேடி
இறந்து சென்றும் இனம் காத்ததால்
இவர்களும் சீதக்காதியன்றோ…?

(சமீபத்தில் பெரியார்தாசன் என்றறியப்பட்ட அப்துல்லாஹ் அவர்கள் துபாய் வந்திருந்த போது, நீங்கள் கவிதை எழுதுவதை விட கதை எழுதுவதில் அதிக ஈடுபாடு காட்டுங்கள் அது தான் உங்களுக்கு நன்றாக வருகிறது என்றார் ( எனக்கு கவிதை வரவில்லை என்பதை அவர் பாணியில் சொன்னார்) அந்தப் பெரியவரின் வார்த்தைகளை மீறி இதை எழுதிவிட்டேன்...கவிதையின் அளவு கோலுக்கு அப்பாற்பட்டதாக இருந்தாலும்...என் உணர்வுகளின் வடிகாலாகவே இதை வடித்துள்ளேன்.)

பதிவர்கள் நடித்த குறும்(பு) படம் (காணொளியுடன்) 99% நகைச்சுவை கேரண்டி

"அண்ணாச்சி படத்தை எப்ப வெளியிடலாம்..?"

"டிசம்பர் 18"
அதிர்ந்து போனேன்...என்ன டிசம்பர் 18 ஆ...அவதார், வேட்டைக்காரன் படவெளியீடு என்று உலகத் திரைவுலகமே அதிர்ந்து கொண்டிருந்த
டிசம்பர் 18 இந்தக் குறும்(பு) படம் ரிலீஸா...? இவர் தெரிந்து சொல்கிறாரா...? இல்லை நம்மை நிராகதியாக்க திட்டம் போடுகிறாரா...?இருந்தாலும் துணிந்து ஏற்பாடுகளில் இறங்கினோம்...ஒருவாரம் நண்பர்கள் முகவை முகில், ஊமையன் ஹக்கிம், சிம்ம பாரதி மற்றும் ரியாஸ் பாய் ( கிறுக்கல்கள் ஜெஸீலா கணவர்) போன்றோரின் அயரா உழைப்பில் சத்திரம் திரையரங்கம் ஏ/சி தயார் செய்யப்பட்டது....


(போஸ்டர் வடிவமைப்பாளருக்கு ஆணிகள் சற்று அதிகமானதால் கடைசி நொடியில் இந்த போஸ்ட்டரை நானே வடிவமைக்க வேண்டியாதாயிற்று...என்ன எதோ பரவாயில்லையா?)
பதிவர்களுக்கு வழக்கம் போலக் குழுமத்தில் அண்ணாச்சி அழைப்பு விட எதிர்பாராத அளவிற்கு அமோக வரவேற்பு...( பதிவில் அழைப்பு விட திரையரங்கு அளவு இடம் தரவில்லை) பதிவர்கள் குடும்பத்தினருடன் சேர்த்து 30 பேர் முன்பதிவு செய்ய ஹவுஸ் புல் பலகை மாற்றப் பட்டது.என்றாலும் எனக்கு உள்ளுக்குள் ஒரு பயம்...அண்ணாச்சி இது சரி வருமா..? என்றேன்.
"கப்பித்தனமா பேசிக்கிட்டு இருக்காமே வேலையைப் பாருன்னு" சொல்லிட்டாரு...
2009 டிசம்பர் 18 வெள்ளிக்கிழமை...

12 மணிக்கே எல்லோரும் வந்து குழுமினர்...ஒரு தடவை முடிவு பண்ணிட்டேன்னா என் பேச்சை நானே கேட்க மாட்டேன்னு நாங்க சொல்லிக்கிட்டு திரிந்தாலும் உண்மையில் வருகை தந்த பதிவர்கள் அதை நிருபித்தார்கள்...
இந்த முறை இஸ்மத் பாய் பிரியாணி சட்டியை ரியாஸ்பாய் கைப்பற்ற முயல பெரும் போராட்டத்திற்கு பின் இஸ்மத்பாயே பிரியாணிச் சட்டியை கைப்பற்றினார்.


(இந்த முறை சரி அடுத்த முறை நான் தான் ஆமா, என்று அமந்திருப்பவர் ரியாஸ் பாய், பிரியாணியுடன் வெற்றிகளிப்பில் அமர்ந்திருப்பவர் இஸ்மத் பாய்)
சரியாக 2:30 மணிக்கு படம் ஆரம்பிக்கப்பட்டது...பதிவர்களின் ஆரவாரத்துடன் 30 நிமிடங்கள் ஓடியது...எல்லோர் முகத்திலும் சந்தோசம். இதைத்தானே எதிர் பார்த்தது...படம் முடிந்ததும் பாராட்ட ஒன்று கூடிய பதிவர்கள் என்னைத் திக்குமுக்காட செய்ய ஒரு வழியாக எஸ்கேப்...( எனக்கு கொஞ்சம் கூச்ச சுபாவம்! )

அடுத்து சில நிமிடங்களில் இதில் கலந்து கொள்ள சிறப்பு விருந்தினராக வந்திருந்த இலங்கையைச் சார்ந்த காவியப் புலவர் டாக்டர் ஜின்னாஹ் சர்புதீன் அவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது. அதன் பின் உரையாற்றிய அவர் தன் உரையில்,
“எத்தனையோ வேறுபாடுகளை நீங்கள் கொண்டிருந்தாலும் நீங்கள் இங்கு வந்து தமிழால் இணைந்திருப்பதைக் கண்டு பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.இது போன்ற நிகழ்வுகளின் பதிவு எதிர்காலத்தில் எண்ணிப்பார்க்க இனிமையானது.இந்நிகழ்வில் நானும் ஒரு இளைஞனாக உங்களுடன் பங்கேற்றதில் என் வயதில் பாதி குறைந்தது போல் உணர்கிறேன். இதற்கு வாய்ப்பு தந்தமைக்கு உங்களுக்கு நன்றி” என்ற போது பதிவர்கள் நெகிழ்ந்து போனார்கள்.


சிறப்பு காட்சி முடிந்து வந்த பதிவர்கள் கூறுகையில் இந்த குறும்(பு)படம் கண்டிப்பாக அரைமணி நேர சிரிப்பிற்கு உத்தரவாதம் என்ற அந்த வார்த்தையில் என்னால் படத்தின் வெற்றியை உணரமுடிந்தது.
"உங்கள் திறன் இப்படிப்பட்ட விளையாட்டுப் படங்களுடன் நின்றுவிடாமல் கொஞ்சம் சீரியசாகவும் ஏதாவது இயக்க முயற்சி செய்யலாமே..?" என்பதே பெரும்பான்மையானோரின் கருத்தாக இருந்தது...கண்டிப்பாக உங்கள் அனைவரின் ஏகோபித்த ஆதரவுடன் வெகுவிரைவில் அமீரகத்தை கதைக்களமாக வைத்து ஒரு தரமிக்க குறும்படமொன்றை இயக்கலாமென்றிருக்கிறேன்...செய்யலாமா? என்று மற்றவர்களும் படம் பார்த்து விட்டு சொல்லுங்கள்...
வெற்றிப் படங்களைத்தரும் பெரிய இயக்குனர்கள் இயக்கியப் படத்தை கூட மற்றவர்கள் பார்த்து விமர்சித்த பின் தான் நாம் பார்க்க வேண்டும் என்ற கொள்கை கொண்ட உலகில், நான் ஒரு படம் செய்துள்ளேன் என்றதும் தெரிச்ச்சி ஒடாமல், நாங்களும் வருகிறோம் என்று வந்து, பார்த்து, வாழ்த்தி, பாராட்டி, என்னைத் திக்குமுக்காட வைத்த அனைத்து பதிவர்களுக்கும் மிக்க நன்றி....
உலக வரலாற்றில் முதல் முறையாக பதிவர்களுக்காக எடுக்கப்பட்ட படத்தை முதல் சிறப்புக் காட்சி கண்டு வரலாற்றில் தடம் பதித்தவர்கள்...
1)புலவர் ஜின்னாஹ் சர்புதீன்2) ஆசிப் மீரான் 3) குசும்பன்4) கீழை ராஸா 5) ஊமையன் ஹக்கிம்6) முகவை முகில் 7) கிளியனூர் இஸ்மத்8) ராஜாகமால் 9) நான் ஆதவன்10) செந்தில் வேலன்11) சந்திரசேகர் 12) சிம்ம பாரதி
13) ஜெஸீலா குடும்பத்தினருடன் 14) லியோ அண்ணன்15) ஆசாத் அண்ணன் 16) அபூ அப்ஸர் குடும்பத்தினருடன்17) சென்ஷி 18) ஜியாவுதீன் 19) சமீர்
20) பினாத்தல் சுரேஷ் அங்கிள் 21) கலையரசன்22) வினோத் கௌதம்
23) அன்புடன் மலிக்கா குடும்பத்தினருடன்24) கார்த்திக்கேயன்
25) ஹுசைனம்மா குடும்பத்தினருடன்.
"எந்தப்படமானாலும் பின்னி பெடலெடுத்து விமர்சனம் என்ற பெயரில் கிழிகிழியென்று கிழிக்கும் பதிவர்களை அழைத்து படத்தையும் போட்டு காட்டி, பதிவுலேயும் போட்டு விமர்சியுங்கள் என்கிறாயே உனக்கு என்னா தில்லு..?"ன்னு அண்ணாச்சி பக்கத்தில் இருந்து கேட்டுக்கிட்டிருக்காரு..
நல்ல படைப்புகளை பாராட்ட தெரிந்த ஒரு குழுவில் இதை சமர்பிக்கிறேன் பாராட்டினால் அது எங்கள் பாலைப்பதிவுக்கூடத்தைச் சாரும் ( கீழைராஸா, ஆசிப் மீரான், சிம்ம பாரதி, முகவை முகில், ஊமையன் ஹக்கிம்) விமர்சித்தால் அது அனைத்தும் என்னைச் சேரும்...இனி எழுத்து உங்கள் கையில்....








இதில் பார்க்க இயலாதவர்களுக்கு
தொடர்புடைய இடுகைகள்
ஊடகப்பார்வையில்
1)தினமலர் நாளிதழ்
2)அதிகாலை
3)முதுகுளத்துத்தூர்
பதிவுலகப்பார்வையில்
1) கிளியனூர் இஸ்மத்
2) ஹூசைனம்மா
3) குசும்பன்
4)அன்புடன் மலிக்கா

(உங்கள் விமர்சனமும் இதில் இணைக்கப்பட லிங்க் அனுப்பவும்)

அமீரகப் பதிவர்ச் சுற்றுலா…அழைக்கிறார் அண்ணாச்சி…


இடம் : அமீரகத்தின் 7 நாடுகளில் ஒன்றான புஜராவின் கடற்கரை நகரம் குர்பகான். ( மலையும் கடலைச்சார்ந்த மணல் பகுதி பகுதியும் குறிஞ்சி+நெய்தல்+பாலை).

நாள் : 06-11-09 வெள்ளிக்கிழமை

நேரம் : அதிகாலை 9 மணியளவில் ( விடுமுறை நாளில் இது அதிகாலை தான்)

அனுமதி: முதல் பதிவு செய்யும் 32 உலகப் பதிவர்கள் மட்டும் ( ஓட்டுநர் இந்த சுற்றுலா முடிந்ததும் பதிவர் ஆகி விடுவார்)

தலைமை : உயர்திரு அண்ணாச்சி அவர்கள்

உணவு: பொட்டலம் தயாராகி வருகிறது

நிகழ்ச்சி நிரல் :

அதிகாலை 9 மணி - பர்துபாய்

9:15 மணி - தேரா

9:45 மணி – சார்ஜா

10:00 மணி

பாட்டுக்குப் பாட்டு
கவுஜைக்கு கவுஜை
பதிவர் 2010 ( பதிவுலகில் சிறந்த பதிவுத் தேடல்)
அண்ணாச்சி நடத்தும் நீயா நானா…?
அண்ணாச்சியின் ஜாக்பாட் கேள்வி பதில் நிகழ்ச்சி
(அண்ணாச்சி கிட்டே யாராவது பிக்பாக்கெட் அடிக்காமல் இருக்கனும்)
அண்ணாச்சியின் அரட்டை அரங்கம்
( அதை யாரும் குறட்டை அரங்கமா மாத்திடக் கூடாது ஆமா)
சென்ஷியின் நானும் பிரபலம் தான் ( பேப்பர் ஒர்க்காம்)

12:30 மணி
ஜும்மா தொழுகை நேரம்

1:30 மணி

ராட் மாதவனுக்கு மொட்டை போடுதல்
( அண்ணன் புஜ்ராவில் தான் இருக்காரு, அவங்க ஆபிஸ்லே ஒரு டீன்னு பெர்மிசன் வாங்கிருக்காரு…(வடிவேலுவின் பாசக்காரப் பசங்க விட்டுடு சாப்பிட மாட்டீங்களடா காமெடி இவர் மூலம் புஜ்ராவில் நடக்கப் போகுது)


3:00 மணி

10க்கு 10 கிரிக்கெட்டு….
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்
அசத்தப்போவது யாரு…?

7:00 மணி
மீண்டும் பாட்டுக்கு பாட்டு………….

இரவு சாப்பாடு அவரவர் வீட்டில்…..


அமீரகத் தங்கம், சாத்தான்குளச் சிங்கம் அண்ணாச்சி அழைக்கிறார்….
http://asifmeeran.blogspot.com/2009/11/blog-post.html

வாருங்கள் பதிவர்களே…
பேருந்தில் இடம் பிடியுங்கள்…! வரலாற்றில் தடம் பதியுங்கள்..!


தொடர்புக்கு…

ஆசிப் மீரான் 050 655 02 45
கீழை ராஸா 050 418 42 45
சென்ஷி 050 314 60 41

துபாயா,அபிதாபியா,சார்ஜாவா..? அமீரக பதிவர்களின் இஃப்தார் ஓர் அலசல்...

இப்தார் முடிந்து மூன்று நாட்களாகியும் பதிவு வெளிவரவில்லை என்பதனால் பெரிய எதிர்பார்ப்பு உண்டாகி பதிவு "கந்தசாமி" படம் போல் கும்மப்பட்டு விடுமோ என்ற அச்சத்துடன் தான் ஆரம்பிக்கிறேன்.




இப்தார் ஆரம்பிச்சதிலிருந்து முடிந்த வரை நண்பர்கள் பக்கம் பக்கமாகப் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள்...இதிலே நாம என்னத்தை சொல்லபோறோம் என்று தோன்றினாலும், நண்பர்களின் சந்திப்பில் அவர்கள் அன்பில் திக்குமுக்காடி மகிழ்ந்த, நெகிழ்ந்த தருணங்களை சற்று வித்தியாசமான கோணத்தில் இந்நிகழ்வை ஒரு திரைக்கதை போல் சொன்னால் எப்படி இருக்கும் என்ற எண்ணத்தின் பிரதிபலிப்பு தான் இந்தப்பதிவு...( ஏன் இந்த கொலைவெறி..? என்று கும்ம ரெடியாவது தெரிகிறது...எதா இருந்தாலும் படிச்சிட்டு கும்முங்க...கந்தசாமி படம் போல போஸ்டர் பார்த்துட்டு கும்முன வேலையெல்லாம் இங்கே வேணா ஆமா)

ஆகஸ்ட் 28 ஆம் தேதி, 2009 ஆம் வருடம்...
நேரம் மாலை :- 5-00
கூகுளில் உலகை வலம் வந்த கேமரா...துபாய்க்குள் புகுந்து சார்ஜாவின் சாலைகளை உயர்த்திலிருந்து கடந்து அண்ணாச்சி வசிப்பிடத்தை சூம் செய்கிறது...அது மிகுந்த வாகன நெரிசல் நிறைந்த ஒரு பகுதி...அடுக்கிவைத்த பெட்டிகளைப் போன்ற அப்பார்ட்மெண்ட்கள்...பல பக்கங்களிலிருந்து புறப்பட்ட வாகனங்கள் அண்ணாச்சி வீட்டை நோக்கி சீறிப்பாய்கின்றன...


நேரம் மாலை :- 5-01
இடம் :- அண்ணாச்சி வீடு
நபர்கள் : அண்ணாச்சி, குசும்பன், சென்ஷி

குசும்பன்:- அண்ணாச்சி எப்ப பிரியாணி வரும்...?
அண்ணாச்சி:- வேணாம்...வேணாம், அழுதுடுவேன்....

சென்ஷி: அட குசும்பன் அப்படி என்ன கேட்டு விட்டானென்று இப்படி பீல் கொடுக்குறீங்க..? பிரியாணி எப்ப வரும்னு கேட்டா பதில் சொல்ல வேண்டியது தானே...?

அண்ணாச்சி: சென்ஷி உனக்கு தெரியாது...நான் இப்தாருன்னு மெயில் போட்ட அன்னைக்கே வந்து வீட்டில் டேரா அடிச்சிக்கிட்டு...இதே கேள்வியை ரெண்டு நாளா மூச்சு திணற திணற கேட்டு சாவடிக்கிறான்...

குசும்பன்:- அண்ணாச்சி எப்ப பிரியாணி வரும்...?

சென்ஷி: ஆத்தாடி...அவனா நீ..?



நேரம் மாலை :- 5-05

இடம் :- கீழை ராஸாவின் கார்
நபர்கள் : கீழை ராஸா, கிளியனூர் இஸ்மத், சிம்ம பாரதி, கவிஞர் நாசர்
கீழை ராஸா: என்ன இஸ்மத் பாய் உங்களை மூணு மணிக்கு கிளம்பச்சொன்னேன். இப்படி லேட்டா வந்தா எப்படி..?

இஸ்மத் பாய்: ஏன் ராஸா சொல்ல மாட்டே...பேமுலியை ஊருக்கு அனுப்பி விட்டு நாளொரு விழா எடுத்துக்கிட்டு இருக்கே...நானு காலையிலே 11 மணியிலிருந்து இப்தார் வர பெர்மிசன் கேட்டு மல்லுக்கட்டிட்டேன் ..ம்ம்ஹூம் அசையலையே...இப்பதான் கையிலே கால்லே விழுந்து உத்தரவு வாங்கிக்கிட்டு வர்றேன்...நீ பேசுவே ராஸா பேசுவே...


கீழை ராஸா: (மனதுக்குள்) நல்ல வேளை இஸ்மத் பாய்க்கு நாம கதை தெரியலை... இந்த இப்தார் வர, ரெண்டு நாளா போன்லே பெர்மிசன் கேட்டு போராடுற விசயம்இவருக்கு எங்கே தெரியப் போகுது...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

பீல் பண்ணுவதை உற்றுப்பார்த்த வாஹித்,

வாஹித்: என்ன ராஸா...அது தானே...
ராஸா : அதே தான்.... why blood...?

வாஹித் : Same Blood....( அவ்வ்வ்வ்)

(மீண்டும் பலவகையான வாகனங்கள் பல பக்கங்களிலிருந்து ஒரே திசையை நோக்கி வருவதை பலகோணங்களில், பலவித ஹாரன் ஒலி சத்தத்துடன் காட்டப்படுகிறது...



நேரம் மாலை :- 5-20
இடம் :- சார்ஜா அண்ணாச்சி வீட்டு முன்பு...

கீழைராஸாவின் கார் அண்ணாச்சி வீட்டு அருகாமையில் உள்ள தபால் அலுவலகம் முன்பு வந்தடைகிறது...பிண்ணனி இசையுடன் சத்தமில்லாமல் போனில் பேசிக்கொள்ள...

வண்டியிலிருந்து பிரியாணி, நோன்புக்கஞ்சி, சமோசா, மற்றும் இதரப்பொருட்கள் அண்ணாச்சி வீட்டிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது...


கஞ்சி கலயத்தை குசும்பனும், சிம்ம பாரதியும் கஷ்டப்பட்டு தூக்கி செல்ல ...
பிரியாணிச் சட்டியை நான் ஆதவனும், கீழை ராஸாவும் நகற்றிச்செல்ல ..
இதர பொருட்களை , சென்ஷி, அண்ணாச்சி, கோபி, இஸ்மத் பாய், ராஜா காமால் ஆகியோர் எடுத்துச் செல்ல அவர்கள் வருசையாகச் செல்வதை டாப் ஆங்கிலில் காட்டப்பட்டு பிண்ணனி இசையில்...

( சுப்பிரமணியபுரம் "மதுரை குலுங்க குலுங்க ...இந்த மண்ணு மணக்கிற மல்லிகைப்பூ மனசை" என்ற மெட்டில் கீழ்கண்ட பாடல் ஒலிக்கிறது...

"சார்ஜா குலுங்க குலுங்க ஒரு சாகாஸம் பண்ணப்போறோம்...
துபாய் மணக்க மணக்க ஒரு இப்தாரு வைக்கப் போறோம்...

துபாய் மண்ணு மணக்கிற நோன்புக்கஞ்சி
சார்ஜா வீதி எடுத்துச் சொல்லும்
இங்கு வந்து குவிகின்ற பதிவர் வட்டம்
நல் பேரை எடுத்துச் செல்லும்..."

லிப்டில் ஏறி வலது பக்கம் திரும்பி கேமரா முன்னோக்கிச்செல்ல... அண்ணாச்சி வீடு அமர்க்களமாய் வரவேற்கிறது....


நேரம் மாலை :- 5-30
இடம்: அண்ணாச்சி வீடு

அதன் பின் செந்தில்வேலன், கார்த்திக்கேயன் வருகை...
பழங்களுடன் சகோதரி ஜெஸீலா குடும்பத்துடன் வருகை...
ஆசாத் அண்ணன், சுபைர், மற்றும் தினேஷ் வருகை....



இப்படி எல்லோரும் குழுமி... அந்த ஹால் ஒரு கல்யாண வீடு போல் கலை கட்டுகிறது...அண்ணாச்சி மலர்ந்த முகத்துடன் அங்குமிங்கும் உலாவிக்கொண்டிருக்கிறார்...


கிச்சனை பெண்களுக்கு விட்டுக்கொடுக்காமல் இஸ்மத் பாயும், சிம்ம பாரதியும் ஆக்ரமித்திருந்தனர்..மற்ற நண்பர்கள் பம்பரமாய் சுழன்று ஹாலில் பதார்த்தங்களைப் பரப்புகின்றனர்...
ஒரு சில நிமிடங்களில் அந்த ஹால் பந்தி போல் மாற எல்லோரும் அவர்வர் இடத்தைப்பிடித்து அமர்கின்றனர்...
படகு பதிவர் குடும்பத்துடன் வருகை...
ஃபாஸ்ட் பௌலர் குடுமத்துடன் வருகை..
நண்பன் ஷாஜி, மற்றும் அண்ணன் லியோ வருகை
அப்போது சுல்தான் பாயும் வருகை தர அண்ணாச்சியும் சுல்தான் பாயும் உணவு தரச்சோதனையில் இறங்குகின்றனர்..



நேரம் மாலை :- 6-20
சுல்தான் பாய்: ஆசிப் உணவு வகைகள் சற்று அதிகமா இருக்குதோன்னு தோணுது...

அண்ணாச்சி: சுல்தான் பாய் நம்ம பசங்களை குறைச்சி எடை போட்டுடாதீங்க...அங்கே பாருங்க கலையரசன் முன்னாலே எடுத்து வச்சிக்கிட்டு இருக்கிற தட்டை...மொத்தமா ஆறு பேரு சாப்பிட வேண்டியதை அவன் ஒருத்தனே கைப்பற்றி இருக்கான்...குசும்பனைப் பாருங்க 100 மீட்டர் ஓட்டப்பந்தையத்தில் விசில் கொடுக்க காத்திருப்பது போல காத்திருக்கான்...எனக்கு பயமெல்லாம் எங்கே இதுவெல்லாம் அவங்க பசிக்கு ஈடு கொடுக்காமே போயிடுமோ என்கிறது தான்...
சுல்தான் பாயின் கருணைப்பார்வை....
கலையரசனின் கழுகுப்பார்வை....
சுல்தான் பாய்: (மனதுக்குள்) நாம தான் தப்பா கணிச்சிட்டோமோ..??


நேரம் மாலை :- 6-25
ரகுவரன் போல் ஒருவர் வருகிறார்..."அட நம்ம பினாத்தல் சுரேஸ்"...என்று சென்ஷி ஓடிவந்து மரியாதை செய்கிறார்....மூத்த பதிவர்கள் அவரைச்சூழ 'பெரிய பழம் தின்று கொட்டை போட்ட பதிவர் போல' என்று மற்றவர்கள் ஆர்வத்துடன் பார்க்க, அவர் தான் "கவிமடதளபதி" என்பதை அறிந்து புதுப்பதிவர்கள் டரியலாகிறார்கள்....



நேரம் மாலை :- 6-30
அண்ணாச்சி டிவி ஐப் போடுகிறார்..சன் டிவி ஓடப்போகிறதென்று குசும்பன் ஆவலுடன் டிவி முன் அமர, துபாய் சேனலுக்கு டியூன் பண்ணுகிறார் அண்ணாச்சி... அதில் ஏதோ ஒரு சேனலில் பாங்கு சொல்ல, குசும்பனும், கலையரசனும் பாங்கு சொல்லியாச்சி, சொல்லியாச்சு என்றபடி குசும்பன் சமோசாவை வாய்க்குள் அழுத்த, கலையரசன் தர்பூசணியை திணிக்க...ஏனையோர் இது சரியான பாங்கு இல்லை என்று அமைதிகாக்க இருவர் முகத்திலும் ஈ ஆடவில்லை...
நேரம் மாலை :- 6-35
சுபைர் தோற்றத்தில் திடீர் மாற்றம்..முகத்தை பவ்வியமாக வைத்துக்கொண்டு...தொப்பியை வைத்துக்கொள்கிறார்...( எங்கே தான் இந்த நடிப்பு கலையை கற்றியோ என்று குசும்பன்...சுபைரை பார்க்க, சுபைர் இன்னும் குழந்தை போல் முகத்தை வைத்த படி தயாராகிறார்...

நேரம் மாலை :- 6-36

எங்கும் சலசலச் சத்தங்கள், அண்ணாச்சியின் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் சத்தத்தில் கூட்டம் கப்சிப்...

நேரம் மாலை :- 6-40

எல்லோரும் அவரவருக்கு விருப்பமான உணவை கையில் எடுத்துக் கொள்கின்றனர்...

நேரம் மாலை :- 6-42

டி.வியில் இப்தார் நேரத்தை உணர்த்த பீரங்கி சத்தம் டமார் என்று ஒலிக்க...
ஸ்டார்ட்.... ( 10 நிமிடங்கள் சென்ஸார்)( திரைப்பட வரலாற்றில், திரைக்கதையில் சென்ஸாருக்கு இடம் ஒதுக்கியவன் நானாகத்தான் இருப்பேன்)

நேரம் மாலை :- 6-52
வடையுடன் வரவேண்டிய சுந்தர்...பழவகையுடன் வருகிறார்..

நேரம் மாலை :- 6-55
மக்ரீப் தொழுகை
நேரம் மாலை :- 7-00

அண்ணாச்சி நடுநிலை வகுக்க பதிவர்வட்டம் உருவாகிறது...அண்ணாச்சி மூலம் ஒவ்வருவராய் அறிமுகப்படலம்...( டாப் ஆங்கிலும் க்ளோசப்மாக அறிமுகப்படலம் நிறைவேற, ப்ராது விசாரனை ஆரம்பம்...



செந்தில் வேலன் மீது கொண்டு வரப்பட்ட ப்ராதுக்கும் பதிலளிக்கும் விதமாக,
செந்தில்வேலன்: பல கோடி செலவு செய்து எடுக்கப்பட்ட கந்த சாமி படத்தை கும்மியது தவறு..அது மற்றவர்களை படம் பார்க்க விடாமல் செய்கிறது.
பினாத்தல் சுரேஷ்:நல்லா இல்லைன்னா நல்லா இல்லைன்னு தானே சொல்ல முடியும்...
செந்தில்வேலன்: அட்லீஸ் அதை உடனே பண்ணாதீங்க அட்லீஸ் ஒருவாரம் விட்டாவது ஆரம்பிங்க...இது போல செய்றதை உடனே நிறுத்தச்சொல்லுங்க...

கீழைராஸா: மூணு நாளா கண்ணு முழிச்சி, ஏண்டா பேயறைஞ்சவன் மாதிரி இருக்கேன்னு ஆபிசுலே, வீட்டுலே , நண்பர்க கிட்டே எல்லாம் திட்டு வாங்கி..கஷ்டப்பட்டு பதிவெழுதுனா...ஜார்ஜ் புஸ், சதாம் ஹுசைன்னு பல பேர்லே வந்து கும்மிட்டு போறாங்களே அதை நிறுத்தச் சொல்லுங்க ... நாங்க நிறுத்துறோம்....
குசும்பன்: (மனதுக்குள்) ஐயய்யோ நம்ம தலையிலே கையை வைக்கிறாரே...?
( சில நிமிடங்கள் மௌனப்படமாக சண்டை தொடர்கிறது...)
சில ப்ராதுகளுக்குப் பின்...
சகபதிவர் செந்திநாதனுக்கு அமீரக பதிவர்களின் பங்களிப்பு மற்றும் ஒற்றுமை குறித்து அண்ணாச்சி ஓரிரு வார்த்தைகள் பேசுகிறார்..
அடுத்து...
கவிஞர் நாசரின் ( ராஜா கமால்) "பூத்து மகிழும் பூக்கள்" கவிதைத் தொகுப்பை வெளியிட, அதன்பிரதிகளை, அண்ணாச்சி, நண்பன் ஷாஜி, சுல்தான் பாய், சகோதரி ஜெஸீலா ஆகியோர் பெற்றுக்கொள்கின்றனர்...



நேரம் மாலை :- 8-30
பிரியாணி படலம்...சில நொடிகளில் ஹால் தயார் செய்யப்படுகிறது...பிரியாணி சிக்கனுடன் அடுத்த சென்ஸார்...
நேரம் இரவு :- 9-00
அரட்டை தொடர்கிறது...ஒரு சிலர் விடை பெறும் நேரம்...உறவின் உன்னதம் பிரிவில் தான் தெரியும் என்பார்கள்...கூப்பிடும் தூரத்தில் இருந்தாலும் விடைபெறும் வேளை எல்லோர் முகத்திலும் கவலை...
இன்னும் சிறிது நேரத்தில் எல்லோரும் விடை பெற்று விடுவர்..ஆனால் இந்த சிலமணி நேர திருவிழா எல்லோர் மனதிலும் மறக்க முடியாத பாகத்துள் பதிவாகி விடப்போவதென்னவோ மறுக்க முடியாத உண்மை....
-கீழை ராஸா பாலையிலிருந்து....

துபாய் பதிவர் மாநாட்டில் "சக்தி" இழந்த அண்ணாச்சி அவருக்கு "ஆப்பான" அய்யனார்...

இன்று எதை கிழித்தாய்...என்று யாரும் கேட்டு விடக்கூடாது என்பதற்காகவே தினம் கிழிக்கும் காலாண்டர் முன் நின்றேன்... தேதி கிழித்த மறு நொடியே என்னுள் மின்னல்...ஆம் இன்று பதிவர்கள் மாநாடு...மனம் குதித்தது... அண்ணாச்சி வருவாக, குசும்பன் வருவாக, சென்ஷி வருவாக, சூட்டிங் பார்க்க கிளம்பும் உற்சாகம் பல "பிரபலங்களை" காண மனம் விழைந்தது...


ஆறு மணி மாநாட்டிற்கு மூணு மணியே எழுந்து குளித்து...( லீவு என்பதால் சற்று அசந்து தூங்கிவிட்டேன், தேதி கிழித்ததும் அப்ப தான்)

ஜிப்பா, குர்தா அணிந்து கண்ணாடி பார்த்தேன்,ஒரு ஜோள்னா பை மட்டும் மிஸ்ஸிங்...இது வேளைக்கு ஆகாதென்று சட்டை அணிந்து இன் பண்ணிப்பார்த்தேன் "டை" மட்டும் கட்டினால் ஆபீஸ் போய் விடலாம்...சே இதுவும் ப்ளாப்...கடைசியாக டீசர்ட் அணிந்து நான் பண்ணிய அலம்பல்களைப்பார்த்து கொண்டிருந்த ரூம் மேட்கள் கொலை வெறியோடு பார்த்த படி எங்கே ராஸா கிளம்பிட்டீக என்றார்கள்...



"பதிவர்கள் மாநாடு இருக்குதுலா அதுக்கு தான்" நான்

"அதுக்கு நீங்க எங்கே போறீங்க"

"என்ன இப்படி கேட்கிறே.. நானும் பதிவர்தாண்டா"

"கிழிஞ்சது போ"

"டேய் நம்புடா நானும் பதிவரா ஃபார்ம் ஆயிட்டேண்டா..."

என்று கதறியும் எவனும் நம்ப வில்லை.

ஒரு வழியா கேமராவை தூக்கிகிட்டு வெளியே வந்து "பார்த்துக்கோ, பார்த்துக்கோ நான் பதிவர் மாநாடு போறேன்...இந்த ஏரியாவுலே நானும் ஒரு பதிவர் தான்" என்று உதார்விட அந்த நேரத்தில் அந்த பக்கம் சென்ற பக்கத்து குரோசரி மம்மது குட்டி, என்ன பதிவரோ...ன் மன்சிலரியா ...என்க பொத்திக்கினு காரை ஸ்டார்ட் செய்து கராமா நோக்கி செலுத்தினேன்.



மாநாட்டு திடல் கூட்டம் அலை மோதியது. (லீவு நாட்களில் மக்கள் பார்க்கிற்கு வருவது சகஜம் தானே)

இதில் எப்படி பதிவர்களை கண்டு பிடிப்பது...? பதிவர்களுக்கு ஒரு குடும்ப பாடல் இருந்தாலாவது "அன்பு மலர்களே" என்று குரல் கொடுக்க "நாளை நமதே" என்ற படி பதிவர் கூட்டம் ஓடிவரும்... அதுவும் மிஸ்ஸிங்...
என்ன செய்வது... நீண்ட யோசனைக்கு பின் ஒரு யோசனை தோன்ற சத்தமாக

"தமிழ்மணம், தமிழிஸ், தமிழ்வெளி, திரட்டி, பதிவர்வட்டம், மீத ஃபர்ஸ்ட்" என்று தொடர்ந்து கத்த ...

ஒரு மூலையிலிருந்து "ரிப்பீட்டு" என்று ஒட்டு மொத்தக் குரல் கேட்க அங்கே பார்த்தால் "பதிவர் வட்டம்" ( பின்னணியில் பலத்த சத்தத்துடன் ட்ரம்ஸ் மியூசிக்)


வட்டம் சற்று பெரிதாகத்தான் இருந்தது...அண்ணாச்சி வழக்கத்திற்கு மாறாக வெகு கேசுவல் ட்ரஸ்ஸில் அமர்ந்திருக்க சகாக்கள் அனைவரும் நிராயுத பாணியாய் (ஆயுதங்கள் தடை செய்யப்பட்டதால்)

இதை விட லேட்டாய் வேறு யாரும் வர முடியாது என்று மாநாடு குழு முடிவெடுக்க அண்ணாச்சி கண்ணசைத்து மாநாட்டை தொடங்கி வைத்தார்..
விழா ஆரம்பித்த மறு நொடியே அண்ணாச்சி மீது அய்யனார் கொலைவெறியோடு பாயந்தார்.
மேலும் சமீப காலமாய் அண்ணாச்சி போக்கில் ஏற்பட்ட மாற்றம் பற்றி பேச அண்ணாச்சி "சக்தி" இழக்க, அவருக்கு "ஆப்பானார்" அய்யனார்.

முதலில் ஆஃப் ஆன அண்ணாச்சி சுதாரித்து கொண்டு "நான் டி.ராஜேந்தர் காலத்திலிருந்தே பதிவெழுதுபவன்...அதுக்காக இன்னும் அவரைப்போலவே இருக்க இயலாது சிம்பு ரேஞ்ஜுக்கு நான் மாறுவது தான் என் வெற்றி பயணத்திற்கு காரணம் என்ற அண்ணாச்சி, உணர்ச்சியின் உச்ச கட்டமாய் தன்னை ஒரு "மொக்கை பதிவர்" என்று ஆணித்தரமாய் கூறியும் எவரும் நம்பத் தாயாராய் இல்லை...( அது உண்மை என்று தெரிந்தும்)



அன்பர் ஆசாத் படித்ததில் பத்து சதவீதம் பதிவாகவும் 90% பின்னூட்டமாகவும் எழுதப்பட வேண்டும் என்றார்...பாதி பதிவர்கள் அந்த நேரத்தில் தண்ணீர் குடித்து கொண்டிருந்தார்கள்...
அய்யனார் ரொம்ப சீரியஸ்ஸாக பல கருத்துக்களை கூற குன்னக்குடியின் வயலின் இசை சோக ராகமாய் பின்ணணியில் இசைக்க அவையெங்கும் மயான அமைதி...
அதை கலைக்கும் விதமாக "நீங்க ஏண்டே ப்ளாக் ஆரம்பிச்சீங்க"என்ற பீதியை கிளப்பும் கேள்வியை ஆரம்பித்து வைக்க விழா கலைகட்டியது...

குசும்பன் வேலையில்லாததால் ப்ளாக் ஆரம்பிச்சேன் என்று பலவருசங்களா அவர் மனசுலே தேக்கி வச்சிருந்த உண்மையை போட்டு உடைக்க மீ..டூ ...என்று அதை சிலர் ஆமோதித்தனர்.
அதிமேதாவிகளுக்கு சிம்ம சொப்பனமாகவே நான் பதிவரானேன் என்று அண்ணாச்சி சொல்ல, புது பதிவர்கள் டரியல் ஆனார்கள்...

இப்படி செல்ல தீடீரென்று விழுந்தது ஒரு அணுகுண்டு ..."ஒரு சிறந்த பதிவு எப்படி இருக்க வேண்டும் அதன் அளவு கோல் என்ன?" என்ற கிளியனூர் இஷ்மத்தின் தடாலடி கேள்வியாய்..."தெரியலையப்பா" என்று நாயகன் கமல் ரீதியில் அண்ணாச்சி நழுவ... அய்யனார் ஆக்ரோசமாய் பதில் சொன்னார், அதற்கு இஷ்மத் "புரியலையப்பா" என்ற அதே கமல் பாணியில் கேட்ட கேள்வியை வாபஸ் பெற்று கொண்டார்.

இடையே மாநாடு சல சலக்க சுல்தான் பாயும், படகு பதிவரும் மாநாட்டில் ஐக்கியமாக மாநாடு தொடர்ந்தது...

புதிய பதிவரின் ஆதரவை குறிவைத்து, புதிய பதிவர்களையும் பேச அனுமதிக்குமாறு குசும்பன் எடுத்து வைக்க,புதியவர், பிரபலப்பதிவர் என்ற வார்த்தைகளை அண்ணாச்சி அவை குறிப்பிலிருந்து நீக்கச் சொல்ல அவை ஆமோதித்தது...

இப்படி விழா சென்று கொண்டிருக்க பட்டிமன்ற பேச்சாளர் அப்துல் வாஹித்(அனானி நம்-1) எல்லோருக்கும் அதிர்ச்சியூட்டும் விதமாக உங்களில் சிறந்த இரண்டு பதிவுகளை குறிப்பிட்டு பேசுங்களேன் என்க, அவையில் நீண்ட பெருமூச்சு...



லியோ அவர்கள், நீங்கள் ஒருவருக்கொருவர் சாடிக்கொள்வதை நிறுத்துங்கள் நான் பதிவெழுதுகிறேன் என்க...

வெகுண்டெழுந்த குசும்பன், சிங்கை பதிவர்கள் சிங்கம் போல் சாடிக்கொள்கிறார்களே அவங்களை நிறுத்தச் சொல்லுங்க நாங்க, நிறுத்துறோம்....

மலாய் பதிவர்கள் மல்லுக்கட்டிக்கொள்கிறார்களே அவங்களை நிறுத்தச் சொல்லுங்க நாங்க, நிறுத்துறோம்....

என்ற ரீதியில் ஆரம்பிக்க "ஆத்தாடி" என்ற படி அண்ணன் யெஸ் ஆனார்.

"எதை எதிர்பாத்து எழுதுகிறோம்"என்று சுல்தான் பாய் கேட்க...மற்றவர்கள் படிக்க வேண்டுமென்ற நோக்கத்தில் என்ற வாதம் முன்னிறுத்தப்பட்டது.

எல்லோரும் உலக ஒற்றுமையைப் போல வலையுலக ஒற்றுமையை பற்றி பேச இனி எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற ஒற்றை வரி தீர்மானத்துடன் விழா இனிதே நிறைவுற்றது...

-ஒளிப்பதிவாளர் பாலை ராஸாவுடன்
கீழை ராஸா...கண் நியூஸ்

அமீரக தமிழ்ப்பதிவர் மாநாட்டில் கலந்து கொள்பவர்களுக்கான தடாலடி விதிமுறைகள்...

"தமிழ் பதிவர் உலக தந்தை அண்ணாச்சி அழைக்கிறார்..."???என்ற விளம்பரம் கண்டு (கொடுத்த காசுக்கு இவ்வளவு தான் கூவ(புகழ) முடியும்.. அண்ணாச்சி)மாநாட்டு வருவோருக்கான சில விதிமுறைகள் வகுத்தால் எப்படி இருக்கும் என்று என்ற ரோசனையின் பலன் தான் இந்த "கைடு" பதிவு.

  • மாநாட்டிற்கு ஆயுதம் கொண்டுவருவது முற்றிலுமாக தடை செய்யப்படுகிறது.முக்கியமாக பெல்ட் அணிந்து வருவதை தவிர்க்கவும்.மாலை,சால்வை பொன்ற "மிதவாத ஆயுதங்கள்" தகுந்த பரிசோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படும்.பழைய மாடல் செல்போன்கள் ஆயுதமாக பயன்படுத்தக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் புதிய மாடல் செல்போன்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.


  • மாநாட்டில் உணவு வழங்கப்படும் என்று நம்பி கொலைப்பட்டினியுடன் வந்து மயக்கம் போட்டு மாநாட்டில் பேசுபவர்கள் மீது பழியைப்போடாமல் எப்போதும் போல சாப்பிட்டு விட்டே வரவும்.


  • ஒரு வலைப்பூவிற்கு ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்பதால் மாநாட்டுத்திடலுக்கு லாரிகளில் வருவதை தவிர்க்கவும்.


  • பதிவர்கள் தங்கள் ப்ளாக் சம்மந்தப்பட்ட பேனர்கள், மற்றும் கொடிகள் கொண்ட விளம்பர பலகைகளை மாநாட்டுத்திடலுக்கு வெளியே வைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


  • மாநாட்டில் அவர் வாழ்க, இவர் ஒழிக கோஷங்கள் முற்றிலுமாக தடைசெய்யப்படுகிறது.


  • பதிவர்கள் பேசிமுடித்ததும் மீதஃபர்ஸ்ட், அருமை,கலக்கிட்டீங்க, ரிப்பீட்டு,மீ..டு, அவ்வ்வ்வ்வ் போன்ற ஒற்றை வார்த்தை கமெண்ட்களுக்கு கண்டிப்பாக அனுமதியில்லை.


  • மாஸ்க் அணிந்து வருபவர்கள் அனானிகளாக கணக்கில் எடுக்கப்படுவார்கள்.


  • தாயகம், மற்றும் வெளிநாடுகளில் இருந்து சிறப்பு அழைப்பாளர்களாக மாநாட்டிற்கு வரும் அமீரகம் சாரா பதிவர்கள்...தங்கள் சொந்த செலவில் வந்து, தங்கி உண்டு, ஊர் செல்ல வேண்டுமாய் அறிவுத்தப்படுவதுடன்...தாங்கள் ஊரிலிருந்து கிளம்பும் போதே அந்தெந்த பகுதிகளில் பேர் பெற்ற இனிப்பு வகைகளை வாங்கி வந்து மாநாட்டில் விநியோகித்து அமீரக பதிவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த வேண்டுமாய் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.அமீரகம் சாரா பதிவர்களை கவுரவிக்கும் விதமாய் "இலவசமாக" ஒரு லிட்டர் மசாஃபி வாட்டர் பாட்டில் வழங்கப்படும் என்பதால் வெளிநாட்டுப்பதிவர்களின் வருகை அதிகமாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

விதிமுறைத் தொகுப்பு:
அமீரக அனானிகள் முன்னேற்ற சங்கம்

வெளிநாட்டில் எதைத்தேடுகிறோம்…

வெளிநாட்டில் பொருள் தேடி வந்ததினால் நாம் இழந்தது எத்தனையோ... தேடிவந்த பொருள் கிடைத்தது ஆனால் தொலைத்து வந்த சந்தோசங்கள்..?


துபாய் தமிழ்த்தேர் இதழுக்காக கொடுக்கப்பட்ட "எதைத்தேடுகிறோம்" என்ற தலைப்பிற்கு நான் எழுதிய தேடல்கள்...

  • பந்தங்கள் சூழ
    வழியனுப்பப்பட்டு
    பறந்து வரும் முன்
    சொந்தங்கள் முன்
    தொலைத்த –அந்த
    சந்தோஷத்தை…..


  • கட்டிளம் காளையாக
    பாலைபுகுந்து இன்று
    கசக்கிப்பிழியப்பட்ட
    அடிமாடுகளாய்
    இழந்து நிற்கும்
    இளமையை…

  • KFC,சவர்மாவின்
    ருசியில் சிக்கி
    சவமாகிப்போன நாக்கில்
    அன்று ருசித்த
    அம்மாவின் சமையல்
    ருசியை…



  • வழியனுப்ப வாசல்
    வந்தவளின்
    விழி உகுத்த
    சிறு துளியில் -மனம்
    வலிக்க மறுநொடியே
    மறந்து வந்த
    இதயத்தை…


  • விடுமுறையில்
    வீடு செல்ல
    வழிப்போக்கன் போல்
    பார்த்த பிள்ளை
    புறப்படும் முன்
    புன்முறுக “அப்பா” என்க
    புல்லரித்து
    அள்ளி அனைத்து
    கொஞ்சிய
    அந்த நொடி
    பிஞ்சு ஸ்பரிசத்தை….

  • திருவிழாக்கள்,
    பெருநாட்கள் –
    உற்றார் புடைசூழக்
    கொண்டாட
    உளவியலாய் களையிழந்து
    மனமிங்கு தனிமையில்
    திண்டாட
    அலை, அலையாய்
    தொலைத்து நிற்கும்-அந்த
    இனிய தருணங்களை….

    பொருள் தேட என்றெண்ணி
    புறப்பட்டு வந்தோம்-இங்கு
    இருள் சூழ அருளிழந்து-மனம்
    புளுகி நின்றோம்
    தேடிவந்த பொருள் கிடைத்தும்-நாட்டில்
    தொலைத்து வந்த
    சந்தோசத்தை
    விட்ட இடம் விட்டு
    மற்ற இடத்தில்
    தேடுகிறோம் தேடுகிறோம்…

துபாயில் ஏ.ஆர் ரஹ்மான், மற்றும் “சுப்ரமணியபுரம்” திரைப்படக் குழுவினருக்குப் பாராட்டு, தமிழ்த்தேர் ஆண்டுவிழா காட்சிகள்.

வானலை வளர்தமிழ் அமைப்பின் தமிழ்த்தேர் இலக்கிய மாத இதழின் நான்காவது ஆண்டு விழா மற்றும் “சுப்ரமணியபுரம்” திரைப்பட குழுவினருக்கு பாராட்டு விழா, துபாய் சஃபா பார்க் அருகில் உள்ள எமிரேட்ஸ் இங்கிலீஸ் ஸ்பீக்கிங் பள்ளியின் உள்ளரங்கில் நடைபெற்றது.


விழாவின் சிறப்பு விருந்தினர்களாக முனைவர்.பர்வின் சுல்த்தானா, கவிஞர்.யுகபாரதி மற்றும் சுப்ரமணியபுர பட இயக்குனர் சசி, நடிகர் ஜெய், இசையமைப்பாளர் ஜேம்ஸ்வசந்தன், “கண்கள் இரண்டால்” பாடல் புகழ் பாடகர் பெல்லிராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பார்வையாளர்களின் ஒரு பகுதி...விழாவிற்கு சேர்த்தது மேலும் சுருதி...

வந்தே மாதரம் பாடலுக்கு குழந்தைகள் ஆடிய காட்சி பாடல் முடிந்ததும் விழாவின் சிறப்பு பகுதியாக ஆஸ்கார் புகழ் ஏ.ஆர்.ரஹ்மானை பாராட்டி கவுரவிக்கும் விதமாக அனைவரும் எழுந்து நின்று கரகொலி ஒலித்த காட்சி விழாவிற்கு சேர்த்தது மேலும் மாட்சி.

சங்கே முழங்கு பாடலுக்கான ஆடல்...
ஆண்டு விழா மலருடன் அனைவரும்...
மேடையில் பிரபலங்கள்
கவிஞர் யுகபாரதி மற்றும் முனைவர் பர்வின் சுல்த்தானா

சுப்ரமணியபுர பட இயக்குனர் சசி, மற்றும் நடிகர் ஜெய்

இசையமைப்பாளர் ஜேம்ஸ்வசந்தன் மற்றும் இயக்குனர் சசி
ஜேம்ஸ்வசந்த் நடத்திய "தமிழ்ப்பேசு தங்கக்காசு" பாணியில் நடத்திய
"தமிழோடு விளையாடு"
"த்வனி" அமைப்பு சார்பாக "தமிழ்த்தேரின்" படைப்பாளர்களை பதக்கம் அணிவித்து கௌரவித்த மாட்சிகளை படம் பிடித்த காட்சிகள்...

விழா அரங்கிற்கு வெளியே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த "ப்ரைம் மெடிகல் சென்டரின்" இலவச மருத்துவ முகாம்.

குடந்தை அசரப், திண்டுக்கல் சரவணன் மற்றும் திருச்சி சரவணக்குமாரின் நகைச்சுவை விருந்து மற்றும் ஜேம்ஸ்வசந்தின் தமிழோடு விளையாடு நிகழ்ச்சியுடன் விழா இனிதே நிறைவுற்றது.

விழா இரவு பதினொரு மணிவரை சென்றாலும் மக்கள் ஒரு இலக்கிய கலை விழாவைக் கூட்டம் கலையாமல் ரசித்துப் பார்த்த விதம், விழாவிற்கு கிடைத்த இரட்டைச்சதம்.

Related Posts with Thumbnails