வெற்றிடமான நட்புகாலம்..! (பள்ளிக்கூட நினைவுகள்..)

( நீண்ட நாட்களுக்குப் பின் வலைப்பூவில் மீண்டும்.... இம் முறை என் நினைவலைகளுடன்...)                

8வது வகுப்பு வரை,  நான் படிச்ச பள்ளி ஒரு Co-Education பள்ளி… பொம்பளை புள்ளைங்களோட சேர்ந்து படிச்சாலும் எப்ப பார்த்தாலும் பசங்களும், பொண்ணுங்களும் எலியும் பூனையுமா சண்டை போட்டுக்கிட்டு தான் இருப்போம்..!


இப்படித்தான் ஒரு முறை, ரெண்டு குரூப்பும் தாவரவியல் ப்ராஜக்ட்டுக்காக தனித்தனியே தோட்டங்கள் போட்டோம். ரெண்டுமே நல்ல செளிப்பா வளர்ந்துச்சு, நாங்களும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டு வளர்த்தோம்…ஒரு நாள் காலையிலே தண்ணி ஊற்ற போன, செடியெல்லாம் தோண்டிப்போடப்பட்டு, சேதாரப்படுத்தப்பட்டிருந்தது...!

டேய் இது நம்ம பொண்ணுங்களோட வேலை தாண்டானு, அவங்க தோட்டத்துலே புகுந்து கலவரம் பண்ணிவிட்டோம்...வழக்கமா பெண் புத்தி தான் “பின் புத்தின்னு “ சொல்லுவாங்க..! ஆன எங்க விசயத்துலே எங்க புத்தி ”பின் புத்தியா” போச்சி…!! ஆமாங்க எங்க தோட்டத்தை சேதப்படுத்தியது சில பெருச்சாளிகள்னு எங்களுக்கு அப்புறமாத்தான் தெரிய வந்தது..:-(

அதுக்கப்புறம் எங்க பகை இன்னும் அதிகமா போச்சு…! பேசணும் மன்னிப்பு கேட்கணும்னு நினைத்தாலும், அன்றைய படங்களின் ஹீரோயிஸத் தாக்கம், எங்களுள் துள்ளித்திரிந்த ஈகோ இவற்றால், இது தொடர்கதையாகி பல பேர் கடைசியில் சொல்லாமலேயே பிரிந்து சென்றோம்..!


போன வருசம், சுதந்திர தினத்துக்கு நான் படித்த பள்ளியிலேயே தேசிய கொடியேற்ற ஒரு வாய்ப்பு கிடைத்தது..! கொடியேற்றி சுதந்திர தின, நிகழ்ச்சி முடிந்து கிளம்பும் போது, சில பெண்கள் சிரித்தபடி என்னை நோக்கி வந்தார்கள், கையில் ஒரு குழந்தை, இடுப்பில் ஒரு குழந்தையுமாக இருந்த அவர்களை அடையாளம் காண நான் உற்று நோக்க வேண்டியிருந்தது… அட என் பள்ளித்தோழிகள்…!!


“ராஜாக்கான் நீ கொடியேற்றியது, எங்களுக்கெல்லாம் பெருமையாக இருந்தது..” என்று அவர்கள் பேச ஆரம்பிக்க, பழைய பகையை மறந்து ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருந்தோம்…ஒருவரை ஒருவர் எதிரியாக பார்த்துக் கொண்ட அதே பள்ளி வளாகத்தில்..!

இன்று பள்ளி நாட்களில் எடுத்த ஒரு புகைப்படத்தை பார்த்த போது எனக்கு இந்த சம்பவம் ஞாபகம் வந்தது…! இந்தப்படம் எடுக்கும் போது அப்படித்தான், பசங்க, பொண்ணுங்க தனித்தனியாகவும் எல்லோரும் ஒன்றாக சேர்ந்தும் புகைப்படம் எடுக்கப்பட்டது. சண்டையின் காரணமாக நாங்க பொண்ணுங்களோட ஒண்ணா எடுத்த அந்த படத்தை அப்போது பசங்க யாரும் பணம் கொடுத்து வாங்கவில்லை…பொண்ணுங்களும் அப்படித்தான்..! (அவங்க மட்டும் ஈகோவில் குறைந்தவர்களா..? என்ன?!! ) அன்று நாங்க ஒன்றாக எடுத்த அந்தப்படம் காலத்தால் பதிவு செய்யப்படாமலேயே காற்றோடு கரைந்து விட்டது…! L



இன்று ஒரு மணல்மேடு (திருவிழா), கல்யாண வீடு, ரயில்பயணம் இப்படி எங்காவது என் பள்ளித்தோழிகளை சந்திக்கையில் ஒரு புன்னகையுடன் பேசிக்கொள்ளத்தான் செய்கிறேன். ஆனால் அன்று வெறும் ஈகோவினால் இழந்த அந்தப்பருவத்து ”நட்புகாலம்” இன்றும் வெற்றிடமாகவே உள்ளது…!


இந்தப் புகைப்படம் உட்பட…!!

Related Posts with Thumbnails