விடைபெறுகிறார் அண்ணாச்சி..!

அன்று சூரிய கிரஹணம்...பிரபல ஜோதிடர்கள் கணித்தது போல் பூகம்பம், சுனாமி, என்று பூமியில் எவ்வித அசம்பாவிதமும் நிகழவில்லை என்றாலும் அரசியல் களத்தில் அன்று பெரும் சுனாமி நிகழ்ந்தது...




"அண்ணாச்சி இளம் மாறன் அரசியலிலிருந்து வெளியேறுவதாக அறிக்கை விட்டு விட்டானாம்..."

த.ப.க கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இடியாய் விழுந்தது அந்த செய்தி...
"எப்படி சாத்தியம் இப்ப அவன் தானே அரசியல் 'டாக் ஆப் டவுன்' சான்சே இல்லை..." மூத்த தலைவரில் ஒருவரான செந்தாமரை.

மீண்டும் உறுதி செய்யப்பட்டது.

"அவன் நாடகம் ஆடறான் அண்ணாச்சி, விடை பெறுகிறேன்னு போன எவனும் அரசியல் விட்டு போனதா சரித்திரமே இல்லை ...இதெல்லாம் அரசியல் ஸ்டெண்ட்"

"ஆமா அண்ணாச்சி, நாங்க பலமுறை உங்களுக்கு சொன்னோம் அவனுக்கு முன்னுரிமை கொடுக்காதீங்கன்னு...உங்களைப் போலவே அரசியல் பண்ணுறான்னு தலையிலே வச்சிக்கிட்டு ஆடுனீங்க இப்ப, அவன் ஆடுற ஆட்டத்தைப் பார்த்தா அவன் அரசியலில் உங்களை மிஞ்சிடுவான் போலிருக்கிறது..."

மூத்த தலைவர்கள் ஆளாலுக்கு பேச இளம் தலைவர்கள் அமைதிகாத்தனர்.

அண்ணாச்சி முகம் என்றுமில்லா இறுக்கத்தில் இருந்தது.

அண்ணாச்சி என்ற அருணாச்சலம் அரசியலில் ஒரு பழுத்த பழம். த.ப.க கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே கட்சியின் முக்கிய தலைவராக இருக்கும் அண்ணாச்சி இன்றைய அரசியல்வாதிகளின் முன்னோடி...சமீப காலத்தில் கட்சியில் சேர்ந்த இளமாறன் அவர் ஜாதி (என்ன மொக்கை சாதியோ) என்பதால் அவருக்கு அவன் மீது அலாதிப்பிரியம்.கட்சி மாநாட்டில் திடீரென்று கட்சியின் "சக்திமான்" என்று மணிமகுடம் சூட்ட , மூத்த தலைவர்கள் ஆடிப்போனார்கள்...இப்படி மூத்த தலைவர்கள் வயிற்றில் புளியை கரைத்துக்கொண்டிருக்கும் இளமாறன் இன்று அதன் உச்சக்கட்டமாக இந்த அரசியல் விலகல் அறிவிப்பின் பின்ணனி என்ன?

அண்ணாச்சியின் முகத்தில் இறுக்கும் கலையவில்லை...கூட்டத்தில் சத்தம் அதிகமானது...

" அண்ணாச்சி இப்படியே அமைதியா இருந்தா எப்படி...அவன் உங்க வாரிசா இருந்தாலும் பரவாயில்லை..எவனோ ஒருத்தன் அவனை வளர விடக்கூடாது."

"ஆமா அண்ணாச்சி, இப்படியே போனா இத்தன வருசமா உங்ககூடவே அரசியல் பண்ணுற நாங்க எங்கே போறது..? அவன் எதுக்கும் துணிஞ்சவன் 'எலக்சன் கமிசன்' மேலேயே குற்றம் சொல்லுறான்...எலக்ட்ரானிக்ஸ் "வாக்கு மிசினில்" குளறுபடின்னு அறிக்கை விடறான்...இதையே காரண வச்சி அவனை அரசியலை விட்டே துரத்தணும்"

"நான் அவன் கிட்டே பேசறேன்லே"

கூட்டம் கப்சிப் ஆனது...

கூட்டம் கலைந்தது...அண்ணாச்சியின் முகத்தில் இருக்கம் மட்டும் குறையவில்லை.

தொலைபேசியை எடுத்தார்...மறுமுனையில் இளமாறன் ...

"நான் அண்ணாச்சிலே.."

"சொல்லுங்க தலைவா.."

"நாம சந்திக்கணும்"

"எங்கே வர"

"வழக்கமான இடம் தான்"

கடற்கரை...காற்று வழக்கத்தை விட அதிகம் வீச அண்ணாச்சி தலையை கோதியபடி காரை விட்டு இறங்கினார்...சில முக்கியமான இடங்களுக்கு ஓட்டுநரை அழைத்து செல்வதில்லை...இப்போதும் அப்படிதான்...அண்ணாச்சி தனியாகவே வந்திருந்தார்.

இளமாறன் ஏற்கன்வே காத்திருந்தான்.

"வந்து ரொம்ப நேரமாச்சா"

"இல்ல அண்ணாச்சி இப்பதான்"

"அப்புறம் என்ன விசேசம்லே"

"எல்லாம் நீங்க சொன்ன மாதிரிதான் அண்ணாச்சி..அரசியலை விட்டு விலகுறதா அறிக்கை விட்டேன்...தொலைபேசி தொல்லை பேசியாயிடுச்சி, தொண்டர்கள் வீடு முன்னே வந்து மீண்டும் வரச்சொல்றாங்க...நான் உங்க உத்தரவுக்கு காத்திருக்கேன்..." இளமாறன்.

சிறிது யோசித்த அண்ணாச்சி, தொடர்ந்தார்...

"இன்னிக்கே அரசியல் விலகல் சம்பந்தமா உன் வீட்டில் பிரஸ் மீட்டிங் அரேன்ஞ் பண்ணு...மீட்டிங்க நடந்துக்கிட்டு இருக்கிறப்ப, சில ரவுடிங்க உன் வீட்டு முன்னாலே வந்து உன் வீட்டை தாக்குவாங்க...அரசியலை விட்டு ஓடிப்போகும்படி மிரட்டு வாங்க..

அப்ப சில கட்சிக்காரங்க வந்து அவங்களை துரத்துவாங்க...நீ அரசியலை விட்டு விலகினா உன் வீட்டு முன்னாலேயே தீக்குளிப்பேன்னு, பெட்ரோலை மேலெ ஊத்திக்குவாங்க...நீ ஓடிவந்து அவங்களை தடுக்கனும்

" உங்களை மாதிரி தொண்டர்களுக்காக நான் மீண்டும் அரசியலுக்கு வருகிறேன்னு" அங்களை கட்டிபிடிச்சபடி ஒரு அறிக்கை விடு அப்புறம் பாருலே உன் அரசியல் எழுச்சியை..."

பிரமிப்பு அகலாமல் அவரையே உற்று நோக்கி வந்த இளமாறன், அண்ணாச்சி நீங்க தெய்வம் அண்ணாச்சி...என்று காலில் விழப்போனவனை நீதாண்டா என் அரசியல் வாரிசு என்று கட்டிக்கொண்டார். அவரிடம் இருந்து மெதுவாய் விடுவித்துக்கொண்ட படி இளமாறன், "அண்ணாச்சி எதுக்கு இந்த நாடகம்..?" பயந்தபடி கேட்டான்...

"என்ன மாறா...அண்ணாச்சி அரசியலில் பழுத்து கொட்டை போட்டவன், கட்டிவா என்றால் வெட்டிக் கொண்டுவரும் தொண்டர் படையை கொண்டவன்...என்னடா ஒரு சின்னப்பயலுக்கு இவ்வளவு பண்ணுறேன்னு பார்க்குறியாளே...இந்த கூட்டமெல்லாம் அண்ணாச்சி இதே கெத்தோட இருக்கிறவரை தான்லே, உண்மையா பார்த்தா இங்கே யாரும் விசுவாசி இல்லை. எப்படா அண்ணன் காலியாவான் திண்னையைப் பிடிக்கலான்னு இங்கே பயங்கர போட்டி...இந்த பசங்க கிட்டே கட்சியை நம்பி ஒப்படைக்க முடியாது.

அப்ப தான் உன்னை பார்த்தேன் நான் அரசியலுக்கு வந்த புதுசுலே இருந்த அதே வேகம், அதே பரபரப்பு, அதே ஞானம்..அப்பவே முடிவு பண்ணினேன் இனி இந்த கட்சிக்கு நீதான் தலைவன் என்று... இருந்தாலும் நானே உன் கிட்டே இந்த பொறுப்பை தந்தா மூத்த தலைவர்கள் ஏத்துக்க மாட்டாங்க, அது தான் தொண்டர்களே உன்னை தலைவனாக ஏற்றுக்கொள்ள செய்யவே இந்த ஏற்பாடு.

இளம் தலைமுறை அரசியலுக்கு வந்து நல்லது பண்ணனுமென்று மேடைக்கு மேடை பேசறோம்... ஆனா கிழங்களான நாங்களே நாற்காலியை விட்டு அசையலைன்னா உன்னைப் போல பொறுப்புள்ள இளைஞர்களுக்கு எப்படி வாய்ப்பு கிடைக்கும்...?

உண்மையில் அரசியலிருந்து விடை பெற வேண்டியது நீ இல்லைலே...நான் தாம்ளே..."

என்ற படி தன் தோள் துண்டை இளமாறன் தோளில் போர்த்தி விட்டு நெஞ்சம் நிமிர்ந்து நடந்தார் அண்ணாச்சி..

அடுத்த நாள் தலைப்பு செய்திகளில்...

"மீண்டும் இளமாறன்...அரசியலிருந்து விடைபெறுகிறார் அண்ணாச்சி"

பி.கு:-

  • கதையில் வரும் சம்பவங்கள், கதாபாத்திரங்கள் அனைத்தும் 101% கற்பனையே..
  • ப்ளாக் காப்பி தடைச்சட்டம் 2009 படி காப்பியடிக்க தடை செய்யப்பட்ட வலைப்பூ இது..

"பிரபலப்பதிவர்" கீழை ராஸா என்ன சூப்பர் ஸ்டாரா?

என்ன கர்வம், என்ன திமிர், என்ன அழிச்சாட்டியம் இப்படி நினைத்த படி தான் இந்த பக்கத்திற்கு வந்திருப்பீங்க... ஒரு பிரபலம் என்றால் ஆயிரம் கல்லடிகள் படத்தான் செய்யும்...




ஜனாதிபதி கையால் விருதை வாங்கிய சேதி கேட்டு வீடு தேடி வந்த மீடியாவை அலட்சியமாகப்பார்த்து, விருது எனக்கு ஒன்றும் புதிதில்லை நான் கல்லூரியில் படிக்கும் போதே என்னோட படைப்புக்காக சாகித்திய அகடமி விருது பெற்றவன் என்ற படி ஜனாதிபதி அவார்டை கையில் வைத்துக் கொண்டு கொடுக்க வேண்டிய பேட்டியை இப்பவே லீக் பண்ணுறோமோ என்ற வருத்தம் இதை எழுத முற்படும் போது மனதில் தோன்றி மறைகிறது.

இருந்தாலும் நண்பர் "நட்புடன் ஜமால்" சில வாரங்களுக்கு முன் அழைத்த தொடர்பதிவிற்காக இந்த பிரபலப்பதிவரின் பேட்டி உங்கள் பார்வைக்கு...



1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

முகம்மது ராஜாக்கான் - என் பெயர்
"ராஸா" அன்பானவர்கள் அழைக்கும் பெயர்....

கீழக்கரை - என் ஊர்

"கீழை மாநகரம்" ஊருக்குச் செல்லப்பெயர்...

இரண்டும் இணைந்தது தான் "கீழை ராஸா" ( எல்லோரும் பலமா கைதட்டுங்க...இது தான் ஹீரோ (ஜீரோன்னு படிச்சிடாதீங்கப்பூ) அறிமுக காட்சி...)

2.கடைசியாக அழுதது எப்பொழுது?
"அழுகையை அழுது வடிப்பதை விட அடக்கி வைப்பதே கடினம்" என்ற கொள்கை உடையவன் நான்...

சில இதயக்கீரல்களின் போது...


"அடியே பெண்ணே நீ மட்டும் ஆறுதல் சொல்லவதாய் இருந்தால் அழுது கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறதே..." என்ற அந்த கிராமத்து ராஸாவின் வரிகளுக்கிணங்க, பிரியமானவளின் தோள் சாய்ந்து அழத்தோன்றும் இருந்தாலும் எனக்கு கடின வேலைகள் செய்யப்பிடிக்கும்.

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

என்னைப்போலவே என் எழுத்துக்களும் குண்டு குண்டாய் அழகாய் (அதிர்ச்சி ஆகிடாதீங்க எழுத்துக்கள் மட்டும்) இருப்பதாய் எல்லோரும் சொல்வார்கள்.

4.பிடித்த மதிய உணவு என்ன?

வாரம் முழுவதும் இயந்திரமாகவே மதிய உணவும் அமைவதால், விடுமுறை நாளான வெள்ளிக்கிழமை மதிய உணவே மனம் நிறைந்த மதிய உணவு.

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

நீயூட்டன் மூன்றாவது விதிக்கு நான் சரியான உதாரணம் எதிரே இருப்பவர் எப்படியோ அப்படியே என் எதிர் விசையும் இருக்கும்.

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

நல்லவேளை குளிக்கப் பிடிக்குமா என்று கேட்கவில்லை...

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

கண்கள்... அது தான் உண்மை பேசும்

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடித்தது...மற்றவர்கள் நிலையிலிருந்து யோசிக்கும் தன்மை...
பிடிக்காதது...அவ்வப்போது என்னுள் ஏற்படும் சோம்பல்....எப்போதாவது வரும் கோபம்...

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

தன்னை விட என்னை விரும்பும் " ராட்ஷச" அன்பு

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
என் தாய்...

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
வெளிர் வர்ணம்

12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
கணிணியை கண் இமைக்காமல்....காதில் ஏசியின் ஓசை...

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

14.பிடித்த மணம் ?

எல்லா "மண"ங்களையும் ஒருங்கே இணைத்து
எங்கள் இரு"மன"த்தை ஒன்றிணைத்த என் திருமணம்...

ரோஜாவின் மணம்...

மழைநேர மண்ணின் மணம்...

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
நான் ஒருவரை அழைக்கப்போவதில்லை... துபாய் பதிவர் மாநாட்டில் கலந்து கொண்ட அனைத்து பிரபல பதிவர்களையும் அழைக்கிறேன்.

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?
"நட்புடன் ஜமால்" அவர் பெயரே ஒரு பதிவுதான்..."நட்புடன்" என்ற பெயரை மட்டும் வைத்து கொண்டிராமல் அனைத்து புதுபதிவர் பதிவுகளிலும் சென்று அதை படித்து கமெண்ட் போட்டு பின்னூட்டங்கள் மூலமே அனைவர் மனங்களிலும் பதிந்தவர் அவர்...

17. பிடித்த விளையாட்டு?

அன்று - கிட்டி கம்பு(கிட்டி புல்)
இன்று - கிரிக்கெட்

18.கண்ணாடி அணிபவரா?

முன்னாடி இருப்பதை பார்ப்பதற்கு
கண்ணாடி அணியாவிட்டாலும்
பின்னாடி பிரச்சனைகள் வராமல் இருக்க
அவ்வப்போது கண்ணாடி அணிவதுண்டு...

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

எதார்த்தப்படங்கள்...

20.கடைசியாகப் பார்த்த படம்?

பசங்க...
21.பிடித்த பருவ காலம் எது?

வசந்தம் வீசிய, வீசும் எல்லாப்பருவமும்...

22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

என் பழைய டைரிகளை...

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

மாற்றம் ஒன்றே மாறாதது...

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

தென்றலின் வயலின்.... அருகில் வந்து அடிக்கப்படும் ஹாரன் ஒலி..

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

முதல் முதல் பள்ளி சென்ற போது அந்த ஆரம்பப்பள்ளி எனக்குத் தெரிந்த தூரத்திற்கு இன்று நான் பயணித்திருக்கும், அமீரகம், ஏமன், ஓமன், சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகள் கூட தெரிவதில்லை.

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

ஒரு சூப்பர் ஸ்டாரைப்பார்த்து கேட்கும் கேள்வியா இது...

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

நான் எட்டாவது படித்த போது நிகழ்ந்த என் தாயின் மரணம்..

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

அது தூங்கும் போது ஏனய்யா தட்டி எழுப்புறீங்க...

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

கோவா...சிங்கை

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

நான் நானாக...எப்போதும்...

31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

எனக்கு பொய் சொல்ல பிடிக்காது...( இதுவே ஒரு பெரிய பொய் தானேன்னு கமெண்ட் போட்டுடாதீங்க)

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

முட்கள் நிறைந்த பூஞ்சோலை...

தொட‌ர்ப‌திவுக்கு நான் அழைப்ப‌து,
அமீரக தமிழ் பதிவர்களே, மாநாட்டுக்கு வந்த பிரபலங்களே, மற்றும் அமீரக தமிழ் பதிவர்கள் குழும உறுப்பினர்களே....
வாருங்கள் பிரபலங்களே வந்து குமுறுங்கள்...

துபாய் பதிவர் மாநாட்டில் "சக்தி" இழந்த அண்ணாச்சி அவருக்கு "ஆப்பான" அய்யனார்...

இன்று எதை கிழித்தாய்...என்று யாரும் கேட்டு விடக்கூடாது என்பதற்காகவே தினம் கிழிக்கும் காலாண்டர் முன் நின்றேன்... தேதி கிழித்த மறு நொடியே என்னுள் மின்னல்...ஆம் இன்று பதிவர்கள் மாநாடு...மனம் குதித்தது... அண்ணாச்சி வருவாக, குசும்பன் வருவாக, சென்ஷி வருவாக, சூட்டிங் பார்க்க கிளம்பும் உற்சாகம் பல "பிரபலங்களை" காண மனம் விழைந்தது...


ஆறு மணி மாநாட்டிற்கு மூணு மணியே எழுந்து குளித்து...( லீவு என்பதால் சற்று அசந்து தூங்கிவிட்டேன், தேதி கிழித்ததும் அப்ப தான்)

ஜிப்பா, குர்தா அணிந்து கண்ணாடி பார்த்தேன்,ஒரு ஜோள்னா பை மட்டும் மிஸ்ஸிங்...இது வேளைக்கு ஆகாதென்று சட்டை அணிந்து இன் பண்ணிப்பார்த்தேன் "டை" மட்டும் கட்டினால் ஆபீஸ் போய் விடலாம்...சே இதுவும் ப்ளாப்...கடைசியாக டீசர்ட் அணிந்து நான் பண்ணிய அலம்பல்களைப்பார்த்து கொண்டிருந்த ரூம் மேட்கள் கொலை வெறியோடு பார்த்த படி எங்கே ராஸா கிளம்பிட்டீக என்றார்கள்...



"பதிவர்கள் மாநாடு இருக்குதுலா அதுக்கு தான்" நான்

"அதுக்கு நீங்க எங்கே போறீங்க"

"என்ன இப்படி கேட்கிறே.. நானும் பதிவர்தாண்டா"

"கிழிஞ்சது போ"

"டேய் நம்புடா நானும் பதிவரா ஃபார்ம் ஆயிட்டேண்டா..."

என்று கதறியும் எவனும் நம்ப வில்லை.

ஒரு வழியா கேமராவை தூக்கிகிட்டு வெளியே வந்து "பார்த்துக்கோ, பார்த்துக்கோ நான் பதிவர் மாநாடு போறேன்...இந்த ஏரியாவுலே நானும் ஒரு பதிவர் தான்" என்று உதார்விட அந்த நேரத்தில் அந்த பக்கம் சென்ற பக்கத்து குரோசரி மம்மது குட்டி, என்ன பதிவரோ...ன் மன்சிலரியா ...என்க பொத்திக்கினு காரை ஸ்டார்ட் செய்து கராமா நோக்கி செலுத்தினேன்.



மாநாட்டு திடல் கூட்டம் அலை மோதியது. (லீவு நாட்களில் மக்கள் பார்க்கிற்கு வருவது சகஜம் தானே)

இதில் எப்படி பதிவர்களை கண்டு பிடிப்பது...? பதிவர்களுக்கு ஒரு குடும்ப பாடல் இருந்தாலாவது "அன்பு மலர்களே" என்று குரல் கொடுக்க "நாளை நமதே" என்ற படி பதிவர் கூட்டம் ஓடிவரும்... அதுவும் மிஸ்ஸிங்...
என்ன செய்வது... நீண்ட யோசனைக்கு பின் ஒரு யோசனை தோன்ற சத்தமாக

"தமிழ்மணம், தமிழிஸ், தமிழ்வெளி, திரட்டி, பதிவர்வட்டம், மீத ஃபர்ஸ்ட்" என்று தொடர்ந்து கத்த ...

ஒரு மூலையிலிருந்து "ரிப்பீட்டு" என்று ஒட்டு மொத்தக் குரல் கேட்க அங்கே பார்த்தால் "பதிவர் வட்டம்" ( பின்னணியில் பலத்த சத்தத்துடன் ட்ரம்ஸ் மியூசிக்)


வட்டம் சற்று பெரிதாகத்தான் இருந்தது...அண்ணாச்சி வழக்கத்திற்கு மாறாக வெகு கேசுவல் ட்ரஸ்ஸில் அமர்ந்திருக்க சகாக்கள் அனைவரும் நிராயுத பாணியாய் (ஆயுதங்கள் தடை செய்யப்பட்டதால்)

இதை விட லேட்டாய் வேறு யாரும் வர முடியாது என்று மாநாடு குழு முடிவெடுக்க அண்ணாச்சி கண்ணசைத்து மாநாட்டை தொடங்கி வைத்தார்..
விழா ஆரம்பித்த மறு நொடியே அண்ணாச்சி மீது அய்யனார் கொலைவெறியோடு பாயந்தார்.
மேலும் சமீப காலமாய் அண்ணாச்சி போக்கில் ஏற்பட்ட மாற்றம் பற்றி பேச அண்ணாச்சி "சக்தி" இழக்க, அவருக்கு "ஆப்பானார்" அய்யனார்.

முதலில் ஆஃப் ஆன அண்ணாச்சி சுதாரித்து கொண்டு "நான் டி.ராஜேந்தர் காலத்திலிருந்தே பதிவெழுதுபவன்...அதுக்காக இன்னும் அவரைப்போலவே இருக்க இயலாது சிம்பு ரேஞ்ஜுக்கு நான் மாறுவது தான் என் வெற்றி பயணத்திற்கு காரணம் என்ற அண்ணாச்சி, உணர்ச்சியின் உச்ச கட்டமாய் தன்னை ஒரு "மொக்கை பதிவர்" என்று ஆணித்தரமாய் கூறியும் எவரும் நம்பத் தாயாராய் இல்லை...( அது உண்மை என்று தெரிந்தும்)



அன்பர் ஆசாத் படித்ததில் பத்து சதவீதம் பதிவாகவும் 90% பின்னூட்டமாகவும் எழுதப்பட வேண்டும் என்றார்...பாதி பதிவர்கள் அந்த நேரத்தில் தண்ணீர் குடித்து கொண்டிருந்தார்கள்...
அய்யனார் ரொம்ப சீரியஸ்ஸாக பல கருத்துக்களை கூற குன்னக்குடியின் வயலின் இசை சோக ராகமாய் பின்ணணியில் இசைக்க அவையெங்கும் மயான அமைதி...
அதை கலைக்கும் விதமாக "நீங்க ஏண்டே ப்ளாக் ஆரம்பிச்சீங்க"என்ற பீதியை கிளப்பும் கேள்வியை ஆரம்பித்து வைக்க விழா கலைகட்டியது...

குசும்பன் வேலையில்லாததால் ப்ளாக் ஆரம்பிச்சேன் என்று பலவருசங்களா அவர் மனசுலே தேக்கி வச்சிருந்த உண்மையை போட்டு உடைக்க மீ..டூ ...என்று அதை சிலர் ஆமோதித்தனர்.
அதிமேதாவிகளுக்கு சிம்ம சொப்பனமாகவே நான் பதிவரானேன் என்று அண்ணாச்சி சொல்ல, புது பதிவர்கள் டரியல் ஆனார்கள்...

இப்படி செல்ல தீடீரென்று விழுந்தது ஒரு அணுகுண்டு ..."ஒரு சிறந்த பதிவு எப்படி இருக்க வேண்டும் அதன் அளவு கோல் என்ன?" என்ற கிளியனூர் இஷ்மத்தின் தடாலடி கேள்வியாய்..."தெரியலையப்பா" என்று நாயகன் கமல் ரீதியில் அண்ணாச்சி நழுவ... அய்யனார் ஆக்ரோசமாய் பதில் சொன்னார், அதற்கு இஷ்மத் "புரியலையப்பா" என்ற அதே கமல் பாணியில் கேட்ட கேள்வியை வாபஸ் பெற்று கொண்டார்.

இடையே மாநாடு சல சலக்க சுல்தான் பாயும், படகு பதிவரும் மாநாட்டில் ஐக்கியமாக மாநாடு தொடர்ந்தது...

புதிய பதிவரின் ஆதரவை குறிவைத்து, புதிய பதிவர்களையும் பேச அனுமதிக்குமாறு குசும்பன் எடுத்து வைக்க,புதியவர், பிரபலப்பதிவர் என்ற வார்த்தைகளை அண்ணாச்சி அவை குறிப்பிலிருந்து நீக்கச் சொல்ல அவை ஆமோதித்தது...

இப்படி விழா சென்று கொண்டிருக்க பட்டிமன்ற பேச்சாளர் அப்துல் வாஹித்(அனானி நம்-1) எல்லோருக்கும் அதிர்ச்சியூட்டும் விதமாக உங்களில் சிறந்த இரண்டு பதிவுகளை குறிப்பிட்டு பேசுங்களேன் என்க, அவையில் நீண்ட பெருமூச்சு...



லியோ அவர்கள், நீங்கள் ஒருவருக்கொருவர் சாடிக்கொள்வதை நிறுத்துங்கள் நான் பதிவெழுதுகிறேன் என்க...

வெகுண்டெழுந்த குசும்பன், சிங்கை பதிவர்கள் சிங்கம் போல் சாடிக்கொள்கிறார்களே அவங்களை நிறுத்தச் சொல்லுங்க நாங்க, நிறுத்துறோம்....

மலாய் பதிவர்கள் மல்லுக்கட்டிக்கொள்கிறார்களே அவங்களை நிறுத்தச் சொல்லுங்க நாங்க, நிறுத்துறோம்....

என்ற ரீதியில் ஆரம்பிக்க "ஆத்தாடி" என்ற படி அண்ணன் யெஸ் ஆனார்.

"எதை எதிர்பாத்து எழுதுகிறோம்"என்று சுல்தான் பாய் கேட்க...மற்றவர்கள் படிக்க வேண்டுமென்ற நோக்கத்தில் என்ற வாதம் முன்னிறுத்தப்பட்டது.

எல்லோரும் உலக ஒற்றுமையைப் போல வலையுலக ஒற்றுமையை பற்றி பேச இனி எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற ஒற்றை வரி தீர்மானத்துடன் விழா இனிதே நிறைவுற்றது...

-ஒளிப்பதிவாளர் பாலை ராஸாவுடன்
கீழை ராஸா...கண் நியூஸ்

அமீரக தமிழ்ப்பதிவர் மாநாட்டில் கலந்து கொள்பவர்களுக்கான தடாலடி விதிமுறைகள்...

"தமிழ் பதிவர் உலக தந்தை அண்ணாச்சி அழைக்கிறார்..."???என்ற விளம்பரம் கண்டு (கொடுத்த காசுக்கு இவ்வளவு தான் கூவ(புகழ) முடியும்.. அண்ணாச்சி)மாநாட்டு வருவோருக்கான சில விதிமுறைகள் வகுத்தால் எப்படி இருக்கும் என்று என்ற ரோசனையின் பலன் தான் இந்த "கைடு" பதிவு.

  • மாநாட்டிற்கு ஆயுதம் கொண்டுவருவது முற்றிலுமாக தடை செய்யப்படுகிறது.முக்கியமாக பெல்ட் அணிந்து வருவதை தவிர்க்கவும்.மாலை,சால்வை பொன்ற "மிதவாத ஆயுதங்கள்" தகுந்த பரிசோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படும்.பழைய மாடல் செல்போன்கள் ஆயுதமாக பயன்படுத்தக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் புதிய மாடல் செல்போன்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.


  • மாநாட்டில் உணவு வழங்கப்படும் என்று நம்பி கொலைப்பட்டினியுடன் வந்து மயக்கம் போட்டு மாநாட்டில் பேசுபவர்கள் மீது பழியைப்போடாமல் எப்போதும் போல சாப்பிட்டு விட்டே வரவும்.


  • ஒரு வலைப்பூவிற்கு ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்பதால் மாநாட்டுத்திடலுக்கு லாரிகளில் வருவதை தவிர்க்கவும்.


  • பதிவர்கள் தங்கள் ப்ளாக் சம்மந்தப்பட்ட பேனர்கள், மற்றும் கொடிகள் கொண்ட விளம்பர பலகைகளை மாநாட்டுத்திடலுக்கு வெளியே வைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


  • மாநாட்டில் அவர் வாழ்க, இவர் ஒழிக கோஷங்கள் முற்றிலுமாக தடைசெய்யப்படுகிறது.


  • பதிவர்கள் பேசிமுடித்ததும் மீதஃபர்ஸ்ட், அருமை,கலக்கிட்டீங்க, ரிப்பீட்டு,மீ..டு, அவ்வ்வ்வ்வ் போன்ற ஒற்றை வார்த்தை கமெண்ட்களுக்கு கண்டிப்பாக அனுமதியில்லை.


  • மாஸ்க் அணிந்து வருபவர்கள் அனானிகளாக கணக்கில் எடுக்கப்படுவார்கள்.


  • தாயகம், மற்றும் வெளிநாடுகளில் இருந்து சிறப்பு அழைப்பாளர்களாக மாநாட்டிற்கு வரும் அமீரகம் சாரா பதிவர்கள்...தங்கள் சொந்த செலவில் வந்து, தங்கி உண்டு, ஊர் செல்ல வேண்டுமாய் அறிவுத்தப்படுவதுடன்...தாங்கள் ஊரிலிருந்து கிளம்பும் போதே அந்தெந்த பகுதிகளில் பேர் பெற்ற இனிப்பு வகைகளை வாங்கி வந்து மாநாட்டில் விநியோகித்து அமீரக பதிவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த வேண்டுமாய் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.அமீரகம் சாரா பதிவர்களை கவுரவிக்கும் விதமாய் "இலவசமாக" ஒரு லிட்டர் மசாஃபி வாட்டர் பாட்டில் வழங்கப்படும் என்பதால் வெளிநாட்டுப்பதிவர்களின் வருகை அதிகமாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

விதிமுறைத் தொகுப்பு:
அமீரக அனானிகள் முன்னேற்ற சங்கம்

Related Posts with Thumbnails