துயரத்தில் துபாய்…கேள்விக்குறிகளாகும் ஆச்சரியக்குறிகள்…

எங்கும் மயான அமைதி…எல்லோர் முகத்திலும் ஒரு கலவரம்…ஆட்டம் போட்ட எல்லோரும் அடக்கி வாசிக்கிறார்கள்…

“அந்த கம்பேனி போனி ஆயிடுச்சாமே…?”

“இந்த கம்பெனி இனி தாங்காதாமே ?”

“1000 கார்கள் ஏர்போட்டில் கிடக்கிறதாமே…”

“போன வாரம் மட்டும் 25 ஆயிரம் பேருக்கு வேலை இல்லையாமே…”

இப்படி வாய்க்கு வந்தபடி புரளி…

உண்மையில் துபாயில் இது நடக்கவில்லையா…?இதுவெல்லாம் பொய்யா ..?
என்றால் இல்லை என்று ஒரேயடியாக மறுக்க இயலவில்லை…வந்த புரளிகளின் எண்ணிக்கையில் மாற்றம் உண்டே தவிர இவை அனைத்தும் மிக கசப்பான உண்மை…

சென்ற வாரம் நண்பனொருவன் அவன் மனைவியிடம் அவன் கம்பெனி நிலையை வருத்தத்துடன் கூறி எப்போது வேலையை விட்டு தூக்குவாங்களோ தெரியலை என்ற போது, அவன் மனைவியும் அவனுக்கு ஆறுதல் கூறும் விதமாக, "கவலைப்படாதீங்க, நான் , உங்களுக்காக நேந்துக்கிறேன்"… எனக்கூற இவனோ நக்கலாக, "நேந்துக்கிறதா இருந்தா, துபாய்க்கு நேந்துக்கோ(வேண்டிக்கோ), உலகத்திற்கு நேந்துக்கோ "என்று கலாய்த்த நிகழ்வு கூறி சிரித்து கொண்டிருந்தான்…

இன்று அவனுக்கு வேலை இல்லை…

இன்னொருவன் தன் மனைவி தனக்கு PASSPORT வந்த சந்தோஷத்தை அவனிடம் கூற "உனக்கு PASSPORT வந்த நேரம் எனக்கு விசா கேன்சலாயிடும்" போல என்று நக்கலாக கூற, அப்புறம் ஒருவாரம் ரெண்டு பேருக்கும் இடையே “ ஆணியே புடுங்க வேண்டாம் என்கிற அளவிற்கு பிரச்சனை…

நான்கு மாதங்களுக்கு முன் நான்கைந்து வேலைகளை கையில் வைத்துக் கொண்டு எதை தேர்ந்தெடுக்களாம் என்று குழம்பியவர்கள் இன்று வேலையில்லாமல் வேதனைப்படும் அவல நிலை.

பீதியில் துபாய்…

உணவகங்களில் கூட்டமில்லை…கடைவீதிகளும், சாப்பிங் மால் களும் சற்றே வெறிச்சோடிய நிலை…கடை நிலை ஊழியருக்குக்கூட தேடிவந்து தந்த கடன் அட்டை, இன்று உயர் நிலையாருக்கும் எட்டாத நிலையில்…லோன்கள் வீடுதேடிவந்தது போக, இன்று லோ, லோ என்று அழைந்தாலும் கிடைக்காத நிலை…எதையும் திட்டமிட முடியா பீதியில் மக்கள்…இன்னும் எத்தனை நாட்கள் இது தொடரும்… தொடர்ந்தால் இங்கிருந்தோர் நிலை என்ன…?

பதினைந்து வயதில் பதினெட்டு வயதென்று பாஸ்போர்ட் எடுத்து வந்து துபாயில் உழைக்க ஆரம்பித்து, அக்கா, தங்கைகளுக்கு திருமணம் செய்து வைத்து, அவர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்து, உற்றார் உறவினர் யாராயினும் தன் சொந்தமென பல உதவிகள் செய்து, அம்மா ஆசைக்கு ஒரு வீடுகட்டி, தன் குடும்பம் கௌரவமாக வாழ தன்னை அர்பணித்து கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான மெழுகுதிரிகளின் நிலை என்ன?

கடன் உடன் வாங்கி ஊருக்கு பெட்டி கட்டி ஏர்போட்டில் சொந்தபந்தம் புடை சூழ வரவேற்கப்பட்டு, அபிதாபியா,சார்ஜாவா என்று வெள்ளையும் சுளையுமாக, வருகிற போகிறவனிடம் உதார் விட்டபடி ஊரில் வலம் வந்த நாட்கள் இனி வெறும் கனவாகி விடுமோ…? வேலையிழந்து ஊர் சென்றால் நிலை என்ன…?

சொந்த மண்னை விட்டு பிரியும் போதெல்லாம் கண்ணில் நீர் கோர்த்து இதயம் ரணமாகுமே.. இப்போது சொந்த மண்ணே கதி என்று போக இதயம் ஏன் கனக்கிறது…?

மண்ணளவிற்கு கூட மதிப்பில்லாமல் ஊரில் திரிந்த உதவாக்கரைகளை பொன்னளவிற்கு மதிக்க வைத்த புண்ணிய பூமி என்பதாலா…?

வேலை யில்லாதவன் என்று வெந்த புண் வேல் பாய்ச்சிய சமுதாயத்தின் முன் இவன் விவரம் தெரிந்தவன் என்று விளங்க வைத்த விந்தை பூமி என்பதாலா..?

எதோ இணை பிரியாத பந்தம்… உறவு சொல்ல இயலாத ஊமையின் நிலை…

போய் வருகிறேன் துபாய் போய் வருகிறேன்…என்று கை காட்டி விட்டு கிளம்ப முடியுமா…கார் லோன், பெர்சனல் லோன், கடன் அட்டை , இப்படி துபாயில் சேர்த்த (!!??) சொத்திற்கு வழி என்ன…? விழி பிதுங்கிய நிலையில் வேதனையுடன் நிற்போருக்கு வழிதான் என்ன?




1950 களில் “கற்காலத்தில் இருந்த துபாய், நொடிப்பொழுதில் “ULTRA MODERN” நாகரீகத்திற்கு நிறம்மாறி

“BURJ DUBAI”(புர்ஜ் என்றால் பெருமை)…உலகின் உயர்ந்த கட்டிடம்…!
“DUBAI MALL” உலகின் மிகப்பெரிய சாப்பிங் மால்…!
“BURJ AL ARAB” உலகின் முதல் 7 நட்சத்திர விடுதி…!
“PALM ISLAND” ( பனை மர வடிவத்தீவு) எட்டாவது உலக அதிசயம்…!


என்று உலக மக்களை ஆச்சரியக்குறியில், பார்க்க செய்த துபாய் இன்று…? இங்குள்ளோரின் எதிர்காலமென்ன..?, இவர்கள் இன்னும் எத்தனை நாட்கள் இங்கு..? என்ற கேள்விக்குறிக்கு தள்ளப்பட்டிருக்கிறது…

எது எப்படியோ வீட்டு வாடகை, நகைகடை கூட்டம், KFC மோகம், PIERRE CARDIN, TED LAPIDS 75% SALE, 10க்கு 10 பத்து அறையில் பன்ணிரண்டு பேர், இவை எவற்றிலும் ஒரு மாற்றமும் இல்லை…இருந்தாலும்…


எங்கும் மயான அமைதி…எல்லோர் முகத்திலும் ஒரு கலவரம்…ஆட்டம் போட்ட எல்லோரும் அடக்கி வாசிக்கிறார்கள்…

நண்பன் சொன்னது போல், துபாய்க்கு நேந்துக்குங்க(வேண்டிக்குங்க) விரைவில் மாற்றம் வரலாம்.

கவின்மிகு கீழக்கரை

கீழக்கரை...இராமநாதபுர மாவட்டத்தில் அமைந்த வரலாற்று சிறப்பு மிக்க பழம்பெரும் கடற்கரை நகரம். செத்தும் கொடை கொடுத்த சீதக்காதி வாழ்ந்து மறைந்த சீர்மிகும் ஊர்...அந்த கடற்கரை நகரின் சில கவின்மிகு காட்சிகள் உங்கள் பார்வைக்கு...


அன்பாய் வரவழைக்கும் அலங்கார வாயில்

தோகை விரித்தழைக்கும் தோரண வாயில்

பசுமைக்குடைப்பாதை
கடலும், கலங்கரை விளக்கமும்


காலார நடக்க கடல் வழிப்பாதை

மதிமயக்கும் மாலை வேளை
மாலை நேர மாயாஜாலம்

சூரிய பந்தின் சீரிய தோற்றம்

Related Posts with Thumbnails