ஷேக் சையத் பெரிய பள்ளி – அபுதாபி

 

ஷேக் சையத் பெரிய பள்ளி – அபுதாபி

 


அமீரகத்தின் மிக பிரமாண்ட பள்ளி என்ற பெருமையுடன் இப்பள்ளி, அமீரகத்தின் தலை நகரான அபுதாபியில் அமைந்துள்ளது.41,000 நபர்கள் ஒரே நேரத்தில் தொழுக்கூடிய வகையில் கட்டப் பட்டிருக்கும் இந்தப்பள்ளி உலகின் ஆறாவது பெரிய பள்ளி என்ற பெருமையை பெற்றது.

 


வெள்ளை மார்பிள்களில் தக தகவென ஜொலிக்கும் இந்தப் பள்ளி, 82 Dome களையும், 1000 தூண்களையும் கொண்ட 2.5 லட்சம் சதுரடியில்,  கட்டப்பட்ட பிரமாண்ட கட்டிடம்.185 ஏக்கர் பரப்பளவில் விரிந்து கிடக்கும் வளாகம்.



61 ஆயிரம் சதுரடியில் கையால், 1200 கைத்தறியாளர்களால் நெய்யப்பட்ட மிக பிரமாண்ட கார்பட் விரிப்பு இதன் சிறப்புகளில் ஒன்று.

 


இறைவனின் 99 திருநாமங்களும் மேற்குப்புற சுவற்றில் பதியப்பட்டு, மார்பிள் வேலைப்பாடுகளும், விளக்கு வேலைப்பாடுகளும் இணைந்து ஜொலிக்கும் அழகு பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கிறது.

 



பிரமாண்ட பளிங்கு தூண்களும் மதில்களில் பரந்து, பதிந்து கிடக்கும் மார்பிள் செடிகளும் ”கொள்ளை அழகு” என காண்போரை மெய் மறந்து உச்சரிக்க வைக்கிறது.

 


இதில் ஆண் பெண் என்று மதவேறு பாடு இல்லாமல் எல்லோரும் உள் செல்ல அனுமதிக்கப் படுகிறார்கள்… அரைகுறை உடைகளில் வரும் ஆண், பெண்கள் மட்டும் கந்தூரா, மற்றும் அபயா (அரபிய உடைகள்) அணிந்து உள் செல்ல வழியுறுத்தப் படுகிறார்கள்…

 


சில நம்மூர் (இந்திய) பெண்கள் தானாகவே சென்று அபயாவை வாங்கி அணிந்து, தாவணியால் மறைக்கப்பட்ட அரைகுறை முகத்தை செல்பி எடுத்தும் மகிழ்கிறார்கள்…

 


அழகான, பிரமாண்ட தொங்கும் விளக்குகள், தங்கமுலாம் பூசிய விளக்குகள் என்று விளக்கொளியில் இப்பள்ளி மின்னுகிறது.

 



பள்ளியின் ஒழு செய்யும் இடமும், கழிவறையும் , Prayer hall லிருந்து கிட்ட த்தட்ட 500 அடி இடைவெளியில், கீழ் தளத்தில்  அமைந்துள்ளது…இதை நடந்து கடக்க ஒருவருக்கு 6 நிமிடங்கள் ஆகும். தொழுகை ஆரம்பிக்கப்பட்டால் ஜமாத்துடன் சேர ,இதில் சென்று ஒழு செய்து விட்டு போக முடியாது என்பதே இதன் குறைபாடு.

 





ஷேக் சையத் எனும் அமீரகத்தின் முன்னோடி ஆட்சியாளரின் நினைவாக கட்டப்பட்ட இந்த பள்ளி வளாகத்திலேயே அவருடைய அடக்கஸ்தலமும் அமைந்துள்ளது.

 



வாழ்வில் ஒரு முறையேனும் பார்க்க வேண்டிய ஒரு பிரமாண்ட பள்ளிகளில் ஒன்றிது. அமீரகத்திற்கு பயணம் செய்ய வாய்ப்பு கிடைப்பவர்கள் மிஸ் பண்ணாமல் கண்டிப்பாக பார்க்க வேண்டிய பள்ளி இது.

பழைய குத்பா பள்ளி - கீழக்கரை

 கீழைராஸாவின்

நான் தரிசித்த வணக்கஸ்தலங்கள் 

பழைய குத்பா பள்ளி

கீழக்கரை-இராமநாதபுரம்-இந்தியா

கீழக்கரையின் மிகத் தொன்மையான பள்ளி, கிட்ட த்தட்ட 1000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட தாக வரலாற்று ஆய்வாளர்களால் கணிக்கப்படும், இப்பள்ளி, 700 ஆண்டுகளுக்கு முன்பு மொராக்கன் நாட்டைச் சார்ந்த யாத்திரிகர் இபுன் பதூதா, தன் தென்னிந்திய பயணத்தில், பத்தன் நகரில் தான் கண்ட கல்லால் ஆன பள்ளி என்று தன் பயணநூலில் குறிப்பிட்டது, இந்தப் பள்ளியைத் தான் என்று வரலாறு உறுதி செய்கிறது.



கல்லினால் கட்டப்பட்ட இந்தப் பள்ளி, தென்னிந்தியாவின் திராவிடக் கட்டிடக்கலையைச் சார்ந்து கட்டப்பட்ட தாகும்.தூண்களின் வடிவமைப்பு, ரிதம், டெகரேசன் எல்லாம் பார்ப்பதற்கு கோயிலை ஞாபகப் படுத்தினாலும். எதிலும் உருவங்கள் ஒன்று கூட இல்லாமல், அனைத்து தூண்களும்,முத்திரைகளும், டெகரேசன் வேலைகளும் செய்யப்பட்டுள்ளது..இதன் சிறப்பம்சம் ஆகும்.


அரபியன் கட்டிடக்கலை சார்ந்த மினரட், டோம்களை உட்படுத்தி திராவிட கட்டிடக்கலை சார்ந்து உருவங்கள் பிரதிபலிக்காமல் கட்டப்பட்டுள்ள இந்தப் பள்ளி, வரலாற்றில் ஆயிரம் வருடங்களுக்கு முன்பான பள்ளிகளுக்கான முகவரி என்றால் அது மிகையில்லை.



சில வருடங்களுக்கு முன் இந்தப்பள்ளியின் முகப்பு மற்றும் சில பகுதிகள் புதுப்பித்தல் வேலைகளில் மாற்றி அமைக்கப் பட்டாலும், வரலாற்றை சிதைத்து விடாமல் உள்பள்ளி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகள் போற்றி பாதுகாப்பது நிச்சயம் பாராட்ட த்தக்கது.


ஒரு வருட த்திற்கு முன்பு ஒரு பயணத்தின் போது சீர்காழி பக்கம் ஒரு பள்ளிக்கு சென்றிருந்தேன்… அங்கு ஒரு கம்பீரமான பழைய பள்ளி ஒன்று இருந்த து.. பார்த்து விட்டு வரும் போது அமர்ந்திருந்த ஜாமாத்தார்களிடம் இது எத்தனை வருடப் பள்ளி என்றேன்..? ஓட்டு மொத்த தினரும் பெருமை பொங்க… ”தம்பி இது நூறு வருட பள்ளி ” என்றார்கள்…

என்னை விசாரித்த போது “ நான் ஆயிர வருட பள்ளியைக் கொண்ட ஊரிலிருந்து வருகிறேன்” என்றேன்… ஒரு நிமிடம் வாயடைத்து போனவர்கள், முகமலர வரவேற்று உபசரித்தார்கள்…



அப்படியாக இந்தப் பள்ளியை தாய் ஜாமத்தாக கொண்டவன் என்ற முறையில் எனக்கு ஒரு கௌரவம் உண்டு…

அதனால் தான் உலகெங்கும் நான் தரிசித்த, தரிசிக்க இருக்கும் பள்ளிகளின் வரிசையை இதனைக் கொண்டு ஆரம்பித்திருக்கிறேன்.

வெற்றிடமான நட்புகாலம்..! (பள்ளிக்கூட நினைவுகள்..)

( நீண்ட நாட்களுக்குப் பின் வலைப்பூவில் மீண்டும்.... இம் முறை என் நினைவலைகளுடன்...)                

8வது வகுப்பு வரை,  நான் படிச்ச பள்ளி ஒரு Co-Education பள்ளி… பொம்பளை புள்ளைங்களோட சேர்ந்து படிச்சாலும் எப்ப பார்த்தாலும் பசங்களும், பொண்ணுங்களும் எலியும் பூனையுமா சண்டை போட்டுக்கிட்டு தான் இருப்போம்..!


இப்படித்தான் ஒரு முறை, ரெண்டு குரூப்பும் தாவரவியல் ப்ராஜக்ட்டுக்காக தனித்தனியே தோட்டங்கள் போட்டோம். ரெண்டுமே நல்ல செளிப்பா வளர்ந்துச்சு, நாங்களும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டு வளர்த்தோம்…ஒரு நாள் காலையிலே தண்ணி ஊற்ற போன, செடியெல்லாம் தோண்டிப்போடப்பட்டு, சேதாரப்படுத்தப்பட்டிருந்தது...!

டேய் இது நம்ம பொண்ணுங்களோட வேலை தாண்டானு, அவங்க தோட்டத்துலே புகுந்து கலவரம் பண்ணிவிட்டோம்...வழக்கமா பெண் புத்தி தான் “பின் புத்தின்னு “ சொல்லுவாங்க..! ஆன எங்க விசயத்துலே எங்க புத்தி ”பின் புத்தியா” போச்சி…!! ஆமாங்க எங்க தோட்டத்தை சேதப்படுத்தியது சில பெருச்சாளிகள்னு எங்களுக்கு அப்புறமாத்தான் தெரிய வந்தது..:-(

அதுக்கப்புறம் எங்க பகை இன்னும் அதிகமா போச்சு…! பேசணும் மன்னிப்பு கேட்கணும்னு நினைத்தாலும், அன்றைய படங்களின் ஹீரோயிஸத் தாக்கம், எங்களுள் துள்ளித்திரிந்த ஈகோ இவற்றால், இது தொடர்கதையாகி பல பேர் கடைசியில் சொல்லாமலேயே பிரிந்து சென்றோம்..!


போன வருசம், சுதந்திர தினத்துக்கு நான் படித்த பள்ளியிலேயே தேசிய கொடியேற்ற ஒரு வாய்ப்பு கிடைத்தது..! கொடியேற்றி சுதந்திர தின, நிகழ்ச்சி முடிந்து கிளம்பும் போது, சில பெண்கள் சிரித்தபடி என்னை நோக்கி வந்தார்கள், கையில் ஒரு குழந்தை, இடுப்பில் ஒரு குழந்தையுமாக இருந்த அவர்களை அடையாளம் காண நான் உற்று நோக்க வேண்டியிருந்தது… அட என் பள்ளித்தோழிகள்…!!


“ராஜாக்கான் நீ கொடியேற்றியது, எங்களுக்கெல்லாம் பெருமையாக இருந்தது..” என்று அவர்கள் பேச ஆரம்பிக்க, பழைய பகையை மறந்து ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருந்தோம்…ஒருவரை ஒருவர் எதிரியாக பார்த்துக் கொண்ட அதே பள்ளி வளாகத்தில்..!

இன்று பள்ளி நாட்களில் எடுத்த ஒரு புகைப்படத்தை பார்த்த போது எனக்கு இந்த சம்பவம் ஞாபகம் வந்தது…! இந்தப்படம் எடுக்கும் போது அப்படித்தான், பசங்க, பொண்ணுங்க தனித்தனியாகவும் எல்லோரும் ஒன்றாக சேர்ந்தும் புகைப்படம் எடுக்கப்பட்டது. சண்டையின் காரணமாக நாங்க பொண்ணுங்களோட ஒண்ணா எடுத்த அந்த படத்தை அப்போது பசங்க யாரும் பணம் கொடுத்து வாங்கவில்லை…பொண்ணுங்களும் அப்படித்தான்..! (அவங்க மட்டும் ஈகோவில் குறைந்தவர்களா..? என்ன?!! ) அன்று நாங்க ஒன்றாக எடுத்த அந்தப்படம் காலத்தால் பதிவு செய்யப்படாமலேயே காற்றோடு கரைந்து விட்டது…! L



இன்று ஒரு மணல்மேடு (திருவிழா), கல்யாண வீடு, ரயில்பயணம் இப்படி எங்காவது என் பள்ளித்தோழிகளை சந்திக்கையில் ஒரு புன்னகையுடன் பேசிக்கொள்ளத்தான் செய்கிறேன். ஆனால் அன்று வெறும் ஈகோவினால் இழந்த அந்தப்பருவத்து ”நட்புகாலம்” இன்றும் வெற்றிடமாகவே உள்ளது…!


இந்தப் புகைப்படம் உட்பட…!!

வாழ்வில் தொடர் தோல்வி அடைந்தோருக்கு சச்சின் ஒரு பூஸ்ட்...:-)



சச்சின் ஒரு சகாப்தம்

99 முறை பெற்ற வெற்றியை கூட 100வது வெற்றியின் மூலம் தான் தக்க வைத்த்துக் கொள்ள முடிகிறது..! இந்த வாழ்க்கை ஓட்டத்தில் நம் வேகம் குறைந்தால் ஒரு பய மதிக்க மாட்டான், என்பதற்கு இதை விட என்ன சாட்சி வேண்டும்..? சச்சின் சாதிச்சிட்டேப்பா...:-)

சச்சின் நூறாவது நூறு அடித்த மறு நொடி , என் முகப்புத்தக சுவற்றில் நான்எழுதியது ஸ்டேடஸ் இது.

ஒவ்வொரு சாதனையாளனுக்கு பின்னும், சொல்ல முடியாத எத்தனையோ வேதனைகள், சோதனைகள், அவமானங்கள், விம்மிக்கொண்டிருக்கும்..சச்சின் படைத்த சாதனையும் அப்படித்தான்...இன்று உலகமே அவரை ஒருசாதனையாளராக கொண்டாடிக் கொண்டிருந்தாலும் அவர் வாழ்வின் ஆரம்ப நாட்களோ மிகவும் சோதனை நிறைந்தது.

· 1988 - பத்தாவது தேர்வில் தோல்வி.

· 1989 – இந்திய அணியில் இடம் பெற்று ஆடிய முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளில் 0 ரன்கள்.

.இப்படித்தான் சச்சினின் ஆரம்ப நாட்கள் இருந்தன. 1989 ஆண்டு அணியில் இடம் பெற்றிருந்தாலும், ஒருநாள் போட்டிகளில் அவர் முதல் சத்த்தை அடித்தது 1994-ல் தான். ஒரு சதத்தை எட்ட அவர் ஆறு வருடங்கள் போராட வேண்டியிருந்தது.

தொடர் தோல்விகள் அவரை பதப்படுத்தியதே ஒழிய பயம் கொள்ளச் செய்யவில்லை. அதன் பின் படிப்படியாக மின்ன ஆரம்பித்தார்...கிரிக்கெட் உலகின் மொத்த பார்வையும் அவர் மீது திரும்பியது.

நான் ஆடுகளத்திற்குள் நுழையும் போது, நான் தான் முக்கியமானவன் என்று எண்ணிக் கொள்வேன். என் கையில் தான் இந்த ஆட்டம் இருக்கிறது. அணியை தூக்கி நிறுத்த வேண்டியது என் கடமை. என்று என்னை நானே தயார் செய்து கொள்வேன்...

என் நினைவில் நிற்கும் சச்சினின் ஒரு பேட்டி இது.. இதை சொன்ன போது சச்சின், இந்திய அணியில் சொல்லிக்கொள்ளும் படி பெரிய ஆள் ஒன்றும் இல்லை... ஆனால் அந்த நம்பிக்கை நாளாக நாளாக உண்மையானதென்னவோ மறுக்க முடியாத உண்மை.

சச்சினின் சாதனைகளை பட்டியலிட்டு சென்றால், இந்த கட்டுரை 100 பகுதிகளைத் தாண்டிப் போகும். உலக கிரிக்கெட் வரலாற்றில் ஒர் இந்தியனாக தனக்கென்று ஒர் இடத்தை தக்க வைத்துக் கொள்வதே பெரும் சாதனை என்ற நிலையில், அந்த பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்து, தலைக்கனமில்லாத ஒரு சிறந்த வீரர் சச்சின் என்றால் மிகையில்லை.

சச்சின் வெற்றியாளராக மிளிர்ந்த வேளை கூட, ஊடகங்கள் அவரை விடவில்லை. அவரை இட்டுக்கட்டி எழுதி, ஒரு கேவலமான விளம்ப்ரங்களைத் தேடிக் கொண்டது. அதில் ஒன்று, அவர் சதம் அடித்தால், இந்திய அணி தோற்று விடும் என்ற அறிவியல் உண்மை. ஆனால் உண்மை அப்படி இல்லை.

ஒரு நாள் போட்டிகளில் ச்ச்சின் அடித்த 49 சதங்கள் நிறைந்த போட்டிகளில் இந்திய அணி 34 முறை வெற்றிகளையும், 13 முறை தோல்விகளையும், இரண்டு டிராக்களையும் பெற்றுள்ளது. அதாவது சச்சின் சதமடித்த 70% போட்டிகளில் இந்தியா மகத்தான வெற்றியை பெற்றது என்பதே, புள்ளி விபரம்.

இது போன்று டெஸ்ட் தொடர்களில் இதுவரை, சச்சின் அடித்த 51 சதங்கள் நிறைந்த போட்டிகளில் இந்திய அணி, 20 வெற்றிகள், 11 தோல்விகள் மற்றும் 20 டிராக்களையும் பெற்றுள்ளது. அதாவது சச்சின் சதமடித்த 78% போட்டிகளில் இந்தியா தோல்வியை தவிர்த்துள்ளது.

இதையே சச்சின் சதமடித்தால் இந்தியாவிற்கு தோல்வி தான் என்று ஊடகப் பகுத்தறிவாளர்கள்(!!?) பரப்பி வருவது...உண்மைக்குப் புறம்பானது.என்பதை எத்தனை பேர் அறிவர்..?

அதிலும் 100வது சதத்தை அடிக்க, அவருக்கு ஊடகங்கள் கொடுத்த நெருக்கடி கொஞ்சம் நஞ்சமில்லை...சச்சின் அவ்வளவு தான்..அவரால் இந்த சாதனையை நிகழ்த்த இயலாது...இப்படி அவரை மனதளவில் பாதிக்க முயன்றோர் ஏராளம்..கடைசியில் அது நிகழ்ந்து விட்டது.

நான் கிரிக்கெட் கடவுள் அல்ல, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். கடந்த22 ஆண்டுகளை கடந்த பிறகும், கிரிக்கெட் கடவுள் என்னை கடந்த ஒராண்டாக சோதித்து வந்ததாக கருதுகிறேன். உண்மையை சொல்ல வேண்டுமானால், இந்த சாதனையை எண்ணி பல முறை மனம் வெறுத்திருக்கிறேன். ஆனால் அதனால் சோர்ந்து போனதில்லை.

அது போன்ற சாதனைகளை கடப்பது அவ்வளவு எளிதல்ல. சாதனைகளை கடப்பவர்களுக்கு மட்டுமே அதன் கஷ்டம் எப்படிப்பட்டது என்பது தெரியும். நான் சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக கிரிக்கெட் ஆடவில்லை. சாதாரணமாக ஆடும் போது சாதனைகளையும், மைல்கல்களையும் கடக்க முடிகிறது. எத்தனை சதங்கள் அடிக்கிறோம் என்பது முக்கியமல்ல. அணியின் நலனே முக்கியம்.

இளைஞர்கள் கனவுகளை துரத்த வேண்டும். கனவு நிச்சயம் நிறைவேறும். எனது கனவு 22 வருடங்களுக்கு பிறகு உலககோப்பையை வென்றபோதுதான் நிறைவேறியது.

தன் நூறாவது சதத்திற்கு பிறகு சச்சின் கொடுத்த பேட்டி இது.

பங்களாதேசத்திற்கு எதிராக சச்சின் நூறு ரன்களைத் தொட்டு விட்டு, வானத்தை நோக்கிப் பார்த்து ஒரு பெரு மூச்சு விட்டார்...அந்த மூச்சிக் காற்றில் அவரைப்பற்றிய அவதூறுகள் பொசுங்கிப் போயிருக்கும்...

என்றாளும் சாதனையாளர்களுக்கு ஒரு போதும் ஓய்வில்லை என்ற வகையில், சச்சின் மீதான அடுத்த எதிர்பார்ப்பாக, ஒரு நாள் போட்டிகளில் அவரின் 50வது சதத்தை எதிர்நோக்கி இருக்கும் அவர் ரசிகர்களும், ஊடங்கங்களும்...:-)

நீங்கள் புகைப்பழக்கம் உள்ளவரா..? இல்லாவிட்டாலும் படியுங்கள்...

காணிக்கை
புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி, அதை விட்டு விட முயற்சிக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் இந்தப் படைப்பை காணிக்கையாக்குகிறேன்.

புகைப்பயணம்…
இன்று அலுவலகத்தில் வேலை சற்று அதிகம்…லேசாக பசியெடுக்க நிமிர்ந்து உட்கார்ந்தேன்…

“என்ன வினோத் மணி ரெண்டாயிடுச்சே சாப்பிடலே..?”

அட இரண்டாயிடுச்சா..?நேரம் போனதே தெரியவில்லை..! முன்பெல்லாம் லஞ்ச் டைம் எப்ப வருமென்று ஆவலாக இருக்கும், கடந்த ஒரு வாரமாக ஏண்டா லன்ஞ் டைம் வருதென்று தோன்றியது…காரணம் ‘நான் புகைப்பதை விட்டு ஒரு வாரம் ஆகிறது..’
சாப்பிடுவதை விட, சாப்பிட்டு முடிந்ததும் ஒரு சிகரெட்டை எடுத்து ஒரு இழு இழுத்தால் தான் சாப்பிட்ட முழு திருப்தியையும் அடைந்த திருப்தி ஏற்படும். இந்த ஒரு வாரம் அப்பப்பா எவ்வளவு கஷ்டம்..? நீண்ட பெருமூச்சுடன் “ இதோ போகணும் ஜமால் “ என்றேன்.

மெதுவாக எழுந்து டைனிங் வந்தேன்… எல்லொரும் சாப்பிட்டு விட்டு சென்றிருந்தார்கள்…டிபனை பிரித்தேன்…சிக்கன் மணத்தது…என் மனைவியைப் பாராட்டிக் கொண்டேன்…

சாப்பிட்டு முடிந்ததும் கால்கள் வழக்கம் போல சிட் அவுட் சென்றது, அது தானே நம்ம ஸ்மோக்கிங் ப்ளேஸ்..” இது புகைப்பதற்கு தடை செய்யப்பட்ட பகுதி” என்று எழுதப்பட்ட வாக்கியத்தை பார்த்து சிரித்துக் கொண்டேன். இது போன்ற விசயங்களில் சட்டத்தை மீறி செய்வதே ஒருவகையான “கிக்” தான்.வாய் நம நமத்தது..” கன்ட்ரோல், கன்ட்ரோல், என்று மனசு சொன்னது.
வெளியே போய் வரலாம் என்று கிளம்பினேன்..லிப்டில் கீழே இறங்கி அலுவலக அருகில் உள்ள பெட்டிக்கடை நோக்கிச் சென்றேன், வெயில் இல்லாமல் வானம் மந்தமாக இருந்தது.

“ ஒரு பபுள் கம் தாப்பா”

“அட வினோத் சார் என்ன சார் உங்களை ஆளையே காணோம்...? என்ன சின்னப் பிள்ளை மாதிரி பபுள்கம் எல்லாம் கேட்குறீங்க..? பொட்டி வேணாமா?”
“வேணாம்பா அந்த எலவை விட்டு ஒரு வாரம் ஆகுது..”

“சும்ம ஜோக் அடிக்காதீங்க சார்..எனக்குத் தெரிஞ்சு நம்ம கஷ்டமர் ஒருத்தர் 20 முறை தம்மடிக்குறதை விட்டிருக்கிறார்... இதுவே அவருக்கு பொழுது போக்கு...”

சிரித்துக் கொண்டேன் ‘யாருகிட்டே சொன்னாலும் இந்த விசயம் காமெடியாகி விடுகிறது என்ன செய்ய..?

“நான் அப்படி இல்லை நீ பார்க்கத்தானே போறே..?”

“போங்க சார், இது போல உதார் விட்ட நிறைய பேரை பார்த்துட்டோம் ...”
சிரித்தான்.

எனக்கு கோபம் கோபமாக வந்தது...

பபுள் கம்மை மென்றபடி நடந்தேன்.

அலுவலக வேலையில் மூழ்கிய வேளையிலும் கூட இணையத்தில் அவ்வப்போது புகைப்பிடிப்பதின் தீமைகளால் ஒரு வருடத்திற்கு 5, 00,000 நபர்கள் புகைப்பிடிப்பதானால் மட்டும் இறக்கிறார்கள்.புகைப்பிடிப்பவர் சராசரியாக தன் வாழ்நாளில் 14 வருடங்களை இழக்கிறார்…93% கேன்சரினாலான மரணம் புகை பிடிப்பதனாலேயே நிகழ்கிறது என்ற விபரங்களைப் படித்ததுடன் , புகைப்பதை விட்டு எத்தனை மணி நேரம், நிமிட நேரம், நொடி, நேரம் என்று கணக்குப்பார்த்து கிட்டத்தட்ட 10080 நிமிட நேரம் சிகரெட் இல்லாமல் என்னால் இருக்க இயலுகிறது என்று என்னை நானே பாராட்டிக் கொண்டேன்.


மாலை அலுவலகம் குடித்து எல்லோரும் கிளம்பினர்… வெளியே மழை பெய்து கொண்டிருந்தது…சென்னையில் மழையில் வண்டி ஓட்டுவது ஒரு கலை. எனக்கு அது பிடிக்காது என்பதால் பஸ்சில் செல்ல எண்ணிய வேளை திருவான்மியூர் பெயருடன் வந்த பஸ்ஸில் தொற்றிக் கொண்டு “ஒரு மயிலாப்பூர் “ என்றேன்.

அதிசயம் பஸ்சில் ஏறியதும் இடம் கிடைத்தது …அதுவும் சன்னல் ஓரத்தில்…
லேசான காற்று மழைத்தூரலுடன் முகத்தி வீச உடல் சொல்ல முடியாது உணர்வில் மனம் தத்தளித்தது..

இந்த தருணத்தில் ஒரு சிகரெட்டை இழுத்தால் எவ்வளவு சுகமாக இருக்கும் என்று மனம் சற்று தடுமாறியது.

முன்னால் இருந்த வாகனத்தின் உறுமலில் புகை மூச்சு முட்டியது…புகை பிடிக்காதீர்..என்று வாகனத்தில் எழுதப்பட்ட கட்டளையை செயல்படுத்த இயலவில்லை.

கரும்புகையாக காற்றில் கலந்து கொண்டிருந்த அந்தப் புகை என் புகைப்பழக்கத்தின் ஆரம்ப காலத்துக்கு என்னை இழுத்துச் சென்றது.
அப்போது நாங்கள் எங்கள் சொந்த ஊரில் இருந்தோம்,. இராமநாதபுர மாவட்ட பரமக்குடி பக்கத்தில் உள்ளது எங்கள் கிராமம்.ஆறாவது படிக்க ஊரில் வசதி இல்லாததால் ஆற்றை கடந்து பரமக்க்குடிக்கு சென்று படிப்போம். அப்போது தான் புகை எனக்கு பழக்கமானது.நான் பார்த்த எங்களூர் பெரிய மனிதர்கள் எல்லோரும் கையில் ஒரு பெரிய தீக்கட்டையுடன் இருந்ததால் எனக்கு அந்த வயதில் புகைபிடிப்பது பெரிய மனுசனாவதற்கான அடையாளமாகவே சித்ததிக்கப் பட்டது.

எங்களூர் நாட்டாமை பெரிய சுருட்டோடு காட்சி தருவார்..எங்கள் வாத்தியாருக்கு செய்யது பீடி இல்லாமல் இருக்க இயலாது. சூப்பர் ஸ்டார் ரஜினியின் சிகரெட் வித்தைக்கு நான் பெரிய ரசிகன், எங்க ஐயனார் சாமிக்கு கூட சுருட்டு படையல் தான் ரொம்ப பிடிக்குமாம்.. என்பதால் புகை பிடிப்பது என்க்கு ஒரு கௌரவப் பொருளாகவே பட்டது.

பள்ளிக்கு நடந்து செல்லும் போது வழியில் கிடைக்கும் கருவேலமர வேர் தான் என் முதல் சிகரெட்..! வேரின் நுனியில் தீயை பற்றவைத்து உள்ளிழுத்து ரஜினி ஸ்டைலில் அதை வெளியிடும் போது, அந்த நொடி வந்து போகும் அந்த பெரிய மனுச தோரணைக்கு என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்கலாம்.


விடுமுறைக்கு சென்னையிலிருந்து வீடுவரும் அப்பா அவ்வப்போது ஆற்றங்கரையில் நின்று தம்மடிக்கும் ஸ்டைலை ஒளிந்திருந்து பார்ப்பேன் அவர் மீது வீசும் வெளிநாட்டு சிகரெட் வாசம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். பெரியவனானதும் அப்பா மாதிரி வெளிநாட்டு சிகரெட் குடிக்க வேண்டுமென்று மனதிற்குள் எண்ணிக் கொள்வேன்.

ஒரு நாள் ‘வேர்’ சிகரெட் புகைத்து கொண்டிருந்த் போது அப்பா பார்வையில் பட்டு விட்டேன்…மாலை வீட்டில் ராஜமரியாதை…அப்பா அடிக்க வில்லை ஆர்ப்பாட்டம் காட்ட வில்லை, என்னை ஒரு இருக்கையில் அமரச் சொன்னார். ஒரு வெளிநாட்டு சிகரெட் அவர் கையில் இருந்தது.பொறுமையாக பேசினார்…

“வினோத், நான் எல்லா அப்பா மாதிரியும் இல்லை,உன்னோட நண்பனாகத்தான் பழகுறேன், உனக்கு புகைபிடிக்க ஆசை யிருந்தா இந்தா இதைக்குடி , கண்டதையும் குடித்து உடம்பை கெடுத்துக் கொள்ளாதே அப்பா வெளிநாட்டு சிகரெட்டை கையில் திணித்தார்…ஃபில்டர் வைக்கப்பட்டது..என் கனவு சிகரெட் இப்போது என் கையில்…இருந்தாலும் எனக்கு அழுகை, அழுகையாக வந்தது.அப்பா என்னையே உற்றுப் பார்த்து கொண்டிருந்தார்…அவர் நல்லவர் சில நிமிட மௌனத்திற்குப் பிறகு அந்த் சிகரெட்டை உடைத்துப் போட்டேன்..
அதன் பின் அதைத் தொடவில்லை…பாதி கடித்து தூக்கி எரியப்பட்ட மாங்கா துண்டு போல அவ்வப்போது அந்த சிகரெட் துண்டு வந்து என்னைச் சலனப்படுத்தும் என்றாலும் கால மாற்றத்தில் அது மறக்கடிக்கப் பட்டது…
அதன் பின் அப்பாவின் மரணம், அண்னனின் வேலை மாற்றம் என்று என் வாழ்வில் நடந்த சில மாற்றங்களுக்குப்பின் நாங்கள் சென்னையில் குடியேறினோம் அது ஒரு காலனி…சுற்று வட்டாரப்பசங்க தண்ணி, பான் பராக், குடி என்று இருந்த அந்த கூட்டத்தில் நான் நீண்ட நாட்களாக நல்லவனாக இருக்க இயலவில்லை,

பொட்டைப்பயனாடா நீ..?ஒரு தம்மடிக்கக்கூட தெரியாதா உனக்கு ? இப்படி என் ஆண்மையைத் தூண்டி விடப்பட்ட வார்த்தை ஜாலங்கள் என்னை மாற்றியது… ஒரு நேரத்தில் என் வீரத்தை பறைசாற்றிக் கொள்ள சிகரெட் மட்டுமே உதவியது..வசதியான பசங்க எல்லாம் பைக்கை வைத்து 8, 16 என்று போட்டு பிகர்களை மடக்கி கொண்டிருத போது, என் போன்ற மிடில் கிளாஸ்களுக்கு சிகரெட் புகையில் இடும் வட்டங்கள் தான் பிகர்கள் மடக்கும் ஆயுதம் என்பதால் அந்த வயதில் அது எனக்குப் பெரும் தகுதியாகவே பட்டது.


ஆனால் திருமணத்திற்கு பின் இது தலைகீழாக மாறியது.நான் ஒரு செயின் ஸ்மோகர், சிகரெட் புகை என்றாலே என் மனைவிக்கு அலர்ஜி…

”டாடி இந்த வாடையே எனக்குப் பிடிக்கலை, இதை எப்ப தான் விடப்போறீங்களோ ?“ என்று என் மகள் கேட்கும் போது கூட தலை குனிந்து கொள்ளத்தான் முடிந்தது,,,ஆனால் இந்தப்பழக்கத்தை விட்டு விடலாம் என்று எண்ணக்கூட என் மனம் துணிய வில்லை காரணம் அந்த அளவு இந்தப்பழக்கம் என்னை ஆட்க்கொண்டிருந்தது.

அலுவலகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு என்று இந்த வருடம் எல்லாம் நலமாக என் மகளின் 10 வது பிறந்த நாளை விமர்சையாகக் கொண்டா ஏற்பாடு செய்தேன்..நிகழ்ச்சி சிறப்பாக முடிந்தது வீடு நிறைய அன்பளிப்புகள்.. மகள் திக்குமுக்காடி போனாள்.,,

“ என்ன சனா திருப்தி தானே..?”

“திருப்தி தான் ஆனால் நீங்க ஒன்றும் வாங்கித்தரலையே ?”

“பளார் “ என்று அறைந்தாற் போல் இருந்தது, நம்ம திருப்திக்காக செய்து கொள்ளும் இந்த பிறந்த நாள் விழா ஏற்பாடுகளில் குழந்தைகள் திருப்தி அடைவதில்லை..என்ற எண்ணம் உள்ளே குத்தியது..

“சரி உனக்கு என்ன வாங்கி வேண்டும்”

“எனக்கு ஒண்ணும் வாங்கி வேண்டாம்”

“பின்னே”

“நீங்க என் பிறந்த நாள் பரிசாக சிகரெட் குடிப்பதை நிறுத்தணும்…”

பகீரென்றது எனக்கு…இப்படி கேட்பாள் என்று நான் நினனத்து கூட பார்க்க வில்லை…

“சொல்லுங்கப்பா…”

“நீ கேட்டு உங்கப்பா இல்லைன்னு சொல்லுவாரா..?கண்டிப்பாக விட்டு விடுவார்” குத்தலுடன் என் மனைவி.

நீண்ட அமைதிக்குப் பின்னர், “விடுகிறேன்” என்றேன்.

ர்ர்ர்ர்ர்ர்ர்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் வண்டி உறுமலில் நிகழ்காலம் வந்தேன்.


பேருந்து மௌண்ட் ரோட் தர்ஹா சிக்னலில் நின்று கொண்டிருந்தது…சாம்பிராணி ஊதுபத்தி புகை மூட்டத்தில் தர்ஹா புகை மூட்டமாக காட்சியளித்தது. மழை சற்றே விட்டிருந்தது..ஆனால் டிராபிக் நகர்வதாக இல்லை.மூச்சு திணறியது. இதமான காற்று இறங்கி நடக்கலாம் என்று என்ற ஆவலைத் தூண்டியது. இறங்கி நடந்தேன் சில்லென்ற காற்று முகத்தில் வீச, “வினோத்” என்ற குரல் கேட்டு திரும்பினேன்.

ஹோண்டாவில் உறுமிய படி பீட்டர் என் கல்லூரி நண்பன்.

“ அட என்ன இந்தப் பக்கம்”

“இல்லே மச்சி மழையினாலே வண்டி எடுத்து வரலே…சரியான ட்ராபிக் சோ கொஞ்சம் நடக்கலாமேன்னு.. ஆமா நீ...?”

“நான் பக்கத்துலே தான் தங்கியிருக்கேன்..இன்னிக்கு கிளைமேட் சூப்பரா இருக்கிறதாலே சரக்கேத்தலாம்னு கிளம்பிட்டேன்..வாடா வண்டியிலே ஏறு பக்கத்திலே தான் …”

“இல்லைடா வேணாம்”

“ அடச்சீ, பழசை எல்லாம் மறந்துட்டியா..? காலேஜ் டைம்லே பீர் அடிக்கிறதுலே உன்னை மிஞ்ச முடியாதே இப்ப என்ன நல்லவனா வேசம் போடுறே ஏறுடா..”


சிரித்தேன்… மறுக்க முடியவில்லை.
பார் கலை கட்டியது.

“அவன் ஒரு ஹாட்டும், நான் ஒரு பீரும் ஆர்டர் பண்ணினோம்”

வித விதமான சிகரெட் வாசனை என்னை சலனப்படுத்தியது.அவன் ஒரு தம்மை பற்ற வைத்தபடி , என்னை நோக்கி பாக்கெட்டை நீட்டினான், அவசரப் பட்டு மறுத்தேன்.

“வேணாண்டா நான் ஸ்மோக் பண்ணுறதை விட்டு விட்டேன்”

சிரித்தான், சத்தம் போட்டு சிரித்தான்.

“என்னடா காமெடி பண்ணுறே”

“சீரிஸ்ஸா மச்சி நான் சிகரெட்டை விட்டு விட்டேன்”

“எத்தனையாவது முறை..?”

“பர்ஸ்ட் டைம்”

சிரிப்பு தொடர்ந்தது..

அதன் பின் ஆர்டர் வர அதில் பிஸியானோம்.

சிகரெட் பிடிப்பதில் ஆரம்பத்தில் இருந்த உறுதி முடிக்கும் போது இல்லை.இரண்டு பீர் இறங்கியதும் வாய் நம நமக்க தானாகவே பீருடன் சிகரெட்டும் சேர்ந்து கொண்டது.

“மச்சி புகைப்பிடிக்காதீர்ன்னு போர்டு வச்சிருக்கிறதைப் பார்த்தா எனக்கு காமெடியா வருதுடா நாம தான் புகையை வெளியே விட்டுவிடுகிறோமே அதை எவன் புடிச்சா நமக்கென்ன ?”

ஹா..ஹா..ஹா சத்தமிட்டு சிரித்தோம்.

டெலிபோன் பாடல் ஒலித்தது.

“வீட்டுலே இருந்து போன் ..இந்த பொண்டாட்டிகளுக்கு நாம நிம்மதியா வெளியே இருந்தாலே பிடிக்காதுடா மச்சி” கட் பண்ணினேன்.

டங்க் டங் டங் என்று பாரில் சத்தமான மியூசிக்கில் உள்ளம் குதித்த்து…
மீண்டும் போன் ஒலித்தது…

“ அவ விட மாட்டா மச்சி எத்தனை முறை கட் பண்ணினாலும் அடிப்பா”
போனை எடுத்தேன்…

எதிர்முனையில் என் மனைவி அழுதபடி,

"என்னங்க நம்ம சனா டியூசன் படிக்க போன பில்டிங்லே எதோ தீ பிடிச்சுகிச்சாம்…எனக்கென்னவோ பயமா இருக்குங்க…நீங்க எங்கே இருக்கீங்க? "
போதை சர்ரென்று இறங்கியது..

“இதோ வந்துடறேன் வசந்தி..நீ பயப்படாதே”

அங்கிருந்து கிளம்பி ஆட்டோவில் வந்து சேர்ந்தேன்…தீ உக்கிரமாக எரிந்து கொண்டிருந்த்து..ஒரே கூச்சல் குழப்பம்..

“வாத்தியார் மாடியிலே குடிசை போட்டி டியூசன் நடத்தியிருக்கார்..எப்படி தீப் பிடிச்சதுன்னு தெரியலையப்பா, ஆனா எரியுறதைப் பார்த்தா பலத்த உயிர் சேதம் தான்னு தோணுது.”

“கும்பகோண மேட்டருக்கு அப்புறம் குடிசைப் பள்ளிகூடம் இருக்க்க் கூடாதுன்னு ரூல்ஸ் போட்ட அரசாங்கம் இது போன்ற டியூசன் செண்டரை தடுத்திருக்கனும்பா இப்ப பாரு எப்படியும் முப்பது நாற்பது குழந்தைகள் இருப்பார்கள் போல..”

“ பக்கத்துலே ஒரே பேச்சுலர் பசங்க எவனாவது தம்மடிச்சுட்டு அணைக்காமே போட்டிருப்பானுங்க அது தான் இந்த விபத்திற்கு காரணம்..”
“ஆமாம்பா இதுக்குத்தான் இந்த பேச்சுலர் பசங்களை குடி வைக்ககூடாது என்கிறது… "

இப்படி ஆளாளுக்கு ஏதேதோ பேசினார்கள்…எரியும் கட்டடத்தை நெருங்க முடியவில்லை அனல் வீசியது. எனக்கு, மகளுக்கு சத்தியம் செய்து கொடுத்த தருணம் அடிக்கடி கண்முன் வந்து சென்றது. சத்தியம் தவறி விட்ட்தால் தான் இப்படி நிகழ்ந்து விட்டதோ…? மனதில் சொல்ல முடியாத அழுத்தம் , என் மனைவி அழுஅழுதே மயக்கமானாள்.

வீட்டினுள் சென்ற தீயணைப்பு படையினர் கரிக்கட்டைகளாக சில உடல்களை கொண்டு வந்து கொட்டினார்கள் ஒரே பதட்டம், கும்பல் ஓடிச் சென்று அடையாளம் காண முயன்றது.

“சனா” என்று கதறியபடி என் மனைவி ஓடினாள், எரிந்தும் எரியாமலும் இருந்த சிகப்புக்கலர் பாவாடையால் சனாவை அடையாளம் காணமுடிந்தது. என் மனைவி கதறினாள் என்னால் அடக்க இயலவில்லை… ஒரே கூச்சல் குழப்பம்…

மயக்க நிலைக்கு தள்ளப்பட்ட ஆம்புலன்சில் கையை முட்டுக் கொடுத்து சரிந்தேன்…

“சனா இனி ஒரு போதும் புகைபிடிக்க மாட்டேனம்மா..” என்று உள்ளுக்குள் கதறியபடி, முகம் பொத்தி அழுதேன்…அது கண்டிப்பாக என் சனாவிற்கு கேட்டிருக்கும்.

துபாய் கோம்போ மீல்-1 (சவர்மா கடிக்க, சுலைமானி குடிக்க)

நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களை எல்லாம் சந்திக்கிறேன்...உங்களில் பல பேர் என்னை மறந்திருக்கலாம். புதியவர்களுக்கு என்னைத் தெரியாது...அமீரகப் பதிவர்களை மட்டும் அவ்வப்போது சந்திக்கும் வாய்ப்பினை பெற்றிருப்பதால் அவர்களுக்கு மட்டும் என்னைத் தெரிய வாய்ப்பிருக்கிறது..:-)

நான் ஒரு தொடர் பதிவர் அல்ல...எப்பவெல்லாம் தோணுதோ அப்போது தான் எழுதுவேன்...சில நேரங்களில் அது வருட இடைவெளியைக் கூட ஏற்படுத்தி விடுவதுண்டு...சமீபத்தின் இடைவேளையும் அப்படித்தான், முகப்புத்தகத்தின் இரண்டடி எழுத்துக்களில் கட்டுண்டு, அரட்டையும், கும்மியுமாக ஓடிய நாட்கள்... அமீரக தமிழ் அமைப்புகளின் செயல்பாடுகளில் நான் சற்று அதிகம் காட்டிய ஆர்வம், இவை எல்லாவற்றையும் விட என் இரண்டாவது மகளின் அன்பு இடையூரல்...ஒரு நிமிடம் சும்ம இருக்க மாட்டாள்...அதை இழுப்பது, இதை உடைப்பது, கம்ப்யூட்டரில் தண்ணீரை அள்ளி ஊற்றுவது, டீவி யை வயரைப் பிடித்து இழுத்து போட்டுவது இப்படி சேட்டைகள் ஏராளம்...

சமீபத்தில் எந்திரன் படத்தைப் பார்த்து விட்டு, என் மகளுக்கு பிடித்த ஒரே காட்சி,சிட்டி ரஜினிக்காந்த் டிவியைப் போட்டு உடைப்பது தான்...! படம் பார்த்து வந்ததிலிருந்து என் மகளுக்கு ஒரே கொண்டாட்டம் " வாப்பா டிவியை போட்டு உடைச்சிட்டாங்க...அவங்க டிவியை உடைச்சிட்டாங்கன்னு" அந்த வாரம் முழுதும் உற்சாகமாக சொல்லிக் கொண்டே இருந்தாள்...ஊரில் ஒரு டிவி ஏற்கனவே உடைத்த முன் அனுபவம் இருந்ததால், இங்கே இருக்கிற டிவியை காப்பாற்றுவது பெரிய பாடாகி விட்டது:-)

சமீபத்தில் அமீரகத்தில் ஒரு விழா முடிந்த தருவாயில் அதிகாலையிலேயே பதிவர் குசும்பன் என்னை அழைத்திருந்தார்...என்ன காலையிலேயே ? என்றேன்.

"சித்தப்பூ பேமிலி ஊரிலிருந்து வந்த பின்னும் எப்படி உங்களால் அமைப்புகளுக்காக இப்படி வீடியோ காட்சிகள் செய்ய முடிகிறது ?என்றார்"

அதை நான் செய்ய வில்லை என்று தலையில் அடித்து சத்தியம் பண்ணியதும் அவருக்கு பெருத்த சந்தோஷம்...அவருக்கு நான் செய்ததைப் பற்றியெல்லாம் அவருக்கு கவலை இல்லை, அவர் கவலை எல்லாம் என் சின்னப்பிள்ளையை வைத்துக் கொண்டு நான் எப்படி செய்தேன் என்பது தான்...
ஒய் ப்ளட் சேம் பிளட் :-)
(அவர் மகன் இனியவனை வைத்துக் கொண்டு அவர் படும் பாடு அவருக்குத் தெரியும் அல்லவா..?)

*************
பதிவில் நாம் எழுதியதெல்லாம் யார் படிக்கப் போகிறார்கள்..? என்ற எண்ணம் எனக்கு அவ்வப்போது ஏற்படுவதுண்டு, அதைத் தகற்கும் வகையில் அவ்வப்போது எனக்கு வரும் தனிமடல்கள் என் எழுத்து தீயிற்கு எண்ணெய் ஊற்றுவதாகவே அமையும்.

அந்த வகையில் சமீபத்தில் திருச்சி சையது வெளியிடப்போகும் "நட்புக்காக" சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள 26 சிறந்த எழுத்தாளர்களின் கதைகளில், என் கதையான "சிறகு தொலைத்த சிட்டுக் குருவிகள்" இடம் பெறுவதுடன் அதற்கு அணிந்துரை எழுதிய பாரதிதாசன் பல்கலைக்கழக தமிழியல் துறைத் தலைவர் பேராசிரியர் எழில்வேந்தன் அனைத்து கதைகளிலும் இது முடி மணியாகத் திகழ்கிறது என்று பாராட்டியிருப்பது, மற்றும் என் கதைகளில் சிலவற்றைப் படித்த பிரபலங்களில் சிலரான பேராசிரியர் பெரியார் தாசன் அப்துல்லா, கவிச்சித்தர் மு. மேத்தா, காவியத்திலகம் ஜின்னாஹ் சரியுத்தீன் ஆகியோர் நீங்கள் கண்டிப்பாக சிறுகதைத் தொகுப்பு வெளியிட வேண்டுமென்று என்னிடம் உரிமையுடன் என்னிடம் கேட்டுக் கொண்டது, போன்ற நிகழ்வுகள் எனக்கு மேலும் மேலும் எழுத வேண்டுமென்ற ஆர்வத்தைத் தூண்டக் கூடியதாகவே உள்ளது.

ஆனால் அதற்கான ஒரு நேர்த்தியான நேரம் கிடைக்காத வேளையில்,இந்த வெள்ளிக் கிழமை பதிவர் பாஸ்ட் பௌலர் நவ்பலுடன் பேசிக்கொண்டிருந்த போது, கிரிக்கெட் சம்பந்தமாக அவர் உட்பட சில பதிவர்கள் இணைந்து எழுதிவரும் "ஆடுகளம்" வலைப்பூவில் நீங்களும் எழுதுங்களேன்...என்று விளையாட்டாய் கேட்டது வினையாக மாறி விட்டது..:-) மீண்டும் அடித்தாட ஒரு வாய்ப்பு,

நாமலெல்லாம் சுனாமியிலேயே சும்மிங் போடறவங்க...சும்மிங் பூல் கிடைத்தா விடுவோமா..? ( எது இருக்கிறதோ இல்லையோ நாலு பஞ்ச் டைலாக் முக்கியம்..:-)) மீண்டும் இறங்கியாச்சு...( தேரை இழுத்து தெருவுலே விட்ட நவ்பல் போன்ற நண்பர்களுக்கு நன்றி...!) அடிச்சு ஆடுறதா ? இல்லை அடிவாங்கி ஓடுறதான்னு பார்க்கலாம்..:-)



ஆடுகளத்தில்....
******
ஆமா இதற்கு எதற்கு "துபாய் கோம்போ மீல்" என்று எதற்கு பேர் வைத்திருக்கிறாய்...சவர்மா, சுலைமானி என்று எதையும் கண்ணில் காட்ட வில்லையே? என்று கேட்பவர்களுக்கு, கொத்துபரோட்டா, டைரிகுறிப்பு, இந்த வரிசையில் இனி இதுவும் தொடர்ந்து வரும் கண்ணில் கண்ட செய்திகளுடன்....முன்பு எனக்களித்த அதே ஆதரவை மீண்டும் எதிர் நோக்கும்
உங்கள்......
கீழைராஸா பாலையிலிருந்து.....

மரணம் தேடிப் பறந்த மனிதப்பறவைகள்…


இன்னும் சில நொடியில்-விமானம்
தரையிறங்குமென்றபோது
எவரும் அறியவில்லை
அப்படி ஒரு செய்தி இடியென
தலையிறங்குமென்று..

பத்தாயிரம் மைல்கள்
பதனமாக வந்த பயணம்
பத்து மைல் இருக்கையிலே
பாவியவன்
பாசக்கயிற்றில் சிக்கியதே

தியாகத்தில் இவர்கள்
தீக்குச்சிகள்..என்பதாலோ
தீப்பெட்டியாக விமானம்
தீப்பற்றிக் கொண்டனவோ..?

எரிந்தது நீங்கள் மட்டுமல்ல
ஏக்கங்களும் கனவுகளும்
மரித்தது நீங்கள் மட்டுமல்ல
ஆசைகளும், உணர்வுகளும்…

தகவல்கள் எரியாது காக்க
எதையும் தாங்கும்
கருப்புப் பெட்டியாம்..!
உயர்வான உயிர்களைக் காக்க
உதவாக்கரை
உலோகப் பெட்டியாம்..!

உறக்கமில்லா இரவுகளில்
உழைத்திட்ட இம்மக்களென
உறங்கழைத்துச் சென்றானோ?
உலகம் காக்கும்பேரிறைவன்
இரக்கமில்லா இந்நிகழ்வை
இன்னும் பலர் நம்பாமல்,
ஏர் இந்தியா என்றாலே
எப்போதும் தாமதம் தான்
என்றெண்ணிக் காத்திருப்போர்
ஏர்போட்டில் ஏராளம்…

இயற்கையை நம் கையில்
எடுத்திட்ட பெருமிதத்தை
இது போன்ற சம்பவங்கள்
தடுத்திடச் செய்கிறதே..
பறவையின் பறக்கும்குணம்
பார்த்து செய்த விமானம்- இவர்கள்
உலகை விட்டு பறக்கையிலே
உதவிக்கு வரவில்லையே…?

யானை இருந்தாலும் ஆயிரம் பொன்
செத்தாலும் ஆயிரம் பொன்
இவர்களும் யானைகள் தான்…
இருக்கும் போது தன் ஆசைகள்
எரித்து குடும்பம் காத்தார்கள்
செத்தபோது தங்களை எரித்து
குடும்பம் காக்கிறார்கள்…

பறந்து சென்று பணம்தேடி-பந்தம்
துறந்து தனம் தேடி
இறந்து சென்றும் இனம் காத்ததால்
இவர்களும் சீதக்காதியன்றோ…?

(சமீபத்தில் பெரியார்தாசன் என்றறியப்பட்ட அப்துல்லாஹ் அவர்கள் துபாய் வந்திருந்த போது, நீங்கள் கவிதை எழுதுவதை விட கதை எழுதுவதில் அதிக ஈடுபாடு காட்டுங்கள் அது தான் உங்களுக்கு நன்றாக வருகிறது என்றார் ( எனக்கு கவிதை வரவில்லை என்பதை அவர் பாணியில் சொன்னார்) அந்தப் பெரியவரின் வார்த்தைகளை மீறி இதை எழுதிவிட்டேன்...கவிதையின் அளவு கோலுக்கு அப்பாற்பட்டதாக இருந்தாலும்...என் உணர்வுகளின் வடிகாலாகவே இதை வடித்துள்ளேன்.)

Related Posts with Thumbnails