Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

மரணம் தேடிப் பறந்த மனிதப்பறவைகள்…


இன்னும் சில நொடியில்-விமானம்
தரையிறங்குமென்றபோது
எவரும் அறியவில்லை
அப்படி ஒரு செய்தி இடியென
தலையிறங்குமென்று..

பத்தாயிரம் மைல்கள்
பதனமாக வந்த பயணம்
பத்து மைல் இருக்கையிலே
பாவியவன்
பாசக்கயிற்றில் சிக்கியதே

தியாகத்தில் இவர்கள்
தீக்குச்சிகள்..என்பதாலோ
தீப்பெட்டியாக விமானம்
தீப்பற்றிக் கொண்டனவோ..?

எரிந்தது நீங்கள் மட்டுமல்ல
ஏக்கங்களும் கனவுகளும்
மரித்தது நீங்கள் மட்டுமல்ல
ஆசைகளும், உணர்வுகளும்…

தகவல்கள் எரியாது காக்க
எதையும் தாங்கும்
கருப்புப் பெட்டியாம்..!
உயர்வான உயிர்களைக் காக்க
உதவாக்கரை
உலோகப் பெட்டியாம்..!

உறக்கமில்லா இரவுகளில்
உழைத்திட்ட இம்மக்களென
உறங்கழைத்துச் சென்றானோ?
உலகம் காக்கும்பேரிறைவன்
இரக்கமில்லா இந்நிகழ்வை
இன்னும் பலர் நம்பாமல்,
ஏர் இந்தியா என்றாலே
எப்போதும் தாமதம் தான்
என்றெண்ணிக் காத்திருப்போர்
ஏர்போட்டில் ஏராளம்…

இயற்கையை நம் கையில்
எடுத்திட்ட பெருமிதத்தை
இது போன்ற சம்பவங்கள்
தடுத்திடச் செய்கிறதே..
பறவையின் பறக்கும்குணம்
பார்த்து செய்த விமானம்- இவர்கள்
உலகை விட்டு பறக்கையிலே
உதவிக்கு வரவில்லையே…?

யானை இருந்தாலும் ஆயிரம் பொன்
செத்தாலும் ஆயிரம் பொன்
இவர்களும் யானைகள் தான்…
இருக்கும் போது தன் ஆசைகள்
எரித்து குடும்பம் காத்தார்கள்
செத்தபோது தங்களை எரித்து
குடும்பம் காக்கிறார்கள்…

பறந்து சென்று பணம்தேடி-பந்தம்
துறந்து தனம் தேடி
இறந்து சென்றும் இனம் காத்ததால்
இவர்களும் சீதக்காதியன்றோ…?

(சமீபத்தில் பெரியார்தாசன் என்றறியப்பட்ட அப்துல்லாஹ் அவர்கள் துபாய் வந்திருந்த போது, நீங்கள் கவிதை எழுதுவதை விட கதை எழுதுவதில் அதிக ஈடுபாடு காட்டுங்கள் அது தான் உங்களுக்கு நன்றாக வருகிறது என்றார் ( எனக்கு கவிதை வரவில்லை என்பதை அவர் பாணியில் சொன்னார்) அந்தப் பெரியவரின் வார்த்தைகளை மீறி இதை எழுதிவிட்டேன்...கவிதையின் அளவு கோலுக்கு அப்பாற்பட்டதாக இருந்தாலும்...என் உணர்வுகளின் வடிகாலாகவே இதை வடித்துள்ளேன்.)

பொங்கலோ...பொங்கல்



கடித்துத் தின்ன கரும்பில்லை
இனிப்புத் தின்ன எறும்பில்லை
மஞ்சள் பூச வழியில்லை
மாமன் மகளும் இங்கில்லை...

"சன்"னுக்குப் பொங்கல் அன்று
"சன்" டிவி தான் பொங்கல் இன்று
முகம் பார்த்த வாழ்த்துக்கள் அன்று
முகப்புத்தக வாழ்த்துக்களே இன்று..

இளமைக்கால பொங்கல் நினைவுகள்
இதயமெங்கும் வருடிட...
இனியத் தமிழ் நண்பர்களுக்கு என்
இதயப்பூர்வ பொங்கல் வாழ்த்துக்கள்...
-கீழைராஸா பாலையிலிருந்து....

விடை தெரியாத பள்ளிப் பருவக் காதல்..!

விடை தெரியா வினா...!?


“எனக்கு நீ யார்...?”
பள்ளி இறுதி நாளில்
உன்னை நான் கேட்டேன்
விடையென்று நீ உதிர்த்துச்
சென்ற உன் உதட்டுப்
புன்னகை இன்னும்
விடை தெரியாமல்
என்னுள்
புதைந்து கிடைக்கிறது…

என் கேள்விகள்
எத்தனைப்பக்கங்களானாலும்
உன் பதில் என்னவோ
மௌனம் கலந்த ஒரு
புன்னகை தான்...
அத்தனை கேள்விகளும் உன்
ஒரு அங்குல புன்னகை
முன் மண்டியிடும் மர்மமென்ன...?

எத்தனையோ முறை
நீ கேட்டு விடுவாயோ என்று
பக்க பக்கமாக
பதில் தயாரித்து வருவேன்
அத்தனை முறையும
நீ என் பெயரைக் கேட்டால் கூட
விடை தெரியாமல்
விழிப்பேன்…
உன் பார்வை என்னும்
காந்த அலையில்
என் மூளை நரம்புகள்
முடக்கப்படுவது
இயற்கை தானே...?

கோனார் தமிழ்
உரை போல
காதலுக்கும் ஒரு
வழி காட்டியிருதிருந்தால்
அதுவாவது என் காதலுக்கு
ஒளி காட்டியாக
இருந்திருக்கும்

கவிதை
நீ கற்றுத்தந்த பாடம்...
உன் மௌனத்தை
மொழி பெயர்த்தேன்
எல்லோரும் என்னை
கவிஞனென்றார்கள்...
உண்மையில் நானொரு
மொழிபெயர்ப்பாளன்
என்பது எனக்கு உனக்கும்
மட்டுமே தெரிந்த உண்மை...

ஒரு திருவிழாவில்
மீண்டும் நாம்
சந்தித்துக் கொண்டோம்
உன் கணவனுடன்…
என் மனைவியுடன்…
“யாரம்மா இது..?”
உன் மகள்..
அன்று விட்டுச்சென்ற
புன்னகை
உன் உதட்டை
மீண்டும் தொட்டுச்சென்றது..
ஒரு கேள்விக்கு இன்னொரு கேள்வி..
என்றாலும்
விடை கிடைத்த திருப்தியுடன்
மற்றவர்கள்...
விடை தெரியாத
வினாவுடன் நான்....

( அமீரகத்தில் வெளிவரும் "தமிழ்த்தேர்" மாத இதழுக்காக "வினாவும் விடையும்" கவிதைத் தலைப்பிற்கு எழுதப்பட்ட கவிதை இது.)

வெளிநாட்டில் எதைத்தேடுகிறோம்…

வெளிநாட்டில் பொருள் தேடி வந்ததினால் நாம் இழந்தது எத்தனையோ... தேடிவந்த பொருள் கிடைத்தது ஆனால் தொலைத்து வந்த சந்தோசங்கள்..?


துபாய் தமிழ்த்தேர் இதழுக்காக கொடுக்கப்பட்ட "எதைத்தேடுகிறோம்" என்ற தலைப்பிற்கு நான் எழுதிய தேடல்கள்...

  • பந்தங்கள் சூழ
    வழியனுப்பப்பட்டு
    பறந்து வரும் முன்
    சொந்தங்கள் முன்
    தொலைத்த –அந்த
    சந்தோஷத்தை…..


  • கட்டிளம் காளையாக
    பாலைபுகுந்து இன்று
    கசக்கிப்பிழியப்பட்ட
    அடிமாடுகளாய்
    இழந்து நிற்கும்
    இளமையை…

  • KFC,சவர்மாவின்
    ருசியில் சிக்கி
    சவமாகிப்போன நாக்கில்
    அன்று ருசித்த
    அம்மாவின் சமையல்
    ருசியை…



  • வழியனுப்ப வாசல்
    வந்தவளின்
    விழி உகுத்த
    சிறு துளியில் -மனம்
    வலிக்க மறுநொடியே
    மறந்து வந்த
    இதயத்தை…


  • விடுமுறையில்
    வீடு செல்ல
    வழிப்போக்கன் போல்
    பார்த்த பிள்ளை
    புறப்படும் முன்
    புன்முறுக “அப்பா” என்க
    புல்லரித்து
    அள்ளி அனைத்து
    கொஞ்சிய
    அந்த நொடி
    பிஞ்சு ஸ்பரிசத்தை….

  • திருவிழாக்கள்,
    பெருநாட்கள் –
    உற்றார் புடைசூழக்
    கொண்டாட
    உளவியலாய் களையிழந்து
    மனமிங்கு தனிமையில்
    திண்டாட
    அலை, அலையாய்
    தொலைத்து நிற்கும்-அந்த
    இனிய தருணங்களை….

    பொருள் தேட என்றெண்ணி
    புறப்பட்டு வந்தோம்-இங்கு
    இருள் சூழ அருளிழந்து-மனம்
    புளுகி நின்றோம்
    தேடிவந்த பொருள் கிடைத்தும்-நாட்டில்
    தொலைத்து வந்த
    சந்தோசத்தை
    விட்ட இடம் விட்டு
    மற்ற இடத்தில்
    தேடுகிறோம் தேடுகிறோம்…

கலைஞரின் குறைகள்…(இது அரசியல் பதிவு அல்ல)

ஈழப்பிரச்சனை, கலைஞரின் உண்ணாவிரதம், அரசியல் அனல், போர் நிறுத்தம். இவை எவற்றிற்கும் இந்த பதிவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றாளும் இதன் நாயகன் கலைஞரைப் பற்றி அவரின் எண்பத்தைந்தாம் அகவை ஒட்டி எண்பத்தைந்து கவிதை தொகுப்பை வெளியிட முயற்சித்து அதன் தொடர்பாக கவிஞரொருவர் கவிதை சேகரிக்க அமீரகம் வந்த போது என் பங்கிற்கு கலைஞரைப் பற்றி நான் எழுதி அளித்த கவிதை இது…

குறைகளெல்லாம் நிறைகளாய்….
உன் நிறைகளைப் பாட
நீண்டதொரு கூட்டமுண்டு- என்பதால்
தங்கள் குறைகள் பாட
கு(ழ)ரலெடுத்து வந்துள்ளேன்…

நீ நிறைகளால் நிறைந்தவன்
குறைகளையும் நிறையாக்கியவன்


“ அரசியல் சிகரமே ”
உன் உயரத்தில் நீ சற்றே குள்ளம்…
உன் உருவ ஆளுமைக்கு அது
சற்று குறைவானது தான் – ஆனால்
அரசியலில் உன் சாதனை உயரம் கண்டு
எவரெஸ்ட்டும் உன்னை
தலை நிமிர்ந்து பார்க்கிறதே-அந்த
தந்திரமென்ன…?


“திருக்கு(ற)ரலாசானே”
உன் குரலின் கரகரப்பு,
உன் பரபர்ப்பு வார்த்தை வேகத்திற்கு
சிறு குறை தான் – ஆனால்
உன் கரகரப்புக் குரலில்
கட்டுண்டு கிடக்கும் கூட்டம் கண்டு
குயில் கூட உன் குரல் மாற்றி
கூவ முயற்சிக்கும்
மந்திரமென்ன…?

“சூரியனுக்கொளியே...”
கருப்பு கண்ணாடி - உன்
விழிகளின் விலாசமென்பது
உன் பார்வைக்குறை குறைக்கத்தான் –ஆனால்
ஒட்டுமொத்த கலைச் சமுதாயமே
உன் விழிவழியே- பூலோகம்
நோக்க காத்திருக்கும்
விஞ்ஞான மர்மமென்ன..?

“சிந்தனை சிறுத்தையே…”
உன் நடையின் தளர்வு
உன் பொழுது வேகத்திற்கு
சற்றே குறை தான் –ஆனால்
உன் எண்ண வேகத்திற்கு
எந்த எழுத்தாணியும்
ஈடுகொடுக்க இயலா தவிக்கும்
மாயாஜாலமென்ன…?

“கவிபாடும் கணிப்பொறியே”
இளம் தலைமுறைக்கு – நீயொரு
செம்மொழி தந்த “தமிழ்”
அரசியல் “கணித” மேதை
எழுத்துலகின் “விஞ்ஞானம்”
வாழும் “வரலாறு”
சகலகலா திறன் கொண்ட “ பூகோளம்”

“கலைஞரே”
எண்பத்தைந்தென்பது
உமக்கு குறையா..? நிறையா..?
என நிறைய சிந்தித்தாலும்
நிறைகள் மட்டுமே நெஞ்சில்
நிறைகிறது … மற்றவை உம் முன்
மறைகிறது…

மௌனம் தரிக்காத முத்த தருணம்...( கவிதை தெரிந்த இளசுகளுக்கு மட்டும் )

மு(மொ)த்தத்தில் மௌனமில்லா ஒர் இடம் …


உன் விழி என் விழி
ஊடுருவும் வேளை…
உன் விரல் என் விரல்
வருடும் மாலை…
விண்ணொளி உன்
கண்ணொளி கண்டு
ஒளிந்திடும் வேளை-நம்
உதடுகள் ஒட்டிக்கொள்ளும்
உன்னத மாலை…
மௌனம்…






உள்ளத்துள் ஆயிரம்
வார்த்தைகள் துடிக்க…
உள்ளுக்குள் வேதியல்
மாற்றங்கள் வெடிக்க…
எண்ணத்தில் உன் பிம்பம்
எட்டிப்பிடிக்க…
கட்டிப் பிடிக்க…வந்து விடும்
மௌனம்…





அடியே
மௌனப் பெண்ணே..!
வெட்கமில்லாதவளே…
தம்பதிகள் தனித்திருக்க…
உனக்கென்ன வேலையிங்கு…
போய்விடு மௌனப்பெண்ணே…
போய்விடு…
என்னவளின் மெலோடியஸ் குரல்
கேட்க வேண்டும்…
விழிமூடும் அந்த
முத்தத்தருணத்தில்…

ஒகேனக்கல் ஒருமைப்பாடு...கண்ணீர் தேசத்தின் தண்ணீர் சோகம்…

பயிர் வாழத்தான்
தண்ணீர் தர வில்லை
உயிர் வாழவுமா..?
-தமிழக முதல்வர்
இந்தியா என் தாய் நாடு
இந்தியர் அனைவரும்
நம் உடன் பிறந்தவர்கள்
-நாம்
எங்கிருக்கிறோம் நாம்..?
எங்கிருக்கிறது நம் நாடு..?
எங்கிருக்கிறது ஒருமைப்பாடு..?
உள்ளம் கொதிக்கிறது…

புகுந்த வீட்டிற்குப்
புறப்படும் பெண்ணை
பிறந்த வீட்டில்
சிறை வைக்கும் கொடுமை…
புருஷன் வீட்டில்
புகுந்த பெண்ணை
புத்தியில்லாமல்
தடுக்கும் கடுமை…
வேறெங்கு காண
இயலும் இந்த மடமை..?

வறண்டது நம் மண் மட்டுமல்ல…
அவர்கள் மனங்களும் தான்…



வலது கை கொடுத்ததை
இடது கை அறியாதது
உயர் தர்மம்…
இது தருமமல்ல…
தானாய் வருவது ( இதற்கும்)
வருவதற்கு கணக்கு
வந்ததற்கும் கணக்கு
என்றால் ஏன் வராது
மனப் பிணக்கு…?

மத்திய அரசை
மதிப்பதில்லை
சுப்ரீம் கோர்ட்டா
ச்சூ..ச்சூ…
நடுவர் மன்றம்
நடைமுறையில் இல்லை
ஒரே நாடு
அது நம்ம கூப்பாடு…

எங்கே அந்த ஒற்றுமை..?
எங்கே அந்த சகோதரத்துவம்..?
எங்கே அந்த ஒருமைப்பாடு..?
எல்லாம் பெயரளவில்…

திட்டங்கள் தீட்டிய
வண்ணமுள்ளன…
உண்ணாவிரதங்கள்
விருந்தோடு முடிந்தன…
பேச்சு வார்த்தை
மூச்சுள்ள வரை…
எஞ்சியிருப்பது..?
தாகத்தோடு பயிர்களும்…
சோகத்தோடு நம் உயிர்களும்…



தலைவர்களே..
மத்தியத் தேர்தல்..
மாநிலத்தேர்தல்
என்று மட்டும் எங்களைப்
பார்க்காதீர்கள்…
நாங்கள் மனிதர்கள்
உணர்வு உள்ள மனிதர்கள்…
வேண்டாம்…இந்த மரண விளையாட்டு
நதிகளை இணைக்கும் முன்
மனம் தனை இணைக்க வாருங்கள்..
இருக்கும் வரை
மகானாக இல்லாவிட்டாலும்
மனிதராக வாழுங்கள்....

தமிழ் நாட்டு தமிழச்சியும் …தமிழ்மண தமிழச்சியும் …ஓர் அலசல்…


தமிழ் நாட்டு தமிழச்சி...

“----“ என்ற வார்த்தை கேட்டால்
நாணி கோனிடுவார், உடல்
கூனி குறுகிடுவார்…சொன்னவரை
எகிறிடுவார்…பார்வையால் எரித்திடுவார்…

தமிழ்மண தமிழச்சி...

“----“ என்ற வார்த்தைதனை – தம்
பாணி என்றிடுவார் – தினம்
போனி செய்திடுவார் – தமிழ்மணம்
நாணி கோண வைப்பார் – ஏதும் கேட்டால்
எகிறிடுவார்…எழுத்தால் எரித்திடுவார்…

தமிழ் நாட்டு தமிழச்சி...
நித்தம் ஒரு கோயில்
நிதமும் ஒரு விரதம்
சத்தமிட்டு பேசக்கூட
யுத்தமென்று அஞ்சுபவர்…
தமிழ்மண தமிழச்சி...
நித்தம் ஒரு இடுக்கை - அவர்
நிதமும் தருவார் தன் படைப்பை-அவர்
சத்தம் தனை கேட்டால் கூட சபையில்
யுத்தமென்று அஞ்சுவோர் பலர்…
தமிழ் நாட்டு தமிழச்சி...
தீர விசாரித்தாலே வெளி சொல்ல
தயங்கிடுவாள்…
தீயதென்று கண்டுவிட்டால்
பூவைக்கூட புறக்கணிப்பார்...
தமிழ்மண தமிழச்சி...
தீர்க்கமாக இடுக்கை இடுவார்
விளக்கம் கேட்டால்
விளங்காதிருப்பார்…
தீயது என்றறிந்தாலும் – இவர்
தீக்குள் விரல் விடுவார்…
தமிழ் நாட்டு தமிழச்சி
அடக்கம் பெண்ணுக்கு
வேண்டுமென்பார்
ஆண்கள் சபையென்றால்
அமைதி காப்பார்
தலை குனிதல் பெண்ணுக்கு
வேண்டுமென்பார்- அது தமிழச்சி
தரணி புகழ வழிவகுக்குமென்பார்…

தமிழ்மண தமிழச்சி...
(மற்றவரை) அடக்கும் குணம் பெண்ணுக்கு
வேண்டுமென்பார்
ஆண்கள் சபை
அமைதி காக்க வைப்பார்
தமிழன் தலை குனிய கூடாதென்றால்
தமிழச்சி எப்படி தலை குனிவாரென்பார்- அதுவே தமிழச்சி
தரணி புகழ வழிவகுக்குமென்பார்…

மகாத்மா காந்தி, பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், தலைவர்கள் பெயர் தாங்கிய அதர்மங்கள்...முரண்பாட்டு முரசொலிகள்...


என்ன முரண்பாடிது..?
“அண்ணா சாலை”
தலைவர் பெயர் தாங்கிய
தார் சாலை !

கடமை போதித்தவர் சாலையில்
கண்ட படி அதர்மங்கள்
ஓரம் ஒதுக்கி
பர்ஸ் சுரண்டும் போலீஸ்

ஒதுங்கிப்போனால்
ஒதுக்கிப்போகும் பெண்கள்..
ஓயாமல் திரையரங்கில் நாட்டின்
வருங்கால கண்கள்…
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு
கற்றுத்தந்தவர் பெயர் தாங்கி
கலாச்சார சீர்கேடு…
ஏனிந்த முரண்பாடு…?

என்ன முரண்பாடிது..?
“பெரியார் சிலை”
உருவங்கள் வேண்டாமென்றார்..!
வழிபாடு கூடாதென்றார்…!
அவருக்கே சிலை வைத்து
மாலையுடன் வழிபாடு!
பகுத்தறிவு வார்த்தைகளை
பகுத்தறிய இயலாக் கூட்டம்
ஏனிந்த முரண்பாடு…?

என்ன முரண்பாடிது..?
“எம்.ஜி.ஆர் சமாதி”
ஏழை இல்லாதிருக்க
எல்லாம் செய்து
பாலர் பணி ஒழித்திட
பாடுபட்டவர் சமாதி-இன்று
சுண்டல் தொழிற்சாலையாய்…
வறுமை சாவின்
தூக்கு மேடையாய்…
ஏனிந்த முரண்பாடு…?


என்ன முரண்பாடிது..?
“காந்தி பீச்”
கஞ்சா விற்பவனின்
கடை முகவரி
அரசியல் ரவுடிகளின்
அரிவாள் பதுக்குமிடம்
அகிம்சை அன்பு
போதித்தவர் பெயர்தாங்கி
அனைத்தும் அராஜகங்கள்
ஏனிந்த முரண்பாடு…?

அக்னி அவதாரங்கள்




ஒளியின் மறு உருவே –அண்ட
வெளியின் முதல் உருவே இப்புவியில்
உனக்குத்தான் எத்தனை
அவதாரம்..?

முகம் சிவந்தால் கனல்-புவியை
முத்தமிட்டால் அனல்
கோபம் கொண்டால் தீ- திருக்
கோயில் என்றால் தீபம்
வெகுண்டெழுந்தால் சுவாலை-நீ
விளைந்திருந்தால் அது பாலை…

நீ சாதனையாளர்களை
சலனப்படுத்திய
அக்கினிப்பொறிகள்…
ஏவுகணையாய் எம் அபுல் கலாமை
இமயம் உயரச்செய்த
அக்கினிச் சிறகுகள்…
பார் புகழ எம் பாரதியை
பாட்டெழுதச் செய்த
அக்னிக் குஞ்சுகள்…

நீ எடுப்பார் கைப்பிள்ளை..!
தீவிரவாதிகளின் கலாபக்காதலி
கொள்ளையர்களின் குலவிளக்கு
அநாகரீக அரசியலின் குடிசை மாற்று வாரியம்..
அடுப்பில் உனை அடைத்தால்
அறுசுவை உணவு…
அணுவில் உனை அடைத்தால்
கருகிடும் உலகு..!
நீ எடுப்பார் கைப்பிள்ளை..!

நீ மானிடர்களின் சாபக்கேடு
அன்பாய் எம்மை அணைத்தாலும்
வம்பாய் போய்விடும்
பாசமாய் உனைத்தொட்ட போதும்
மோசமாய் போய்விடும்
நீ மானிடர்களின் சாபக்கேடு

நீ பாசக்காரப் பயல்
அடங்காப்பிடாரி உன்னை
அடக்க இருவரால் மட்டுமே இயலும்
ஒன்று உன் அன்னை மணல் –மற்றொன்று
உன் காதலி தண்ணீர்..!
எத்தனையோ பேரின் கண்ணீருக்கு
அடங்காதவன் உன் காதலி
தண்ணீருக்கு மட்டுமே அடங்குவாய்
அவள் அணைத்தால் மட்டுமே- நீ
அணைவாய்..
நீ பாசக்காரப் பயல்

அக்கினியே
அன்பாய் ஒரு வேண்டுகோள்
ஆக்கம் மட்டும் தொட்டு விடு
அழிக்கும் குணமதை விட்துவிடு
உன் நோக்கம் மட்டும் சரியானால்- இப்புவி
போற்றும் சக்தி நீ தானே..

என் காதலும் புனிதமானது தான்…!



“நமீஹா”
நான் உச்சரித்த உன்னதமான
பெயர்
நான் ரசித்த சிறந்த
கவிதை
நான் நேசிக்கும் அழகுப்
பதுமை

என் இறந்தகாலத்தின்
இறவா நினைவுகளை
இதயம் திறந்து
பார்க்கிறேன்…
அப்படியே பசுமையாய்
உன் நினைவுகள்
உன்னை அறிமுகப்படுத்திய
அந்த நிகழ்ச்சி
என் நெஞ்சில்
நிழலாடுகிறது…

அன்று வகுப்பறையில்
மதிப்பெண்கள் வருகிறது
வழக்கமாக என் பெயர் இருக்கும்
முதல் இடத்தில் ஒரு பெண் பெயர்
வாசித்தேன்
“நமீஹா”
யார் இந்த வசீகரமான
பெயருக்குச் சொந்தக்காரி..?
என்னுள் ஏதோ
ரசாயன மாற்றம்
எட்டாத வேகத்தில்
என் இதயத்துடிப்பு
எனக்கு என்னவாயிற்று…?
நான் ஏன் இப்படி
உணர்ச்சி வயப்படுகிறேன்..?

என் சிந்தனையெல்லாம் அந்த
முகம் காணாத பெண்ணின்
முந்தானைச் சுற்றித் திரிகிறதே…?
சிந்தனையின் முடிவில்
முகம் பார்க்காமலேயே உன்
முகவரி மனனம் செய்கிறேன்…

உனக்கு ஞாபகம் இருக்கிறதா…?
நாம் சந்தித்த அந்த
இனிய நிமிடங்கள்
பெயர் மட்டுமே தெரிந்த
தேவதையை சந்திக்கிறேன்
எத்தனை அழகு..!
அஜந்தா எல்லோரா ஓவியங்கள்
ஒரு பெண்ணாக
உருவெடுத்து விட்டனவா…?
மோனாலிஸாவை சித்திரத்தில்
கண்டு சித்தனாகியிருக்கிறேன்,
அது எப்படி என் நேரில்…?
நான் சித்திரமானேன்
என் இதயம் சிதறிக்கொண்டிருந்தது…

நீங்கள் தான் ……வா..?
ஒரு வாத்தியத்தை வாசித்தாற்ப்போல்
உன் வார்த்தைகள் செவி புகுந்து
என் இதயத்தின் அடிப்பாகத்த்ல்
அடைக்கலம் புகுந்தது…
உன் உச்சரிப்பில் என் பெயரின்
பெருமை உணர்ந்தேன்…
பெருமிதம் கொண்டேன்
வழக்கமான வார்த்தை
வெளிநடப்புக்கிடையே
ஆம் என்றேன்…

நம் சிநேகம் ஆரம்பித்தது…
நீ சிரிக்கும் போதெல்லாம்
நான் சிலையாகியிருக்கிறேன்
நீ வருந்தும் போது
வாத்தியமாகி சோகராகம்
வாசித்திருக்கிறேன்
நீ சினம் கொண்டால்
நான் சிதைந்திருக்கிறேன்
ஆனால் இதயம் திறக்கவில்லை
என்ன காரணம் ..?
எண்ணிப்பார்க்கிறேன்…
அச்சம்
என் அன்பின் பிணைப்பிற்கு பெயர்
காதல் என்று சொல்ல எனக்கு அச்சம்…

ஒரு வேளை நீ மறுத்தால்…
முயலவில்லை முடியவில்லை
என்பது வேறு
முயன்றும் முடிய வில்லை
என்பது வேறு
உன் விசயத்தில்
முயலவில்லை முடியவில்லை
என்று கூறவே ஆசைப்பட்டேன்
உன் இதயக் கோட்டையை
கைப்பற்ற வேண்டும் என்பதை விட
குப்பை என்று எனக்கு நீ
குட்பை சொல்லி விடக்கூடாது
என்பதிலேயே குறியாக
இருந்தேன் …
நாட்கள் நகர்ந்தன
பள்ளி இறுதி நாளும் வந்தது
பசுமை யான நினைவுகளோடு
பிரிந்தோம்…

பிரிவது கொஞ்சம் சாவது போல
எனும் பிரான்ஸ் பழமொழிக்கு
அன்று அர்த்தம் புரிந்தது
அன்று என் கண்கள்
நீங்கிச்சென்றவள்
இன்றும் என் கண்களில்
கண்ணீராய்…

என் இதயத்தில் உன் நினைவுகள்
நிழலாடும் போதெல்லாம்
என் விழித்திரையில் கண்ணீர்த்துளிகள்
தள்ளாடுகின்றன….

உன்னை நினைத்துக் கதறி
அழத்தோன்றியது…
என் ஆண்மை தடுத்தது
காணும் இடமெல்லாம்
உன் பெயர் கதறத் தூண்டியது
என் தன்மானம் தடை விதித்தது

உன்னை மறக்க முயற்சித்தேன்…
சாலையில் செல்லும் மனங்கவர்
மகளிர் பார்த்தால் உன் ஞாபகம்
சோலையில் பூக்கும் மணங்கவர்
மலர்கள் பார்த்தால் உன் ஞாபகம்
எப்படி முடியும் உன்னை மறக்க…?

மணலைப் பார்த்தால்
உன் பெயர் எழுதினேன்
மழலை பார்த்தால்
உன் பெயர் சூட்டினேன்
கடலைப் பார்த்தால்
உன் பெயர் கதறினேன்
கலையைப் பார்த்தால்
உன் பெயரிட்டேன்
எப்படி முடியும் உன்னை மறக்க…?

உன்னை சந்தித்த நாட்களை விட
உனை சிந்தித்த நாட்களே அதிகம்
உன்னை எண்ணும் போதெல்லாம்
தூரிகை ஒன்று என் இதயமெங்கும்
ஸ்லோமோஷனில் உன்னை
வர்ணம் தீட்டுகிறது…
அது என் இதயம் மட்டும்
அறிந்த ஒவியம்…!

பாவம் உலகப்புகழ்
ஓவியர்களுக்குக் கொடுத்து வைக்கவில்லை…
ரவிவர்மா உனை சந்தித்திருந்தால்
வேறு ஓவியத்தை சிந்தித்திருக்க மாட்டான்
லியானோர் டாவின்சி உனை கண்டிருந்தால்
உனை வரைந்து மோனோலிஸா என்றிருப்பான்
பிக்காஸோ உனை பார்த்திருந்தால்
நீயே என் ஆயுள் மாடலென்று போற்றிருப்பான்
பாவம் உலகப்புகழ்
ஓவியர்களுக்குக் கொடுத்து வைக்கவில்லை…

உன் நினைவுகள் கரையான்களாய்
இருந்திருந்தால்
இன்று என் இதயம் முழுதும்
அரிக்கப்பட்டிருக்கும்
உன் நினைவுகள் இனிப்புகளாய்
இருந்திருந்தால்
என்றோ நான் சக்கரை நோயாளியாய்
செத்திருப்பேன்
உன் நினைவுகள் வார்த்தைக்கும்
வரிக்கும் கட்டுப்படாதது

இப்படி உனை எண்ணி எண்ணி
இறந்து கொண்டிருந்த போது தான்
என் செவிக்கெட்டி
இதயம் பிளந்தது
‘நீ வேறொருவனை காதலிக்கிறாய்’என்ற
அந்த வார்த்தை அம்புகள்
உண்மையில் முடியவில்லை
என்னால் நம்பமுடியவில்லை
அவன் மீண்டும் உறுதிபடுத்தினான்
என் உறுப்புகள் உயிரிழந்தன
உள்ளமது ஊமையானது
என்னை அறியாமல் வெளியான
கண்ணீர்..அல்ல அல்ல
கண்களிலிருந்து வரும் தண்ணீர்
அல்லவா கண்ணீர்
இதயத்திலிருந்து கண்களுக்குப்
பொங்கும் குருதித்திரவத்திற்க்கு
என்ன பெயர்…?
பெயர் தெரியாத திரவம்
என் கண்களில்
மீண்டும் உறுதிப்படுத்தினான்
இடி விழுந்தது என் இதயத்தில்
இடிந்து விழுந்தது என் இதயக்கோட்டை
எனக்கு மட்டுமே சொந்தம் என்று
என்று எண்ணிக்கொண்டிருந்தவள்
இன்று வேறொருவனுக்கு சொந்தம்
என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள
இயலவில்லை…

என் இதய அரியணையில் என்றோ
ராணியானவள் இன்று
வேறொருவன் இதயத்தில் மகாராணி
என்பது மனதுக்கொப்பவில்லை…

உனை இன்னொருத்தன்
காதலிக்கிறான்
என்பதை என் இதயம் தாங்கும்
பலாச்சுளைகளில் ஈக்கள்
மொய்ப்பதற்க்கு தடா போட முடியுமா
ஆனால் நீ இன்னொருத்தனை
காதலிக்கிறாய் என்பதைத்தான்
என்னால் தாங்க இயலவில்லை
இலவு காத்த கிளியாக மாற
எனக்கு சம்மதமில்லை

கதறி அழுதேன்…இதயத்துள்
வேறு என்ன செய்ய இயலும்…?
ஆனால் மறந்து விட வில்லையே…
எப்படி முடியும் அந்த இனிய
நிகழ்வுகளை மறக்க
எப்படி முடியும்…?

தமிழில் உயிர் எழுத்து எத்தனை
என்றால் மூன்று என்கிறேன்
ஆங்கிலத்தில் கேட்டால்
ஏழு என்கிறேன்

மற்றவர்களுக்கு வேண்டுமானால்
இது வேடிக்கை யாக இருக்கலாம்
உன் பெயரில் இடம்பெற்ற
எழுத்துக்கள் தான் எனக்கு உயிர்
எழுத்துக்கள் என்று அவர்கட்கு
தெரிய வாய்ப்பில்லை தான்…

உண்மையில் அந்த எழுத்துக்கள் தான்
தவம் செய்திருக்க வேண்டும்
உனக்கு பெயரமைத்துக் கொடுத்ததற்க்கு

உனக்குத்தெரியுமா
உன்னால் நேசிக்கபபட்டவன்
என்று தெரிந்த பின்புதான் உன் காதலனையும்
நேசிக்க ஆரம்பித்தேன்
நீ நேசித்தது விஷ ஜந்து என்றாலும்
அதையும் பூஜிப்பேன்…

என் காதலை மறக்க
செத்து மடி என்றாளும்
அதையும் செய்வேன்
ஆனால் தற்கொலைக்குத்
தேர்ந்தெடுக்கும் விஷத்தில் கூட
உன் பெயரின் எழுத்துக்கள்
எங்கேனும் உள்ளனவா..?என்று
தேர்ந்தெடுத்துதான் குடிப்பேன்
சாவிலும் உன் நினைவு
என்னை இன்னொரு முறை
வாழ வைக்கும் எனும்
சூத்திரம் அறிந்தவன் நான்…

நண்பர்கள் உனை மறந்துவிடச்
சொன்னார்கள்…முயற்சித்தேன்
உனை மறக்க முயன்ற ஒவ்வொரு
நொடியும் நீ என் நினைவில் நின்றாய்….

காலை விழித்தது
காபி தந்தாய்
குளிக்கும் போது முதுகு தேய்த்தாய்
குளித்து முடிந்ததும் தலை துவட்டினாய்
உன் உணவை எனக்கூட்டி
உன் மடியை தலையனையாக்கி
எனை உறங்க வைத்தாய்
இப்படி என் அன்றாட வேலை கூட
உன்னால் செய்யப்படுவதாய் பிரமை…

முயற்சித்தேன்..மீண்டும் மீண்டும்
முயற்சித்தேன்..
மில்லி மீட்டர் மீல்லி மீட்டராய்
என் இதயம் விட்டு இடம் பெயர்ந்தாய்

நீ முழுமையாக என் இதயம் விட்டு
நகரும் நாள் என் வாழ்நாளின்
முடிவு நாள் என்பதை நான் அறிவேன
இருந்தாலும் முயற்சிப்பேன்
ஒரு நாள் என் இதயத்தில்
நீ ஆழமாக அறைந்த
ஆணியை அகற்றி விடுவேன்
என்ற நம்பிக்கை எனக்குள்ளது
ஆனால் அதன் காயம்
நான் சாகும் வரை
ஈரமாகவே இருக்கும்
இரத்தக் கசிவுடன்…!


“ஏமாற்றிய இதயத்தின்
வஞ்சகத்தை அறிந்த பின்பும்
நேசிக்கும் வரை
காதல் புனிதமானது தான்”
என்று என்றோ படித்த ஞாபகம்
உன் இதயம் வேறொருவனை
நேசிக்கிறது என்பதை
அறிந்த பின்னும் உன்னை
நேசிக்கும் வரை
என் காதலும் புனிதமானது தான்…!


Related Posts with Thumbnails