விடை தெரியாத பள்ளிப் பருவக் காதல்..!

விடை தெரியா வினா...!?


“எனக்கு நீ யார்...?”
பள்ளி இறுதி நாளில்
உன்னை நான் கேட்டேன்
விடையென்று நீ உதிர்த்துச்
சென்ற உன் உதட்டுப்
புன்னகை இன்னும்
விடை தெரியாமல்
என்னுள்
புதைந்து கிடைக்கிறது…

என் கேள்விகள்
எத்தனைப்பக்கங்களானாலும்
உன் பதில் என்னவோ
மௌனம் கலந்த ஒரு
புன்னகை தான்...
அத்தனை கேள்விகளும் உன்
ஒரு அங்குல புன்னகை
முன் மண்டியிடும் மர்மமென்ன...?

எத்தனையோ முறை
நீ கேட்டு விடுவாயோ என்று
பக்க பக்கமாக
பதில் தயாரித்து வருவேன்
அத்தனை முறையும
நீ என் பெயரைக் கேட்டால் கூட
விடை தெரியாமல்
விழிப்பேன்…
உன் பார்வை என்னும்
காந்த அலையில்
என் மூளை நரம்புகள்
முடக்கப்படுவது
இயற்கை தானே...?

கோனார் தமிழ்
உரை போல
காதலுக்கும் ஒரு
வழி காட்டியிருதிருந்தால்
அதுவாவது என் காதலுக்கு
ஒளி காட்டியாக
இருந்திருக்கும்

கவிதை
நீ கற்றுத்தந்த பாடம்...
உன் மௌனத்தை
மொழி பெயர்த்தேன்
எல்லோரும் என்னை
கவிஞனென்றார்கள்...
உண்மையில் நானொரு
மொழிபெயர்ப்பாளன்
என்பது எனக்கு உனக்கும்
மட்டுமே தெரிந்த உண்மை...

ஒரு திருவிழாவில்
மீண்டும் நாம்
சந்தித்துக் கொண்டோம்
உன் கணவனுடன்…
என் மனைவியுடன்…
“யாரம்மா இது..?”
உன் மகள்..
அன்று விட்டுச்சென்ற
புன்னகை
உன் உதட்டை
மீண்டும் தொட்டுச்சென்றது..
ஒரு கேள்விக்கு இன்னொரு கேள்வி..
என்றாலும்
விடை கிடைத்த திருப்தியுடன்
மற்றவர்கள்...
விடை தெரியாத
வினாவுடன் நான்....

( அமீரகத்தில் வெளிவரும் "தமிழ்த்தேர்" மாத இதழுக்காக "வினாவும் விடையும்" கவிதைத் தலைப்பிற்கு எழுதப்பட்ட கவிதை இது.)

21 comments:

சென்ஷி said...

கவிதையுடன் இணைந்த புகைப்படங்கள் அருமை!

சீதாலட்சுமி said...

உன் கவிதை கண்டு மகிழ்ந்தேன்.
அன்று தொட்டில் குழந்தை.
இன்றோ எட்டாத இடத்தில் நிற்கின்றாய்.விண்ணைப் பார்க்கின்றேன்.
அங்கே நான் கண்ட நட்சத்திர முத்துக்களைப் பறித்து வந்தேன்
உனக்கு இந்தம்மா கொடுக்கும்
பரிசுப்பூக்கள்
என் கண்ணே ராசா
நிறைய எழுது .இதுவே அம்மாவின் ஆசை
சீதாம்மா

கிளியனூர் இஸ்மத் said...

ராஸா....என்ன காலேஜ் அனுபவமா...?

தமிழ்தேர் அரங்கில் ரிலீஸ் ஆகவேண்டிய கவிதையை திருட்டு வீசீடி மாதிரி ரிலீஸ் ஆவதற்கு முன்னாடியே பிளாக்குல போட்டுடீங்களே....

அபுஅஃப்ஸர் said...

பள்ளிக்காலத்தில் ஆரம்பித்த காதல் எல்லோரு மனதிலும் ஆழப்பதிந்த ஒன்று, அதை கவிதையில் அழகா சொல்லிருக்கீங்க‌

துபாய் ராஜா said...

மிகவும் ரசித்து,ருசித்து,பள்ளி பருவ காதலை நினைத்து மனதை விசிக்க வைத்த கவிதை..

ஆரம்பமே அட்டகாசம். அற்புதம். அருமை.தூள். கொல்லு தமாம். மியா மியான்னு எல்லாம் சும்மா வாய் வார்த்தையாய் வாழ்த்திட்டு போக என் கவிமனம் ஒப்பாததால் உங்கள் வரிகளை தொடர்ந்து கீழே எனது வரிகளையும் கொடுத்துள்ளேன் நண்பரே....

துபாய் ராஜா said...

//“எனக்கு நீ யார்...?”
பள்ளி இறுதி நாளில்
உன்னை நான் கேட்டேன்
விடையென்று நீ உதிர்த்துச்
சென்ற உன் உதட்டுப்
புன்னகை இன்னும்
விடை தெரியாமல்
என்னுள்
புதைந்து கிடைக்கிறது…//


அவள் அன்று சிந்திய
புன்னகை விதையாய்
விழுந்து விருட்சமாய்
விஸ்வரூபம் எடுத்து
நிற்குது என் இதயத்தில்.....

துபாய் ராஜா said...

//என் கேள்விகள்
எத்தனைப்பக்கங்களானாலும்
உன் பதில் என்னவோ
மௌனம் கலந்த ஒரு
புன்னகை தான்...
அத்தனை கேள்விகளும் உன்
ஒரு அங்குல புன்னகை
முன் மண்டியிடும் மர்மமென்ன..?//

அவளது ஒரு புன்னகை
புண்ணாக்கி மண்கவ்வச் செய்தது
எனது ஆயிரமாயிரம் கேள்விகளை...

துபாய் ராஜா said...

//எத்தனையோ முறை
நீ கேட்டு விடுவாயோ என்று
பக்க பக்கமாக
பதில் தயாரித்து வருவேன்
அத்தனை முறையும
நீ என் பெயரைக் கேட்டால் கூட
விடை தெரியாமல்
விழிப்பேன்…
உன் பார்வை என்னும்
காந்த அலையில்
என் மூளை நரம்புகள்
முடக்கப்படுவது
இயற்கை தானே...?//


நீ காந்தக்கன்னியா இல்லை
காந்தக்'கண்ணியா' என
உன்னைக்காணும் போதெல்லாம்
கருத்துவிவாதம் நடத்துது
என் மனம்.....

துபாய் ராஜா said...

//கோனார் தமிழ்
உரை போல
காதலுக்கும் ஒரு
வழி காட்டியிருதிருந்தால்
அதுவாவது என் காதலுக்கு
ஒளி காட்டியாக
இருந்திருக்கும்//

ஒளி காட்ட மறுத்து
ஏன் விழி மூடச்செய்தாய்
என் காதலை....

துபாய் ராஜா said...

//கவிதை
நீ கற்றுத்தந்த பாடம்...
உன் மௌனத்தை
மொழி பெயர்த்தேன்
எல்லோரும் என்னை
கவிஞனென்றார்கள்...
உண்மையில் நானொரு
மொழிபெயர்ப்பாளன்
என்பது எனக்கு உனக்கும்
மட்டுமே தெரிந்த உண்மை...//

உலகமொழியெல்லாம்
கற்பது கடினம் அல்ல...
உன் உள்ளத்து மவுனமொழி
கற்பதுதான் மிக மிக கடினம்...

துபாய் ராஜா said...

//ஒரு திருவிழாவில்
மீண்டும் நாம்
சந்தித்துக் கொண்டோம்
உன் கணவனுடன்…
என் மனைவியுடன்…
“யாரம்மா இது..?”
உன் மகள்..
அன்று விட்டுச்சென்ற
புன்னகை
உன் உதட்டை
மீண்டும் தொட்டுச்சென்றது..
ஒரு கேள்விக்கு இன்னொரு கேள்வி..
என்றாலும்
விடை கிடைத்த திருப்தியுடன்
மற்றவர்கள்...
விடை தெரியாத
வினாவுடன் நான்....//

உறவே இல்லாத நமது உறவிற்கு
ஊர் வாய் மூட நீ வைத்த
பள்ளி நண்பன் எனும் பெயர்...
என் உள்ளத்தை கிள்ளி
உறங்கவிடாமல் துள்ளி
எழ வைத்தது உன்னுடனான
எனது பள்ளி காலநினைவுகளை...

நட்புடன் ஜமால் said...

ராஸா ... ராஸா

எங்க கீழை ராஸா

உங்க கவிதை வரிகள்

அனைத்தும் அழகிய ரோஸா

------------------
படங்களும் அருமை.

----------------

வெற்றி பெற வாழ்த்துகள்.

ஹேமா said...

கவிதையின் கரு அதன் குணாதிசயாமும் நல்லா இருக்கு.இன்னும் சுருக்கி அழகுபடுத்தியிருக்கலாமோன்னு இருக்கு எனக்கு.

R.Gopi said...

ராசா

அங்க ரிலீஸ் ஆவுது, இங்க ரிலீஸ் ஆவுதுன்னு சொல்லி, இப்போ இங்க ரிலீஸ் பண்ணிட்டியேப்பா....

இது நியாயமா??

எது எப்படியோ... கவுஜ சூப்பரு.........தல‌

சங்கர் said...

அற்புதமான படைப்புகள் வாழ்த்துக்கள் !நண்பர்களே இதுவரை திருடப்படாதா உங்கள் குட்டி இதயங்களையும் சத்தம் இல்லாமல் திருடி செல்ல விரைவில் வருகிறது இந்த சங்கரின் அதிரடி படைப்பான கரை தொடாத கனவுகள் உண்மை சம்பவங்கள் ஒரு தொடர்கதையாக ,,,,
http://wwwrasigancom.blogspot.com/
shankarp071@gmail.com

அன்புடன் மலிக்கா said...

கவிதையும் அதன் கருவும் அருமை
வாழ்த்துக்கள்.. கீழை ராசா

மலர்வனம் said...

Inimaiyana Kavithai...
Padankalum Kavithai...
- Trichy Syed

rukshanabarveen said...

kavithai nalla eruku ethu ur schoollife story ya unmaisollanum

கீழை ராஸா said...

வருகை தந்து பின்னூட்டங்கள் தந்த உங்கள் அனைவருக்கும் நன்றி...

ஒரு விசயத்தை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்...சகோதரி ருக்சானா கேட்டதை போல் இதைப்படிக்கும் பெரும்பாலானோர் இது உங்கள் சொந்த அனுபவமா..? என்று தான் கேட்கிறார்கள் அவர்கள் அனைவருக்கு ம் நான் சொல்லும் ஒரு விசயம்...எழுத்தாளன் என்பவன் கூடு விட்டு கூடு பாயும் கலை உணர்ந்தவன்...அவனால் அப்படி செய்ய முடிந்தால் மட்டுமே அது உண்மையான எழுத்தாக இருக்க இயலும்....நாளையே "இறப்பு "
என்றொரு தலைப்பு தந்தால் அதையும் எழுதுகிறேன் என்பதால் அதை நான் இறந்து அனுபவித்து தான் எழுத முடியும் என்றால் எப்படி...? கவிப்பேரரசு கருவாச்சிகாவியத்தில் ஒரு பெண் பிரசவமாவதை அப்படி வர்ணித்திருப்பார்...அவர் அந்த வேதனையை அனுபவித்தா எழுதினார்...? அவர் தானா நீ என்று அடுத்த கேள்வி எழும் என்றாலும் விளக்கத்திற்கு அதையும் குறிப்பிட வேண்டியுள்ளது...இது போலத்தான் நான் எழுதிய சிறகு தொலைத்த சிட்டுக்குருவிகள் கதையையும் உங்கள் கதையா ? என்று கேட்டார்கள்...அந்தக் கதைக்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றாலும்....

அந்த வகையில் இது உண்மை என்று நம்பும் விதமாக என் படைப்பு இருக்கிறதென்பது மனதிற்கு சந்தோசம் தான் என்றாலும் இது உண்மை கதை அல்ல...

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி...

பேநா மூடி said...

கவிதை அழகு.. அருமை...
படங்களும் அருமை...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

நல்ல கவிதை, வாழ்த்துகள்!

Related Posts with Thumbnails