ஒரு எழுத்தாளனின் “அவதார்”

நான் தாங்க மாதவன். சிறுகதை எழுத்தாளர் மாதவன்னு சொன்னா உங்க எல்லோருக்கும் தெரியும்.நூற்றுக்கும் மேலே சிறுகதைகள் எழுதி பல சிறுகதைகளுக்குப் பரிசும் பாராட்டுக்களும் பெற்றவன் என்றாலும் என் மனைவிக்கு மட்டும் என்னைத் தன் கணவனாக மட்டுமே அடையாளம் தெரியும்..சமீபத்தில் விபசாரத்தை மையமாக வைத்து நான் எழுதிய “சிகப்பு கனவுகள்” என்ற கதை ஊரெல்லாம் பாராட்டுப் பெற என் வீட்டில் எனக்குக் கிடைத்த வித்தியாசமான பாராட்டைத்தான் நீங்க இப்ப பார்க்கப் போறீங்க….

“இந்தா பாரு வினி இப்ப என்ன நடந்துடுச்சுன்னு இப்படி குதிக்குறே”
“ இனி என்ன நடக்கனும், விபசாரத்தைப் பத்தி கதை எழுதறேன்னு அப்படியே தத்ரூபமா எழுதி இருக்கீங்க…இந்த மாதிரி அனுபவம் இல்லாமே எழுத முடியாதுன்னு என் ஃப்ரண்ட்ஸ் எல்லாம் சொல்றாங்க, அவமானமா இருக்கு…”

“ஏன் இப்படி அப்பிராணியா இருக்கே…எழுத்துன்றது ஒரு தனி உலகம், எந்த எழுத்தாளன், தான் எழுதப்போற கதாபாத்திரமா கூடு விட்டு கூடு பாய்ந்து எழுத முடியுதோ அவன் தான் சிறந்த எழுத்தாளன். நாளைக்கே நான் சாவைப் பற்றி ஒரு கதை எழுதுனா, செத்து அனுபவித்து தான் எழுதுவேன்னு சொல்ல முடியுமா..?

"இப்படி எதையாவது லெக்சர் பண்ணி என் வாயை அடைச்சிடுங்க…எதை எழுதுறதுன்னு வரைமுறை இல்லாமல் இப்படி கண்டவளையும் பத்தியும் எழுதுன்னா உங்க எழுத்தாளர் கூட்டம் வேணுமானா உங்களை மெச்சிக்கலாம் ஆனா உலகம் காரித் துப்பும்."

“நீ ஒரு எழுத்தாளனுக்கு மனைவியாக இருக்கத் தகுதி இல்லாதவள்” கோபத்தில் வார்த்தைகள் வெடித்தது.

“முதல்லே நீங்க ஒரு பொண்ணுக்கு நல்ல கணவனா இருங்க அப்புறமா எழுத்தாளனா இருக்கலாம்” பதிலுக்குப் பதில்

“உனக்கு நான் என்ன எழுதுனேன்னு தெரியாது உனக்கு படிக்கிற பழக்கமும் கிடையாது. பின்னே யாரு சொல்லி இப்படி பேயாடுறே…?”

“யாரும் சொல்லலை அந்த கன்றாவியை நானே படிச்சேன்”

என்னுள் ஆச்சரியம்…எத்தனையோ முறை என் எழுத்துக்களை அவளைப் படிக்கச் சொல்லி வற்புறுத்திய போதும் இதெல்லாம் எனக்கு இண்ட்ரஸ்ட் இல்லை என்று தட்டிக்கழித்தவள் இன்று அவளாகப் படித்தாளா..?!!

எனக்கு வார்த்தைகள் வரவில்லை அவள் தொடர்ந்தாள்.

“அது என்னங்க அவ ஜாக்கெட் தைக்க எத்தனை மீட்டர் துணிவேணுங்கறதிலே இருந்து அவ பிரா எந்த ப்ராண்டுங்கற வரை ஒரு கேவலமான வர்ணனை… இதுவெல்லாம் கற்பனைன்னு சொல்லுவீங்க நான் நம்பனும்…? “லேசாக விசும்ப ஆரம்பித்தாள்…

இந்த விசும்பல் தானே பெண்களுக்கு ஆண்கள் இதயத்தை பதம் பார்க்க்கும் ஆயுதம்…இனி என்ன சொன்னாலும் இவளுக்குப் புரியாது…


சத்தம் கேட்டு, தூங்கிக் கொண்டிருந்த என் ஐந்து வயது மகன் கண் விழித்தான்.
“ ஏம்மா அழறே..”
“எல்லாம் என் தலை விதி”
அவனுக்குப் புரியவில்லை…ஆனால் நான் சொல்ல வேண்டியதை அவள் சொல்கிறாள் என்பது மட்டும் எனக்குப் புரிந்தது..

“இப்ப நான் என்ன பண்ணவேண்டும்…” பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாகக் கேட்டேன்.

“இனி நீங்க எழுதக்கூடாது“

இவ்வளவு பெரிய தண்டனையை எதிர்பார்க்க வில்லை. எனக்கு கோபம் சுளீரென்று ஏறியது….

“கழுதை, கழுதை, கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை…?” என்ற படி அந்த இரவில் சடாரென்று கதவைச் சாத்தியபடி வெளியானேன்.அங்கிருந்தால் மிருகமாகி விடுவேனென்றே தோன்றியது…

“போங்க போங்க எவ கூடயாவது போயி அடுத்த கதைக்கு ரெடி பண்ணிக்கிட்டு வாங்க…”

அவள் பின்னாலிருந்து கத்துவது தெருவில் கேட்டது…தெரு விளக்கும் நிலா வெளிச்சமும் கலந்த வெளிச்சத்தில் சாலை…தூரத்தில் நாயின் ஊளை…எங்கே செல்கிறோம் என்று தெரியாத நடை…


வினிதா நான் காதலித்து மணந்த மனைவி…காதலிக்கும் போது அவளுக்குப் பிடித்ததெல்லாம் எனக்குப் பிடிக்கும்…எனக்குப் பிடித்ததெல்லாம் அவளுக்குப் பிடிக்கும்…காதலுக்கு கண் கிடையாது அல்லவா…?

என்றாளும் என் எழுத்தில் மட்டும் அவள் ஆரம்பத்திலிருதே ஆர்வம் காட்டியதில்லை.படிப்பதென்றாலே அவளுக்கு அலர்ஜி.ஆரம்பத்தில் நானும் கண்டு கொள்ளவில்லை.அப்புறம் என் எழுத்துக்கள் எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்டு ஊரே பாராட்டும் போது…அவளிடம் இருந்தும் சில எதிர்பார்ப்புகள் வர ஆரம்பித்தது…மற்றபடி எல்லாவற்றிலும் எனக்கு மிகப் பொருத்தமானவள். அன்பு காட்டுவதில் அழகான ராட்சஷி.

கோபம் சற்று குறைந்திருந்தது…சே அவசரப் பட்டு விட்டோமோ…நாம் செய்தது சரியா…? கதையை மனதிற்குள் மீண்டும் ஓட்டிப் பார்த்துக் கொண்டேன்.’சற்று அதிகமாகத்தான் போய் விட்டோமோ…?இருந்தாலும் அந்தக்கதை விபச்சார ஒழிப்பு சம்பந்தப் பட்ட தாயிற்றே…அந்த நல்ல விசயம் ஏன் அவள் கண்ணுக்குப் படவில்லை…?’

சில நாட்களுக்கு முன் “நீயா நானா..?” நிகழ்ச்சியில் கோபினாத் சொன்னது நினைவிற்கு வந்தது. நாங்கள் சுதந்திரமாக இருக்கக் கணவர்கள் அனுமதிப்பதில்லை என்ற மனைவிமார்களின் குற்றச்சாட்டுகளுக்கு அவர், இந்திய ஆண்கள் தன் மனைவி பற்றி சமூகம் ஏதும் தவறாகச் சொல்லி விடக்கூடாது என்பதற்காகத்தான் அப்படி செய்கிறார்கள்.. என்ற போது என் மனமும் ஆமோதித்தது…இப்போது அதையேத்தான் வினிதா செய்திருக்கிறாள்…தன் கணவன் பற்றி மற்றவர்கள் குறை ஏதும் கூறிவிடக்கூடாது என்பதற்காக…ஒரு குடும்பத்தலைவியாக இருந்து சிந்தித்த போது என் தவறு எனக்குப் புரிந்தது…

நாம் இறங்கிப் போகலாமா? தவறில்லை எத்தனையோ முறை அவளை காயப்படுத்திய போதும், உதாசீனப்படுத்திய போதும், சிறிதும் ஈகோ பார்க்காமல் “ உனக்கும் ரொமாண்டிக்கும் ரொம்ப தூரம் உன்னைப் போய் நான் ஏன் லவ் பண்ணினேனோ ? என்று கலாய்த்த படி என்னை சீண்டும் போது, முகத்தில் சிரிப்பை அடக்கி உம்மென்ன்று இருக்க முயற்சிக்கும் என்னை சிரிக்க வைக்கும் பல முயற்சிகளை எண்ணிப்பார்த்தேன்…அவளா?எழுத்தா? என்று வந்தால் எனக்கு அவள் தானே முக்கியம்…நீண்ட பெருமூச்சு விட்டேன்…என் கோபம் முற்றிலும் மறைந்திருந்தது…

வீடு திரும்பினேன்…அவள் முகம் திருப்பினாள்….

“நான் இனி எழுதப்போவதில்லை”

நீண்ட மௌனம் விடியும் வரை…

காலையில் இயல்பு நிலைக்குத் திரும்பினாள்…அதன் பின் அப்படி ஒரு நிகழ்வு நிகழ்ததாக அவள் காட்டிக் கொள்ளவில்லை…ஒரு வாரம் பத்திரிக்கை நண்பர்கள் என்ன எதுவும் எழுத வில்லையா? என்ற போது வேலை பளுவின் மீது பழி போட்டு தப்பித்தேன்…என் மனைவி சொன்னால் நான் எழுத வில்லை என்றா சொல்ல முடியும்…?
அன்று இரவு, அவள் மெதுவாக ஆரம்பித்தாள்
“நான் உங்க கிட்டே மன்னிப்பு கேட்கனும்”

“எதுக்கு”

உங்களை எழுத வேண்டாமென்று சொன்னதுக்கு…”

மௌனம்

நீங்க மறுபடியும் எழுதணும்..”
“ஏன் இந்த ஞான உதயம்”

“ இன்னிக்கு “கிளப்”பிளே ஒரு பொண்ணைப் பார்த்தேன்…அவங்க கணவனை விட்டுப் பிரிஞ்சி இருந்ததாகவும் உங்க கதை ஒன்றை படிச்சி அதனாலே சேர்ந்து இப்ப அவ்வளவு அன்னியோன்யமா இருப்பதாகவும் சொன்னாங்க வீட்டிலே வந்து படிச்சேன்…கணவன் மனைவி எப்படி இருக்கனும் என்பதற்கு அப்படி ஒரு உதாரணக் கதை அது…நீங்க எப்படியெல்லாம் என் கிட்டே ரொமான்டிக்கா இருக்கனும் என்று நினைக்கிறேனோ அதுக்கு ஒரு படி மேலே அந்த கதை இருந்தது… ஆனா நீங்க ஒரு முறை கூட என்கிட்டே அப்படி நடந்ததில்லை,ரொமாண்டிக் கிலோ என்ன விலை..?ன்னு கேட்கிற நீங்களா அதை எழுதினீங்கன்னு யோசித்தேன் அப்ப தான் எனக்கு புரிந்தது நீங்க எதையும் அனுபவிச்சி எழுதுறதில்லை எல்லாம் கற்பனைதான்னு…சாரி நான் தான் உங்களை தப்பா புரிஞ்சிக்கிட்டேன்…நீங்க நிறைய எழுதனும்…”

அவள் பேசிக் கொண்டே போக ஒரு எழுத்தாளனாகத் தலை நிமிர்ந்து, ஒரு கணவனாகத் தலை குனிந்தேன்.

பதிவர்கள் நடித்த குறும்(பு) படம் (காணொளியுடன்) 99% நகைச்சுவை கேரண்டி

"அண்ணாச்சி படத்தை எப்ப வெளியிடலாம்..?"

"டிசம்பர் 18"
அதிர்ந்து போனேன்...என்ன டிசம்பர் 18 ஆ...அவதார், வேட்டைக்காரன் படவெளியீடு என்று உலகத் திரைவுலகமே அதிர்ந்து கொண்டிருந்த
டிசம்பர் 18 இந்தக் குறும்(பு) படம் ரிலீஸா...? இவர் தெரிந்து சொல்கிறாரா...? இல்லை நம்மை நிராகதியாக்க திட்டம் போடுகிறாரா...?இருந்தாலும் துணிந்து ஏற்பாடுகளில் இறங்கினோம்...ஒருவாரம் நண்பர்கள் முகவை முகில், ஊமையன் ஹக்கிம், சிம்ம பாரதி மற்றும் ரியாஸ் பாய் ( கிறுக்கல்கள் ஜெஸீலா கணவர்) போன்றோரின் அயரா உழைப்பில் சத்திரம் திரையரங்கம் ஏ/சி தயார் செய்யப்பட்டது....


(போஸ்டர் வடிவமைப்பாளருக்கு ஆணிகள் சற்று அதிகமானதால் கடைசி நொடியில் இந்த போஸ்ட்டரை நானே வடிவமைக்க வேண்டியாதாயிற்று...என்ன எதோ பரவாயில்லையா?)
பதிவர்களுக்கு வழக்கம் போலக் குழுமத்தில் அண்ணாச்சி அழைப்பு விட எதிர்பாராத அளவிற்கு அமோக வரவேற்பு...( பதிவில் அழைப்பு விட திரையரங்கு அளவு இடம் தரவில்லை) பதிவர்கள் குடும்பத்தினருடன் சேர்த்து 30 பேர் முன்பதிவு செய்ய ஹவுஸ் புல் பலகை மாற்றப் பட்டது.என்றாலும் எனக்கு உள்ளுக்குள் ஒரு பயம்...அண்ணாச்சி இது சரி வருமா..? என்றேன்.
"கப்பித்தனமா பேசிக்கிட்டு இருக்காமே வேலையைப் பாருன்னு" சொல்லிட்டாரு...
2009 டிசம்பர் 18 வெள்ளிக்கிழமை...

12 மணிக்கே எல்லோரும் வந்து குழுமினர்...ஒரு தடவை முடிவு பண்ணிட்டேன்னா என் பேச்சை நானே கேட்க மாட்டேன்னு நாங்க சொல்லிக்கிட்டு திரிந்தாலும் உண்மையில் வருகை தந்த பதிவர்கள் அதை நிருபித்தார்கள்...
இந்த முறை இஸ்மத் பாய் பிரியாணி சட்டியை ரியாஸ்பாய் கைப்பற்ற முயல பெரும் போராட்டத்திற்கு பின் இஸ்மத்பாயே பிரியாணிச் சட்டியை கைப்பற்றினார்.


(இந்த முறை சரி அடுத்த முறை நான் தான் ஆமா, என்று அமந்திருப்பவர் ரியாஸ் பாய், பிரியாணியுடன் வெற்றிகளிப்பில் அமர்ந்திருப்பவர் இஸ்மத் பாய்)
சரியாக 2:30 மணிக்கு படம் ஆரம்பிக்கப்பட்டது...பதிவர்களின் ஆரவாரத்துடன் 30 நிமிடங்கள் ஓடியது...எல்லோர் முகத்திலும் சந்தோசம். இதைத்தானே எதிர் பார்த்தது...படம் முடிந்ததும் பாராட்ட ஒன்று கூடிய பதிவர்கள் என்னைத் திக்குமுக்காட செய்ய ஒரு வழியாக எஸ்கேப்...( எனக்கு கொஞ்சம் கூச்ச சுபாவம்! )

அடுத்து சில நிமிடங்களில் இதில் கலந்து கொள்ள சிறப்பு விருந்தினராக வந்திருந்த இலங்கையைச் சார்ந்த காவியப் புலவர் டாக்டர் ஜின்னாஹ் சர்புதீன் அவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது. அதன் பின் உரையாற்றிய அவர் தன் உரையில்,
“எத்தனையோ வேறுபாடுகளை நீங்கள் கொண்டிருந்தாலும் நீங்கள் இங்கு வந்து தமிழால் இணைந்திருப்பதைக் கண்டு பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.இது போன்ற நிகழ்வுகளின் பதிவு எதிர்காலத்தில் எண்ணிப்பார்க்க இனிமையானது.இந்நிகழ்வில் நானும் ஒரு இளைஞனாக உங்களுடன் பங்கேற்றதில் என் வயதில் பாதி குறைந்தது போல் உணர்கிறேன். இதற்கு வாய்ப்பு தந்தமைக்கு உங்களுக்கு நன்றி” என்ற போது பதிவர்கள் நெகிழ்ந்து போனார்கள்.


சிறப்பு காட்சி முடிந்து வந்த பதிவர்கள் கூறுகையில் இந்த குறும்(பு)படம் கண்டிப்பாக அரைமணி நேர சிரிப்பிற்கு உத்தரவாதம் என்ற அந்த வார்த்தையில் என்னால் படத்தின் வெற்றியை உணரமுடிந்தது.
"உங்கள் திறன் இப்படிப்பட்ட விளையாட்டுப் படங்களுடன் நின்றுவிடாமல் கொஞ்சம் சீரியசாகவும் ஏதாவது இயக்க முயற்சி செய்யலாமே..?" என்பதே பெரும்பான்மையானோரின் கருத்தாக இருந்தது...கண்டிப்பாக உங்கள் அனைவரின் ஏகோபித்த ஆதரவுடன் வெகுவிரைவில் அமீரகத்தை கதைக்களமாக வைத்து ஒரு தரமிக்க குறும்படமொன்றை இயக்கலாமென்றிருக்கிறேன்...செய்யலாமா? என்று மற்றவர்களும் படம் பார்த்து விட்டு சொல்லுங்கள்...
வெற்றிப் படங்களைத்தரும் பெரிய இயக்குனர்கள் இயக்கியப் படத்தை கூட மற்றவர்கள் பார்த்து விமர்சித்த பின் தான் நாம் பார்க்க வேண்டும் என்ற கொள்கை கொண்ட உலகில், நான் ஒரு படம் செய்துள்ளேன் என்றதும் தெரிச்ச்சி ஒடாமல், நாங்களும் வருகிறோம் என்று வந்து, பார்த்து, வாழ்த்தி, பாராட்டி, என்னைத் திக்குமுக்காட வைத்த அனைத்து பதிவர்களுக்கும் மிக்க நன்றி....
உலக வரலாற்றில் முதல் முறையாக பதிவர்களுக்காக எடுக்கப்பட்ட படத்தை முதல் சிறப்புக் காட்சி கண்டு வரலாற்றில் தடம் பதித்தவர்கள்...
1)புலவர் ஜின்னாஹ் சர்புதீன்2) ஆசிப் மீரான் 3) குசும்பன்4) கீழை ராஸா 5) ஊமையன் ஹக்கிம்6) முகவை முகில் 7) கிளியனூர் இஸ்மத்8) ராஜாகமால் 9) நான் ஆதவன்10) செந்தில் வேலன்11) சந்திரசேகர் 12) சிம்ம பாரதி
13) ஜெஸீலா குடும்பத்தினருடன் 14) லியோ அண்ணன்15) ஆசாத் அண்ணன் 16) அபூ அப்ஸர் குடும்பத்தினருடன்17) சென்ஷி 18) ஜியாவுதீன் 19) சமீர்
20) பினாத்தல் சுரேஷ் அங்கிள் 21) கலையரசன்22) வினோத் கௌதம்
23) அன்புடன் மலிக்கா குடும்பத்தினருடன்24) கார்த்திக்கேயன்
25) ஹுசைனம்மா குடும்பத்தினருடன்.
"எந்தப்படமானாலும் பின்னி பெடலெடுத்து விமர்சனம் என்ற பெயரில் கிழிகிழியென்று கிழிக்கும் பதிவர்களை அழைத்து படத்தையும் போட்டு காட்டி, பதிவுலேயும் போட்டு விமர்சியுங்கள் என்கிறாயே உனக்கு என்னா தில்லு..?"ன்னு அண்ணாச்சி பக்கத்தில் இருந்து கேட்டுக்கிட்டிருக்காரு..
நல்ல படைப்புகளை பாராட்ட தெரிந்த ஒரு குழுவில் இதை சமர்பிக்கிறேன் பாராட்டினால் அது எங்கள் பாலைப்பதிவுக்கூடத்தைச் சாரும் ( கீழைராஸா, ஆசிப் மீரான், சிம்ம பாரதி, முகவை முகில், ஊமையன் ஹக்கிம்) விமர்சித்தால் அது அனைத்தும் என்னைச் சேரும்...இனி எழுத்து உங்கள் கையில்....
இதில் பார்க்க இயலாதவர்களுக்கு
தொடர்புடைய இடுகைகள்
ஊடகப்பார்வையில்
1)தினமலர் நாளிதழ்
2)அதிகாலை
3)முதுகுளத்துத்தூர்
பதிவுலகப்பார்வையில்
1) கிளியனூர் இஸ்மத்
2) ஹூசைனம்மா
3) குசும்பன்
4)அன்புடன் மலிக்கா

(உங்கள் விமர்சனமும் இதில் இணைக்கப்பட லிங்க் அனுப்பவும்)

வேட்டைக்காரனுக்கு இந்தப்படம் போட்டியா…? காணொளியுடன்…

"அண்ணாச்சி இந்த சுற்றுலாவை படமா எடுக்கலாமென்று இருக்கிறேன்"
என்று சொன்ன போது அண்ணாச்சி சிரிச்ச சிரிப்பை மறக்கவே முடியாது…அப்படி ஒரு சிரிப்பு…


“ஏண்டே அந்த சினிமாக்காரனுங்க தான் இப்படி எதாவது சொல்லிக்கிட்டு இருங்கானுங்கன்ன உனக்கு என்னங்கடே வந்தது…” என்று சொல்லி சிரிச்சுக்கிட்டே இருந்தாரு

அன்றைக்கு என் வாழ்க்கையிலே சில முக்கியமான முடிவுகளை எடுத்தேன்…
1)இன்னிக்கு சிரிக்கிற அண்ணாச்சி என்னைக்கும் சிரிச்சுக்கிட்டே இருக்கனும்…( இன்னா செய்தாரை ஒருத்தர் பாணியில்)
2)இன்னிக்கு சிரிக்கிற அண்ணாச்சியைப் பார்த்து ஊரே சிரிக்கனும்
3)இன்னிக்கு சிரிக்கிற அண்ணாச்சி ஊரைப்பார்த்து சிரிக்கனும்..

அதற்குப் பின்னால் “வெற்றி நிச்சயம்” என்ற பாடல் பிண்ணனியில் ஓட ஒரே பாடலில் ஒரு படத்தை முடித்து அண்ணாச்சி கிட்டேயே போட்டு காட்டினேன்…படத்தை பார்த்துட்டு கண் கலங்கிட்டாரு…
“ராஸா நீ கோடம்பாக்கத்துலே இருந்து எங்களை கொல்ல வேண்டியவண்டா...இவ்வளவு சீரிசா படத்தை எடுத்திருக்கேயடா"

என்றதும் தூக்கி வாரிப்போட்டது…அண்ணாச்சி என்னையே வச்சி காமெடி கீமடி பண்ணலேயேன்னு இது காமெடி படம் அண்ணாச்சி என்றேன் இருந்தாலும் அழுறதை நிறுத்தலே…

அதன் பின் அண்ணாச்சி என் அன்பு அண்ணன், அமீரகப் பதிவுலத் தந்தை , கட்ட(ட)த்துரை ( ஆர்க்கிடெக்ட்டுக்கு தாங்க நம்ம பசங்க அன்பா இப்படி ஒரு பேரை வச்சிருக்கானுங்க) எனக்கு கொடுத்த ஊக்கத்தை மறக்கவே இயலாது…அதன் பின் ட்ரைலர் பண்ணாலாமென்று அவர் தான் ஊக்கமும் கொடுத்தார்…அந்த ஊக்கத்தின் பலன் தான் இந்த ட்ரைலர் பதிவு…
இதனால் விஜய் ரசிகர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது இது கண்டிப்பாக வேட்டைக்காரனுக்கு போட்டி அல்ல…

இந்தப்பட ஒளிப்பதிவில் என்னுடன் இணைந்து செயல் பட்ட நண்பன் முகவை முகில், ஊமையன் ஹக்கிம் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவிப்பதுடன் பதிவர்ச் சுற்றுலாவிற்கு வர இயலா விட்டாலும் இந்த ட்ரைலர் வெளியீட்டிற்கு போஸ்டர் வடிவமைத்து தந்த "பிரபல சினிமா போஸ்ட்டர் வடிவமைப்பாளர் சிம்ம பாரதிக்கு" என் அன்பு கலந்த நன்றி

இந்த வெளியீட்டிலும், சுற்றுலாவிலும் எந்த வித குறிக்கீடும் இல்லாமல் செயல் பட்டதற்கு (கலந்து கொள்ளாததற்கு) பி.ப.குசும்பனுக்கு ஒரு ஸ்பெசல் நன்றி… …

என்ன தான் அண்ணாச்சியை திட்டினாலும் "நல்லா இருங்கடே"ன்னு எல்லா உதவியும் வழங்கிக் கொண்டிருக்கும் அன்பு மிகு அண்ணாச்சிக்கு
நன்றி! நன்றி! நன்றி!

ட்ரைலரை இப்பப் பாருங்க… படம் டிசம்பர் 18….சார்ஜாவைத்தொடர்ந்து உலகெங்கும்...
மேலும் விபரங்களுக்கு….
http://asifmeeran.blogspot.com/2009/12/blog-post.html

Related Posts with Thumbnails