மரணம் தேடிப் பறந்த மனிதப்பறவைகள்…


இன்னும் சில நொடியில்-விமானம்
தரையிறங்குமென்றபோது
எவரும் அறியவில்லை
அப்படி ஒரு செய்தி இடியென
தலையிறங்குமென்று..

பத்தாயிரம் மைல்கள்
பதனமாக வந்த பயணம்
பத்து மைல் இருக்கையிலே
பாவியவன்
பாசக்கயிற்றில் சிக்கியதே

தியாகத்தில் இவர்கள்
தீக்குச்சிகள்..என்பதாலோ
தீப்பெட்டியாக விமானம்
தீப்பற்றிக் கொண்டனவோ..?

எரிந்தது நீங்கள் மட்டுமல்ல
ஏக்கங்களும் கனவுகளும்
மரித்தது நீங்கள் மட்டுமல்ல
ஆசைகளும், உணர்வுகளும்…

தகவல்கள் எரியாது காக்க
எதையும் தாங்கும்
கருப்புப் பெட்டியாம்..!
உயர்வான உயிர்களைக் காக்க
உதவாக்கரை
உலோகப் பெட்டியாம்..!

உறக்கமில்லா இரவுகளில்
உழைத்திட்ட இம்மக்களென
உறங்கழைத்துச் சென்றானோ?
உலகம் காக்கும்பேரிறைவன்
இரக்கமில்லா இந்நிகழ்வை
இன்னும் பலர் நம்பாமல்,
ஏர் இந்தியா என்றாலே
எப்போதும் தாமதம் தான்
என்றெண்ணிக் காத்திருப்போர்
ஏர்போட்டில் ஏராளம்…

இயற்கையை நம் கையில்
எடுத்திட்ட பெருமிதத்தை
இது போன்ற சம்பவங்கள்
தடுத்திடச் செய்கிறதே..
பறவையின் பறக்கும்குணம்
பார்த்து செய்த விமானம்- இவர்கள்
உலகை விட்டு பறக்கையிலே
உதவிக்கு வரவில்லையே…?

யானை இருந்தாலும் ஆயிரம் பொன்
செத்தாலும் ஆயிரம் பொன்
இவர்களும் யானைகள் தான்…
இருக்கும் போது தன் ஆசைகள்
எரித்து குடும்பம் காத்தார்கள்
செத்தபோது தங்களை எரித்து
குடும்பம் காக்கிறார்கள்…

பறந்து சென்று பணம்தேடி-பந்தம்
துறந்து தனம் தேடி
இறந்து சென்றும் இனம் காத்ததால்
இவர்களும் சீதக்காதியன்றோ…?

(சமீபத்தில் பெரியார்தாசன் என்றறியப்பட்ட அப்துல்லாஹ் அவர்கள் துபாய் வந்திருந்த போது, நீங்கள் கவிதை எழுதுவதை விட கதை எழுதுவதில் அதிக ஈடுபாடு காட்டுங்கள் அது தான் உங்களுக்கு நன்றாக வருகிறது என்றார் ( எனக்கு கவிதை வரவில்லை என்பதை அவர் பாணியில் சொன்னார்) அந்தப் பெரியவரின் வார்த்தைகளை மீறி இதை எழுதிவிட்டேன்...கவிதையின் அளவு கோலுக்கு அப்பாற்பட்டதாக இருந்தாலும்...என் உணர்வுகளின் வடிகாலாகவே இதை வடித்துள்ளேன்.)

Related Posts with Thumbnails