என் காதலும் புனிதமானது தான்…!



“நமீஹா”
நான் உச்சரித்த உன்னதமான
பெயர்
நான் ரசித்த சிறந்த
கவிதை
நான் நேசிக்கும் அழகுப்
பதுமை

என் இறந்தகாலத்தின்
இறவா நினைவுகளை
இதயம் திறந்து
பார்க்கிறேன்…
அப்படியே பசுமையாய்
உன் நினைவுகள்
உன்னை அறிமுகப்படுத்திய
அந்த நிகழ்ச்சி
என் நெஞ்சில்
நிழலாடுகிறது…

அன்று வகுப்பறையில்
மதிப்பெண்கள் வருகிறது
வழக்கமாக என் பெயர் இருக்கும்
முதல் இடத்தில் ஒரு பெண் பெயர்
வாசித்தேன்
“நமீஹா”
யார் இந்த வசீகரமான
பெயருக்குச் சொந்தக்காரி..?
என்னுள் ஏதோ
ரசாயன மாற்றம்
எட்டாத வேகத்தில்
என் இதயத்துடிப்பு
எனக்கு என்னவாயிற்று…?
நான் ஏன் இப்படி
உணர்ச்சி வயப்படுகிறேன்..?

என் சிந்தனையெல்லாம் அந்த
முகம் காணாத பெண்ணின்
முந்தானைச் சுற்றித் திரிகிறதே…?
சிந்தனையின் முடிவில்
முகம் பார்க்காமலேயே உன்
முகவரி மனனம் செய்கிறேன்…

உனக்கு ஞாபகம் இருக்கிறதா…?
நாம் சந்தித்த அந்த
இனிய நிமிடங்கள்
பெயர் மட்டுமே தெரிந்த
தேவதையை சந்திக்கிறேன்
எத்தனை அழகு..!
அஜந்தா எல்லோரா ஓவியங்கள்
ஒரு பெண்ணாக
உருவெடுத்து விட்டனவா…?
மோனாலிஸாவை சித்திரத்தில்
கண்டு சித்தனாகியிருக்கிறேன்,
அது எப்படி என் நேரில்…?
நான் சித்திரமானேன்
என் இதயம் சிதறிக்கொண்டிருந்தது…

நீங்கள் தான் ……வா..?
ஒரு வாத்தியத்தை வாசித்தாற்ப்போல்
உன் வார்த்தைகள் செவி புகுந்து
என் இதயத்தின் அடிப்பாகத்த்ல்
அடைக்கலம் புகுந்தது…
உன் உச்சரிப்பில் என் பெயரின்
பெருமை உணர்ந்தேன்…
பெருமிதம் கொண்டேன்
வழக்கமான வார்த்தை
வெளிநடப்புக்கிடையே
ஆம் என்றேன்…

நம் சிநேகம் ஆரம்பித்தது…
நீ சிரிக்கும் போதெல்லாம்
நான் சிலையாகியிருக்கிறேன்
நீ வருந்தும் போது
வாத்தியமாகி சோகராகம்
வாசித்திருக்கிறேன்
நீ சினம் கொண்டால்
நான் சிதைந்திருக்கிறேன்
ஆனால் இதயம் திறக்கவில்லை
என்ன காரணம் ..?
எண்ணிப்பார்க்கிறேன்…
அச்சம்
என் அன்பின் பிணைப்பிற்கு பெயர்
காதல் என்று சொல்ல எனக்கு அச்சம்…

ஒரு வேளை நீ மறுத்தால்…
முயலவில்லை முடியவில்லை
என்பது வேறு
முயன்றும் முடிய வில்லை
என்பது வேறு
உன் விசயத்தில்
முயலவில்லை முடியவில்லை
என்று கூறவே ஆசைப்பட்டேன்
உன் இதயக் கோட்டையை
கைப்பற்ற வேண்டும் என்பதை விட
குப்பை என்று எனக்கு நீ
குட்பை சொல்லி விடக்கூடாது
என்பதிலேயே குறியாக
இருந்தேன் …
நாட்கள் நகர்ந்தன
பள்ளி இறுதி நாளும் வந்தது
பசுமை யான நினைவுகளோடு
பிரிந்தோம்…

பிரிவது கொஞ்சம் சாவது போல
எனும் பிரான்ஸ் பழமொழிக்கு
அன்று அர்த்தம் புரிந்தது
அன்று என் கண்கள்
நீங்கிச்சென்றவள்
இன்றும் என் கண்களில்
கண்ணீராய்…

என் இதயத்தில் உன் நினைவுகள்
நிழலாடும் போதெல்லாம்
என் விழித்திரையில் கண்ணீர்த்துளிகள்
தள்ளாடுகின்றன….

உன்னை நினைத்துக் கதறி
அழத்தோன்றியது…
என் ஆண்மை தடுத்தது
காணும் இடமெல்லாம்
உன் பெயர் கதறத் தூண்டியது
என் தன்மானம் தடை விதித்தது

உன்னை மறக்க முயற்சித்தேன்…
சாலையில் செல்லும் மனங்கவர்
மகளிர் பார்த்தால் உன் ஞாபகம்
சோலையில் பூக்கும் மணங்கவர்
மலர்கள் பார்த்தால் உன் ஞாபகம்
எப்படி முடியும் உன்னை மறக்க…?

மணலைப் பார்த்தால்
உன் பெயர் எழுதினேன்
மழலை பார்த்தால்
உன் பெயர் சூட்டினேன்
கடலைப் பார்த்தால்
உன் பெயர் கதறினேன்
கலையைப் பார்த்தால்
உன் பெயரிட்டேன்
எப்படி முடியும் உன்னை மறக்க…?

உன்னை சந்தித்த நாட்களை விட
உனை சிந்தித்த நாட்களே அதிகம்
உன்னை எண்ணும் போதெல்லாம்
தூரிகை ஒன்று என் இதயமெங்கும்
ஸ்லோமோஷனில் உன்னை
வர்ணம் தீட்டுகிறது…
அது என் இதயம் மட்டும்
அறிந்த ஒவியம்…!

பாவம் உலகப்புகழ்
ஓவியர்களுக்குக் கொடுத்து வைக்கவில்லை…
ரவிவர்மா உனை சந்தித்திருந்தால்
வேறு ஓவியத்தை சிந்தித்திருக்க மாட்டான்
லியானோர் டாவின்சி உனை கண்டிருந்தால்
உனை வரைந்து மோனோலிஸா என்றிருப்பான்
பிக்காஸோ உனை பார்த்திருந்தால்
நீயே என் ஆயுள் மாடலென்று போற்றிருப்பான்
பாவம் உலகப்புகழ்
ஓவியர்களுக்குக் கொடுத்து வைக்கவில்லை…

உன் நினைவுகள் கரையான்களாய்
இருந்திருந்தால்
இன்று என் இதயம் முழுதும்
அரிக்கப்பட்டிருக்கும்
உன் நினைவுகள் இனிப்புகளாய்
இருந்திருந்தால்
என்றோ நான் சக்கரை நோயாளியாய்
செத்திருப்பேன்
உன் நினைவுகள் வார்த்தைக்கும்
வரிக்கும் கட்டுப்படாதது

இப்படி உனை எண்ணி எண்ணி
இறந்து கொண்டிருந்த போது தான்
என் செவிக்கெட்டி
இதயம் பிளந்தது
‘நீ வேறொருவனை காதலிக்கிறாய்’என்ற
அந்த வார்த்தை அம்புகள்
உண்மையில் முடியவில்லை
என்னால் நம்பமுடியவில்லை
அவன் மீண்டும் உறுதிபடுத்தினான்
என் உறுப்புகள் உயிரிழந்தன
உள்ளமது ஊமையானது
என்னை அறியாமல் வெளியான
கண்ணீர்..அல்ல அல்ல
கண்களிலிருந்து வரும் தண்ணீர்
அல்லவா கண்ணீர்
இதயத்திலிருந்து கண்களுக்குப்
பொங்கும் குருதித்திரவத்திற்க்கு
என்ன பெயர்…?
பெயர் தெரியாத திரவம்
என் கண்களில்
மீண்டும் உறுதிப்படுத்தினான்
இடி விழுந்தது என் இதயத்தில்
இடிந்து விழுந்தது என் இதயக்கோட்டை
எனக்கு மட்டுமே சொந்தம் என்று
என்று எண்ணிக்கொண்டிருந்தவள்
இன்று வேறொருவனுக்கு சொந்தம்
என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள
இயலவில்லை…

என் இதய அரியணையில் என்றோ
ராணியானவள் இன்று
வேறொருவன் இதயத்தில் மகாராணி
என்பது மனதுக்கொப்பவில்லை…

உனை இன்னொருத்தன்
காதலிக்கிறான்
என்பதை என் இதயம் தாங்கும்
பலாச்சுளைகளில் ஈக்கள்
மொய்ப்பதற்க்கு தடா போட முடியுமா
ஆனால் நீ இன்னொருத்தனை
காதலிக்கிறாய் என்பதைத்தான்
என்னால் தாங்க இயலவில்லை
இலவு காத்த கிளியாக மாற
எனக்கு சம்மதமில்லை

கதறி அழுதேன்…இதயத்துள்
வேறு என்ன செய்ய இயலும்…?
ஆனால் மறந்து விட வில்லையே…
எப்படி முடியும் அந்த இனிய
நிகழ்வுகளை மறக்க
எப்படி முடியும்…?

தமிழில் உயிர் எழுத்து எத்தனை
என்றால் மூன்று என்கிறேன்
ஆங்கிலத்தில் கேட்டால்
ஏழு என்கிறேன்

மற்றவர்களுக்கு வேண்டுமானால்
இது வேடிக்கை யாக இருக்கலாம்
உன் பெயரில் இடம்பெற்ற
எழுத்துக்கள் தான் எனக்கு உயிர்
எழுத்துக்கள் என்று அவர்கட்கு
தெரிய வாய்ப்பில்லை தான்…

உண்மையில் அந்த எழுத்துக்கள் தான்
தவம் செய்திருக்க வேண்டும்
உனக்கு பெயரமைத்துக் கொடுத்ததற்க்கு

உனக்குத்தெரியுமா
உன்னால் நேசிக்கபபட்டவன்
என்று தெரிந்த பின்புதான் உன் காதலனையும்
நேசிக்க ஆரம்பித்தேன்
நீ நேசித்தது விஷ ஜந்து என்றாலும்
அதையும் பூஜிப்பேன்…

என் காதலை மறக்க
செத்து மடி என்றாளும்
அதையும் செய்வேன்
ஆனால் தற்கொலைக்குத்
தேர்ந்தெடுக்கும் விஷத்தில் கூட
உன் பெயரின் எழுத்துக்கள்
எங்கேனும் உள்ளனவா..?என்று
தேர்ந்தெடுத்துதான் குடிப்பேன்
சாவிலும் உன் நினைவு
என்னை இன்னொரு முறை
வாழ வைக்கும் எனும்
சூத்திரம் அறிந்தவன் நான்…

நண்பர்கள் உனை மறந்துவிடச்
சொன்னார்கள்…முயற்சித்தேன்
உனை மறக்க முயன்ற ஒவ்வொரு
நொடியும் நீ என் நினைவில் நின்றாய்….

காலை விழித்தது
காபி தந்தாய்
குளிக்கும் போது முதுகு தேய்த்தாய்
குளித்து முடிந்ததும் தலை துவட்டினாய்
உன் உணவை எனக்கூட்டி
உன் மடியை தலையனையாக்கி
எனை உறங்க வைத்தாய்
இப்படி என் அன்றாட வேலை கூட
உன்னால் செய்யப்படுவதாய் பிரமை…

முயற்சித்தேன்..மீண்டும் மீண்டும்
முயற்சித்தேன்..
மில்லி மீட்டர் மீல்லி மீட்டராய்
என் இதயம் விட்டு இடம் பெயர்ந்தாய்

நீ முழுமையாக என் இதயம் விட்டு
நகரும் நாள் என் வாழ்நாளின்
முடிவு நாள் என்பதை நான் அறிவேன
இருந்தாலும் முயற்சிப்பேன்
ஒரு நாள் என் இதயத்தில்
நீ ஆழமாக அறைந்த
ஆணியை அகற்றி விடுவேன்
என்ற நம்பிக்கை எனக்குள்ளது
ஆனால் அதன் காயம்
நான் சாகும் வரை
ஈரமாகவே இருக்கும்
இரத்தக் கசிவுடன்…!


“ஏமாற்றிய இதயத்தின்
வஞ்சகத்தை அறிந்த பின்பும்
நேசிக்கும் வரை
காதல் புனிதமானது தான்”
என்று என்றோ படித்த ஞாபகம்
உன் இதயம் வேறொருவனை
நேசிக்கிறது என்பதை
அறிந்த பின்னும் உன்னை
நேசிக்கும் வரை
என் காதலும் புனிதமானது தான்…!


கவிதை பிறந்த கதை

இது என் கதையல்ல…என் கவிதை, (உங்கள் உச்சரிப்பில் உரைப்பதானால் கவுஜை…) இது என் கல்லூரி காலத்தில் என்னை என் பேனாவிற்கே அறிமுகமில்லா வேளையில் எனக்கும் கவிதை வருமென்று என்னை உணர வைத்த கவிதை…இது என் நண்பனின் கதை மட்டுமல்ல,
காதலை உணர்ந்த பெரும்பாலோனோரின் வாழ்வில் நடக்கும் நிகழ்ச்சி…

அவன் எனக்கு மிக நெருக்கமான நண்பன்…அவன் உணர்வுகளை உதிர்க்கத் தெரியாத ஊமை…காதல் யாரை விட்டது…? அவனையும் தொட்டது ! காதலை சொல்லாமலேயெ அவனுள் தாஜ்மகால் கட்டி முடித்தான் கண்ணீரில்…! அவன் வேதனையில் நான் விசும்பினேன்…என்னுள் உறங்கிய படைப்பாளி அவனால் விழித்தான், படைப்பாளிக்கே உரிய கூடு விட்டு கூடு பாயும் வித்தை உணர்ந்து அவனாய் மாறி பேனாவுடன் தவமிருந்தேன்…அந்த ஊமைக்கனவை மொழிபெயர்க்கும் விதமாக இந்த கவிதையை எழுதி முடித்தேன்…அவன் கரம் கொடுத்தேன்…வாசித்தான்…நீண்ட நேரம் ! கவிதையை முடிக்கும் வேளை அவன் கண்களிலிருந்து ஒரு துளி கண்ணீர் கவிதை வரியில் விழுந்தது… அவன் நிமிர்ந்தான்… தன் காதல் கனவுகளை தாஜ்மஹாலாய் வடித்த அந்த கட்டிடக்கலை வல்லுனரை சாஜஹான் பார்த்த அந்தப்பார்வை அவன் விழிகளில் தெரிந்தது… என் முதல் கவிதைக்கு கிடைத்த பெரும் அங்கீகாரம் அது…

அந்த நெடிய கவிதையை உங்கள் பார்வைக்கு பரிமாறுகிறேன்… படிப்பீர்கள் என்ற நம்பிக்கையில்…

அறிமுகம்

சாருகேசி, இது ஒரு சமூக அக்கரை கொண்ட சாண்டில்யனின் சரித்திரப்பதிவுகள்…நகைச்சுவை உணர்வுமிக்க புலிகேசியின் நடப்புச்செய்திகள்…காலத்தால் ஒரங்கட்டப்பட்ட கவிதை, கதைகளின்
கல்வெட்டுக்கள்…அன்னை தேசத்தோர் வாழ்வு மெருகேற, எண்ணை தேசத்தில் தங்களை மெழுகுதிரிகளாய் எரித்துக்கொள்ளும் பல கோடி இளைஞனின் அனுபவச்சிற்பங்கள்…

Related Posts with Thumbnails