வெளிநாட்டில் எதைத்தேடுகிறோம்…

வெளிநாட்டில் பொருள் தேடி வந்ததினால் நாம் இழந்தது எத்தனையோ... தேடிவந்த பொருள் கிடைத்தது ஆனால் தொலைத்து வந்த சந்தோசங்கள்..?


துபாய் தமிழ்த்தேர் இதழுக்காக கொடுக்கப்பட்ட "எதைத்தேடுகிறோம்" என்ற தலைப்பிற்கு நான் எழுதிய தேடல்கள்...

  • பந்தங்கள் சூழ
    வழியனுப்பப்பட்டு
    பறந்து வரும் முன்
    சொந்தங்கள் முன்
    தொலைத்த –அந்த
    சந்தோஷத்தை…..


  • கட்டிளம் காளையாக
    பாலைபுகுந்து இன்று
    கசக்கிப்பிழியப்பட்ட
    அடிமாடுகளாய்
    இழந்து நிற்கும்
    இளமையை…

  • KFC,சவர்மாவின்
    ருசியில் சிக்கி
    சவமாகிப்போன நாக்கில்
    அன்று ருசித்த
    அம்மாவின் சமையல்
    ருசியை…



  • வழியனுப்ப வாசல்
    வந்தவளின்
    விழி உகுத்த
    சிறு துளியில் -மனம்
    வலிக்க மறுநொடியே
    மறந்து வந்த
    இதயத்தை…


  • விடுமுறையில்
    வீடு செல்ல
    வழிப்போக்கன் போல்
    பார்த்த பிள்ளை
    புறப்படும் முன்
    புன்முறுக “அப்பா” என்க
    புல்லரித்து
    அள்ளி அனைத்து
    கொஞ்சிய
    அந்த நொடி
    பிஞ்சு ஸ்பரிசத்தை….

  • திருவிழாக்கள்,
    பெருநாட்கள் –
    உற்றார் புடைசூழக்
    கொண்டாட
    உளவியலாய் களையிழந்து
    மனமிங்கு தனிமையில்
    திண்டாட
    அலை, அலையாய்
    தொலைத்து நிற்கும்-அந்த
    இனிய தருணங்களை….

    பொருள் தேட என்றெண்ணி
    புறப்பட்டு வந்தோம்-இங்கு
    இருள் சூழ அருளிழந்து-மனம்
    புளுகி நின்றோம்
    தேடிவந்த பொருள் கிடைத்தும்-நாட்டில்
    தொலைத்து வந்த
    சந்தோசத்தை
    விட்ட இடம் விட்டு
    மற்ற இடத்தில்
    தேடுகிறோம் தேடுகிறோம்…

துபாயில் ஏ.ஆர் ரஹ்மான், மற்றும் “சுப்ரமணியபுரம்” திரைப்படக் குழுவினருக்குப் பாராட்டு, தமிழ்த்தேர் ஆண்டுவிழா காட்சிகள்.

வானலை வளர்தமிழ் அமைப்பின் தமிழ்த்தேர் இலக்கிய மாத இதழின் நான்காவது ஆண்டு விழா மற்றும் “சுப்ரமணியபுரம்” திரைப்பட குழுவினருக்கு பாராட்டு விழா, துபாய் சஃபா பார்க் அருகில் உள்ள எமிரேட்ஸ் இங்கிலீஸ் ஸ்பீக்கிங் பள்ளியின் உள்ளரங்கில் நடைபெற்றது.


விழாவின் சிறப்பு விருந்தினர்களாக முனைவர்.பர்வின் சுல்த்தானா, கவிஞர்.யுகபாரதி மற்றும் சுப்ரமணியபுர பட இயக்குனர் சசி, நடிகர் ஜெய், இசையமைப்பாளர் ஜேம்ஸ்வசந்தன், “கண்கள் இரண்டால்” பாடல் புகழ் பாடகர் பெல்லிராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பார்வையாளர்களின் ஒரு பகுதி...விழாவிற்கு சேர்த்தது மேலும் சுருதி...

வந்தே மாதரம் பாடலுக்கு குழந்தைகள் ஆடிய காட்சி பாடல் முடிந்ததும் விழாவின் சிறப்பு பகுதியாக ஆஸ்கார் புகழ் ஏ.ஆர்.ரஹ்மானை பாராட்டி கவுரவிக்கும் விதமாக அனைவரும் எழுந்து நின்று கரகொலி ஒலித்த காட்சி விழாவிற்கு சேர்த்தது மேலும் மாட்சி.

சங்கே முழங்கு பாடலுக்கான ஆடல்...
ஆண்டு விழா மலருடன் அனைவரும்...
மேடையில் பிரபலங்கள்
கவிஞர் யுகபாரதி மற்றும் முனைவர் பர்வின் சுல்த்தானா

சுப்ரமணியபுர பட இயக்குனர் சசி, மற்றும் நடிகர் ஜெய்

இசையமைப்பாளர் ஜேம்ஸ்வசந்தன் மற்றும் இயக்குனர் சசி
ஜேம்ஸ்வசந்த் நடத்திய "தமிழ்ப்பேசு தங்கக்காசு" பாணியில் நடத்திய
"தமிழோடு விளையாடு"
"த்வனி" அமைப்பு சார்பாக "தமிழ்த்தேரின்" படைப்பாளர்களை பதக்கம் அணிவித்து கௌரவித்த மாட்சிகளை படம் பிடித்த காட்சிகள்...

விழா அரங்கிற்கு வெளியே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த "ப்ரைம் மெடிகல் சென்டரின்" இலவச மருத்துவ முகாம்.

குடந்தை அசரப், திண்டுக்கல் சரவணன் மற்றும் திருச்சி சரவணக்குமாரின் நகைச்சுவை விருந்து மற்றும் ஜேம்ஸ்வசந்தின் தமிழோடு விளையாடு நிகழ்ச்சியுடன் விழா இனிதே நிறைவுற்றது.

விழா இரவு பதினொரு மணிவரை சென்றாலும் மக்கள் ஒரு இலக்கிய கலை விழாவைக் கூட்டம் கலையாமல் ரசித்துப் பார்த்த விதம், விழாவிற்கு கிடைத்த இரட்டைச்சதம்.

கலைஞரின் குறைகள்…(இது அரசியல் பதிவு அல்ல)

ஈழப்பிரச்சனை, கலைஞரின் உண்ணாவிரதம், அரசியல் அனல், போர் நிறுத்தம். இவை எவற்றிற்கும் இந்த பதிவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றாளும் இதன் நாயகன் கலைஞரைப் பற்றி அவரின் எண்பத்தைந்தாம் அகவை ஒட்டி எண்பத்தைந்து கவிதை தொகுப்பை வெளியிட முயற்சித்து அதன் தொடர்பாக கவிஞரொருவர் கவிதை சேகரிக்க அமீரகம் வந்த போது என் பங்கிற்கு கலைஞரைப் பற்றி நான் எழுதி அளித்த கவிதை இது…

குறைகளெல்லாம் நிறைகளாய்….
உன் நிறைகளைப் பாட
நீண்டதொரு கூட்டமுண்டு- என்பதால்
தங்கள் குறைகள் பாட
கு(ழ)ரலெடுத்து வந்துள்ளேன்…

நீ நிறைகளால் நிறைந்தவன்
குறைகளையும் நிறையாக்கியவன்


“ அரசியல் சிகரமே ”
உன் உயரத்தில் நீ சற்றே குள்ளம்…
உன் உருவ ஆளுமைக்கு அது
சற்று குறைவானது தான் – ஆனால்
அரசியலில் உன் சாதனை உயரம் கண்டு
எவரெஸ்ட்டும் உன்னை
தலை நிமிர்ந்து பார்க்கிறதே-அந்த
தந்திரமென்ன…?


“திருக்கு(ற)ரலாசானே”
உன் குரலின் கரகரப்பு,
உன் பரபர்ப்பு வார்த்தை வேகத்திற்கு
சிறு குறை தான் – ஆனால்
உன் கரகரப்புக் குரலில்
கட்டுண்டு கிடக்கும் கூட்டம் கண்டு
குயில் கூட உன் குரல் மாற்றி
கூவ முயற்சிக்கும்
மந்திரமென்ன…?

“சூரியனுக்கொளியே...”
கருப்பு கண்ணாடி - உன்
விழிகளின் விலாசமென்பது
உன் பார்வைக்குறை குறைக்கத்தான் –ஆனால்
ஒட்டுமொத்த கலைச் சமுதாயமே
உன் விழிவழியே- பூலோகம்
நோக்க காத்திருக்கும்
விஞ்ஞான மர்மமென்ன..?

“சிந்தனை சிறுத்தையே…”
உன் நடையின் தளர்வு
உன் பொழுது வேகத்திற்கு
சற்றே குறை தான் –ஆனால்
உன் எண்ண வேகத்திற்கு
எந்த எழுத்தாணியும்
ஈடுகொடுக்க இயலா தவிக்கும்
மாயாஜாலமென்ன…?

“கவிபாடும் கணிப்பொறியே”
இளம் தலைமுறைக்கு – நீயொரு
செம்மொழி தந்த “தமிழ்”
அரசியல் “கணித” மேதை
எழுத்துலகின் “விஞ்ஞானம்”
வாழும் “வரலாறு”
சகலகலா திறன் கொண்ட “ பூகோளம்”

“கலைஞரே”
எண்பத்தைந்தென்பது
உமக்கு குறையா..? நிறையா..?
என நிறைய சிந்தித்தாலும்
நிறைகள் மட்டுமே நெஞ்சில்
நிறைகிறது … மற்றவை உம் முன்
மறைகிறது…

தமிழ் நிறுவனத்திற்கு துபாயின் உயரிய கௌரவமிக்க MRM விருது...

துபாயின் உயரிய கௌரவமிக்க "சேக் முகம்மது பின் ரஷீத் அல் மக்தூம்" வியாபார விருது (Business Award), ரியல் எஸ்டேட் பிரிவுக்காக தமிழ் நிறுவனமான "ETA STAR PROPERTY DEVELOPER" நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

சென்ற வருடம் ரியல் எஸ்டேட் ஜாம்பாவனான "EMAAR" நிறுவனமே இந்த விருதை"TAMEER" மற்றும் "UNION PROPERTY" போன்ற நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்ட போது இந்த வருடம் இந்த பிரிவின் விருதை ஒரே நிறுவனம் அதிலும் தமிழ் நிறுவனம் தட்டிச்சென்றது மேலும் சிறப்பு.



இன்று காலை துபாய் "மதீனத் ஜுமைரா" வில் நடந்த சிறப்பு மிக்க விழாவில்,
இந்த பெருமை மிக்க விருதை, அமீரகத்தின் துணை ஜனாதிபதியும், துபாயின் ஆட்சியாளருமான உயர்திரு. முகம்மது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களிடமிருந்து ETA குழுமத்தின் தலைவர் "வியாபார விஞ்ஞானி" உயர்திரு.செய்யது சலாஹூதீன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

சென்ற வருடம் கட்டுமானப் பிரிவில் "ETA ASCON" இந்த விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது என்றாலும், உலக பொருளாதார வீழ்ச்சி எனும் சுழற்காற்று வீசிவரும் இந்த வேளையில் இப்படி ஒரு பெருமைமிக்க சாதனை விருதை தட்டிச்செல்வது சாதாரண விசயமில்லை, அதை ஒரு தமிழ் நிறுவனம் சாதித்திருப்பது நாம் எல்லோரும் பெருமை படக்கூடிய விசயமே...

கடந்த முப்பது வருடங்களாக தமிழர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி, வெளிநாட்டில் குறிப்பாக அமீரகத்தில் ' ஏ மதராசி என்று அலட்சியமாக அழைத்தவனெல்லாம் ஆப் மதராசி ஹை?! (வரி உபயம்:அண்ணாச்சி) என்று ஆச்சரியமாகக் கேட்க வைத்தற்கு காரணமான ஒரு பெருமை மிக்க நிறுவனமான ETA குழுமத்தின் கிரீடத்தில், இந்த விருது மேலும் ஒரு வைரமாக மிளிருமென்றால் அது மிகையாகாது.

ஒரே நாளில் 10,000 ஹிட்கள் பெற்ற கவர்ச்சி படங்கள்

நண்பர் நட்புடன் ஜமாலின் சமீபத்திய "10 வரியில் தெரியாத கவிதை" பதிவையும் அதற்கான பின்னூட்ட எண்ணிக்கையையும் கண்டு டரியல் ஆகி மனம் நொந்து வலைகளில் உலாவிய போது தான் இந்த குளு, குளு படங்கள் கண்ணில் மாட்டியது..."நான் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறுக" என்ற கோட்பாட்டிற்கிணங்க உங்கள் பார்வைக்கு...




நான் தான் நமீதா...




ஹூம் அப்படி பாக்காதீங்க...வெட்கமா இருக்கு...





குளுகுளு படங்கள்...




நான் குளித்தால் தீபாவளி...ஹோய்...





நானும் பொண்ணு தாங்க...நம்புங்க


என்ன நண்பர்களே, கவர்ச்சி மழையில் நனைஞ்சீங்களா..? ( என்னங்க இப்படிகொலை வெறியோட பார்க்கறீங்க...இந்த மகாபாதகன் இவ்வளவு மோசமானவனா என்று நீங்க யோசிச்ச படி பதிவை ஓபன் பண்ணும் போதே யோசிச்சிருக்க வேண்டாமா.. இன்னிக்கு ஏப்ரல் ஒன்று என்று....

ENJOY THE APRIL FOOL DAY.......

என் காதலும் புனிதமானது தான்…இது ஒரு சிதைந்த இதயத்தின் சிணுங்கல்…

இது என் கதையல்ல…என் கவிதை. இது என் கல்லூரி காலத்தில் என்னை என் பேனாவிற்கே அறிமுகமில்லா வேளையில் எனக்கும் கவிதை வருமென்று என்னை உணர வைத்த கவிதை…இது என் நண்பனின் கதை மட்டுமல்ல,காதலை உணர்ந்த பெரும்பாலோனோரின் வாழ்வில் நடக்கும் நிகழ்ச்சி…



அவன் எனக்கு மிக நெருக்கமான நண்பன்…அவன் உணர்வுகளை உதிர்க்கத் தெரியாத ஊமை…காதல் யாரை விட்டது…? அவனையும் தொட்டது ! காதலை சொல்லாமலேயெ அவனுள் தாஜ்மகால் கட்டி முடித்தான் கண்ணீரில்…!

அவன் வேதனையில் நான் விசும்பினேன்…என்னுள் உறங்கிய படைப்பாளி அவனால் விழித்தான், படைப்பாளிக்கே உரிய கூடு விட்டு கூடு பாயும் வித்தை உணர்ந்து அவனாய் மாறி பேனாவுடன் தவமிருந்தேன்…அந்த ஊமைக்கனவை மொழிபெயர்க்கும் விதமாக இந்த கவிதையை எழுதி முடித்தேன்…அவன் கரம் கொடுத்தேன்…வாசித்தான்…நீண்ட நேரம் ! கவிதையை முடிக்கும் வேளை அவன் கண்களிலிருந்து ஒரு துளி கண்ணீர் கவிதை வரியில் விழுந்தது… அவன் நிமிர்ந்தான்… தன் காதல் கனவுகளை தாஜ்மஹாலாய் வடித்த அந்த கட்டிடக்கலை வல்லுனரை ஷாஜஹான் பார்த்த அந்தப்பார்வை அவன் விழிகளில் தெரிந்தது… என் முதல் கவிதைக்கு கிடைத்த பெரும் அங்கீகாரம் அது…அந்த நெடிய கவிதையை உங்கள் பார்வைக்கு பரிமாறுகிறேன்… படிப்பீர்கள் என்ற நம்பிக்கையில்…

(நீளம் கருதி படிக்க வேண்டாம் என்று முடிவு செய்தவற்களுக்கு பதிவில் உள்ள " வண்ண வரிகளை" மட்டும் படித்து மறக்காமல் பின்னூட்டம் இட்டுச்செல்லவும்)



“வஸீரா”
நான் உச்சரித்த உன்னதமான
பெயர்
நான் ரசித்த சிறந்த
கவிதை
நான் நேசிக்கும்
அழகுப்பதுமை...

என் இறந்தகாலத்தின்
இறவா நினைவுகளை
இதயம் திறந்துபார்க்கிறேன்…
அப்படியே பசுமையாய்
உன் நினைவுகள்
உன்னை அறிமுகப்படுத்திய
அந்த நிகழ்ச்சி
என் நெஞ்சில்நிழலாடுகிறது…
அன்று வகுப்பறையில்
மதிப்பெண்கள் வருகிறது
வழக்கமாக என் பெயர் இருக்கும்
முதல் இடத்தில் ஒரு “பெண்” பெயர்
வாசித்தேன்
“வஸீரா”

யார் இந்த வசீகரமான
பெயருக்குச் சொந்தக்காரி..?
என்னுள் ஏதோரசாயன மாற்றம்
எட்டாத வேகத்தில்என் இதயத்துடிப்பு
எனக்கு என்னவாயிற்று…?
நான் ஏன் இப்படிஉணர்ச்சி வயப்படுகிறேன்..?
என் சிந்தனையெல்லாம் அந்த
முகம் காணாத பெண்ணின்
முந்தானைச் சுற்றித் திரிகிறதே…?
சிந்தனையின் முடிவில்
முகம் பார்க்காமலேயே
உன்முகவரி மனனம் செய்கிறேன்…
உனக்கு ஞாபகம் இருக்கிறதா…?
நாம் சந்தித்த அந்தஇனிய நிமிடங்கள்
பெயர் மட்டுமே தெரிந்ததேவதையை சந்திக்கிறேன்
எத்தனை அழகு..!
அஜந்தா எல்லோரா ஓவியங்கள்
ஒரு பெண்ணாகஉருவெடுத்து விட்டனவா…?
மோனாலிஸாவை சித்திரத்தில்
கண்டு சித்தனாகியிருக்கிறேன்,
அது எப்படி என் நேரில்…?
நான் சித்திரமானேன்
என் இதயம் சிதறிக்கொண்டிருந்தது…


நீங்கள் தான் அஹமதா..?
ஒரு வாத்தியத்தை வாசித்தாற்ப்போல்
உன் வார்த்தைகள் செவி புகுந்து
என் இதயத்தின் அடிப்பாகத்தில்
அடைக்கலம் புகுந்தது…
உன் உச்சரிப்பில் என் பெயரின்
பெருமை உணர்ந்தேன்…
பெருமிதம் கொண்டேன்
வழக்கமான வார்த்தை
வெளிநடப்புக்கிடையே
ஆம் என்றேன்…

அன்று முதல்
நம் சிநேகம் ஆரம்பித்தது…
நீ சிரிக்கும் போதெல்லாம்
நான் சிலையாகியிருக்கிறேன்
நீ வருந்தும் போது
வாத்தியமாகி சோகராகம்
வாசித்திருக்கிறேன்
நீ சினம் கொண்டால்
நான் சிதைந்திருக்கிறேன்
ஆனால் இதயம் திறக்கவில்லை
என்ன காரணம் ..?
எண்ணிப்பார்க்கிறேன்…

அச்சம்...
என் அன்பின் பிணைப்பிற்கு பெயர்
காதல் என்று சொல்ல
எனக்கு அச்சம்…
ஒரு வேளை நீ மறுத்தால்…
முயலவில்லை முடியவில்லை
என்பது வேறு
முயன்றும் முடிய வில்லை
என்பது வேறு
உன் விசயத்தில்முயலவில்லை முடியவில்லை
என்று கூறவே ஆசைப்பட்டேன்
உன் இதயக் கோட்டையை கைப்பற்ற வேண்டும்
என்பதை விட குப்பை என்று
எனக்கு நீ குட்பை சொல்லி விடக்கூடாது
என்பதிலேயே குறியாகஇருந்தேன் …

நாட்கள் நகர்ந்தன
பள்ளி இறுதி நாளும் வந்தது
பசுமை யான நினைவுகளோடுபிரிந்தோம்…
பிரிவது கொஞ்சம் சாவது போல
எனும் பிரான்ஸ் பழமொழிக்கு
அன்று அர்த்தம் புரிந்தது


அன்று என் கண்கள்நீங்கிச்சென்றவள்
இன்றும் என் கண்களில்கண்ணீராய்…




என் இதயத்தில் உன் நினைவுகள்
நிழலாடும் போதெல்லாம்
என் விழித்திரையில் கண்ணீர்த்துளிகள்
தள்ளாடுகின்றன….


உன்னை நினைத்துக் கதறி
அழத்தோன்றியது…
என் ஆண்மை தடுத்தது
காணும் இடமெல்லாம்
உன் பெயர் கதறத் தூண்டியது
என் தன்மானம் தடை விதித்தது

உன்னை மறக்க முயற்சித்தேன்…
சாலையில் செல்லும்
மனங்கவர்மகளிர் பார்த்தால் உன் ஞாபகம்
சோலையில் பூக்கும்
மணங்கமழ் மலர்கள் பார்த்தால் உன் ஞாபகம்
எப்படி முடியும் உன்னை மறக்க…?

மணலைப் பார்த்தால்உன் பெயர் எழுதினேன்
மழலை பார்த்தால்உன் பெயர் சூட்டினேன்
கடலைப் பார்த்தால்உன் பெயர் கதறினேன்
கலையைப் பார்த்தால்உன் பெயரிட்டேன்
எப்படி முடியும் உன்னை மறக்க…?

உன்னை சந்தித்த நாட்களை விட
உனை சிந்தித்த நாட்களே அதிகம்
உன்னை எண்ணும் போதெல்லாம்
தூரிகை ஒன்று என் இதயமெங்கும்
ஸ்லோமோஷனில் உன்னைவர்ணம் தீட்டுகிறது…
அது என் இதயம் மட்டும்அறிந்த ஒவியம்…!

பாவம் உலகப்புகழ்
ஓவியர்களுக்குக் கொடுத்து வைக்கவில்லை…
ரவிவர்மா உனை சந்தித்திருந்தால்
வேறு ஓவியத்தை சிந்தித்திருக்க மாட்டான்
லியானோர் டாவின்சி உனை கண்டிருந்தால்
உனை வரைந்து மோனோலிஸா என்றிருப்பான்
பிக்காஸோ உனை பார்த்திருந்தால்
நீயே என் ஆயுள் மாடலென்று போற்றிருப்பான்
பாவம் உலகப்புகழ்
ஓவியர்களுக்குக் கொடுத்து வைக்கவில்லை…


உன் நினைவுகள் கரையான்களாய்
இருந்திருந்தால்
இன்று என் இதயம் முழுதும்
அரிக்கப்பட்டிருக்கும்
உன் நினைவுகள் இனிப்புகளாய்
இருந்திருந்தால்
என்றோ நான் சக்கரை நோயாளியாய்
செத்திருப்பேன்
உன் நினைவுகள் வார்த்தைக்கும்
வரிக்கும் கட்டுப்படாதது


இப்படி உனை எண்ணி எண்ணி
இறந்து கொண்டிருந்த போது தான்
என் செவிக்கெட்டிஇதயம் பிளந்தது
‘நீ வேறொருவனை காதலிக்கிறாய்’என்ற
அந்த வார்த்தை அம்புகள்
உண்மையில் முடியவில்லை
என்னால் நம்பமுடியவில்லை
அவன் மீண்டும் உறுதிபடுத்தினான்
என் உறுப்புகள் உயிரிழந்தன
உள்ளமது ஊமையானது
என்னை அறியாமல் வெளியானகண்ணீர்..
அல்ல அல்லகண்களிலிருந்து வரும் தண்ணீர்
அல்லவா கண்ணீர்
இதயத்திலிருந்து கண்களுக்குப்பொங்கும்
குருதித்திரவத்திற்க்குஎன்ன பெயர்…?
பெயர் தெரியாத திரவம்என் கண்களில்...

மீண்டும் உறுதிப்படுத்தினான்
இடி விழுந்தது என் இதயத்தில்
இடிந்து விழுந்தது என் இதயக்கோட்டை
எனக்கு மட்டுமே சொந்தம்
என்றுஎன்று எண்ணிக்கொண்டிருந்தவள்
இன்று வேறொருவனுக்கு சொந்தம்
என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளஇயலவில்லை…
என் இதய அரியணையில் என்றோ
ராணியானவள் இன்று
வேறொருவன் இதயத்தில் மகாராணி
என்பது மனதுக்கொப்பவில்லை…

உனை இன்னொருத்தன்
காதலிக்கிறான்
என்பதை என் இதயம் தாங்கும்
பலாச்சுளைகளில் ஈக்கள்மொய்ப்பதற்க்கு
தடா போட முடியுமா
ஆனால் நீ இன்னொருத்தனை
காதலிக்கிறாய் என்பதைத்தான்
என்னால் தாங்க இயலவில்லை
இலவு காத்த கிளியாக மாற
எனக்கு சம்மதமில்லை
கதறி அழுதேன்…இதயத்துள்
வேறு என்ன செய்ய இயலும்…?

ஆனால் மறந்து விட வில்லையே…
எப்படி முடியும்
அந்த இனியநிகழ்வுகளை மறக்க
எப்படி முடியும்…?

தமிழில் உயிர் எழுத்து எத்தனை
என்றால் மூன்று என்கிறேன்
ஆங்கிலத்தில் கேட்டால்
ஏழு என்கிறேன்
மற்றவர்களுக்கு வேண்டுமானால்
இது வேடிக்கை யாக இருக்கலாம்

உன் பெயரில் இடம்பெற்ற
எழுத்துக்கள் தான்
எனக்கு "உயிர்"எழுத்துக்கள்
என்று அவர்கட்குதெரிய
வாய்ப்பில்லை தான்…

உண்மையில் அந்த எழுத்துக்கள் தான்
தவம் செய்திருக்க வேண்டும்
உனக்கு பெயரமைத்துக் கொடுத்ததற்க்கு
உனக்குத்தெரியுமா
உன்னால் நேசிக்கபபட்டவன்
என்று தெரிந்த பின்புதான் உன் காதலனையும்
நேசிக்க ஆரம்பித்தேன்
நீ நேசித்தது விஷ ஜந்து என்றாலும்
அதையும் பூஜிப்பேன்…

என் காதலை மறக்க
செத்து மடி என்றாளும்
அதையும் செய்வேன்
ஆனால் தற்கொலைக்குத்
தேர்ந்தெடுக்கும் விஷத்தில் கூட
உன் பெயரின் எழுத்துக்கள்
எங்கேனும் உள்ளனவா..?என்று
தேர்ந்தெடுத்துதான் குடிப்பேன்
சாவிலும் உன் நினைவுஎன்னை
இன்னொரு முறைவாழ வைக்கும் எனும்
சூத்திரம் அறிந்தவன் நான்…

நண்பர்கள் உனை மறந்துவிடச்சொன்னார்கள்…
முயற்சித்தேன்உனை மறக்க முயன்ற
ஒவ்வொருநொடியும்
நீ என் நினைவில் நின்றாய்….
காலை விழித்ததுகாபி தந்தாய்
குளிக்கும் போது முதுகு தேய்த்தாய்
குளித்து முடிந்ததும் தலை துவட்டினாய்
உன் உணவை எனக்கூட்டி
உன் மடியை தலையனையாக்கிஎனை
உறங்க வைத்தாய்
இப்படி என் அன்றாட வேலை கூட
உன்னால் செய்யப்படுவதாய் பிரமை…
முயற்சித்தேன்..மீண்டும் மீண்டும்முயற்சித்தேன்..
மில்லி மீட்டர் மீல்லி மீட்டராய்
என் இதயம் விட்டு இடம் பெயர்ந்தாய்
நீ முழுமையாக என் இதயம் விட்டு
நகரும் நாள் என் வாழ்நாளின்
முடிவு நாள் என்பதை நான் அறிவேன
இருந்தாலும் முயற்சிப்பேன்
ஒரு நாள் என் இதயத்தில்
நீ ஆழமாக அறைந்த
ஆணியை அகற்றி விடுவேன்
என்ற நம்பிக்கை எனக்குள்ளது
ஆனால் அதன் காயம்
நான் சாகும் வரை
ஈரமாகவே இருக்கும்
இரத்தக் கசிவுடன்…!

“ஏமாற்றிய இதயத்தின்
வஞ்சகத்தை அறிந்த பின்பும்நேசிக்கும் வரை
"காதல் புனிதமானது தான்”
என்று என்றோ படித்த ஞாபகம்

உன் இதயம் வேறொருவனை
நேசிக்கிறது என்பதை
அறிந்த பின்னும் நான் உன்னை
நேசிக்கும் வரை
என் காதலும் புனிதமானது தான்…!

என் பள்ளிப்பருவமும், பதிவர் உலகமும்…

“பாட்டி நானும் பதிவராயிட்டேன்”

நான் வலைப்பூ ஆரம்பித்தவுடன் ஏற்பட்ட சந்தோஷத்தை என் எழுத்து வேகத்திற்கு எண்ணெய் ஊற்றி எனர்ஜி தந்த சீதாப்பாட்டிக்கு அமெரிக்காவிற்கு அழைத்து பகிர்ந்து கொண்ட தருணத்தை எண்ணிப்பார்க்கிறேன்.

அப்போது எனக்குத்தெரியாது இந்த பதிவர் உலகம் இவ்வளவு சவால் நிறைந்ததென்று….

நான் எப்போது எழுத ஆரம்பித்தேன் என்பது என் நினைவில் இல்லை ஆனால் என் பள்ளி பருவத்தில் நான் எழுதாத எழுத்திற்கு கிடைத்த விமர்சனங்கள்…என்னுள் மறக்க முடியாத பாகத்துள் பதிவாகியிருக்கிறது.



அப்போது நான் நடுநிலைப்பள்ளி படித்துக்கொண்டு இருந்தேன் என்று நினைக்கிறேன்.அது ஒரு கோ-எஜுகேசன் பள்ளி…அந்த வயதில் ஆண்,பெண் என்று பிரித்து பார்க்கும் பக்குவம் இல்லாததனால் எனக்கு தோழர்களை விட தோழிகள் அதிகம்.அதிலும் “அவள்” எனக்கு நெருங்கிய தோழி…பள்ளிக்கூட பாதையில் என்னுடன் பயணப்படுபவள், நாள் முழுதும் என் கூடவே இருப்பாள்…அந்த வயதில் என்னென்ன கதை பேசினோம் என்று இன்று என் நினைவுகளிலிருந்து மீட்டெடுக்க இயல வில்லை…என்றாளும் இன்றும் அவளை எண்ணினால் என் நினைவுகளில் எட்டிபார்ப்பது…தெத்துப்பல் தெரிய அவள் சிரிப்பு…புத்தகத்திற்கிடையே அவள் வளர்த்த மயில் இறகு...அவ்வப்போது அவள் கடித்து தந்த கடலை மிட்டாய்…


இடைவேளை நேரங்களில் நாங்கள் சேர்ந்தே விளையாடுவோம்…வழக்கமான விளையாட்டுக்களை விட நாங்களே கண்டுபிடித்த (??) சில விளையாட்டுக்கள் அப்போது எங்களுக்குள் பிரபலம்… அதில் ஒன்று டாக்டர் விளையாட்டு.தீர்ந்து போன விக்ஸ் டப்பாவினால் செய்யப்பட்ட ஸ்டெதஸ்கோப் கொண்டு நோயாளியாய் நடிக்கும் நண்பர்களுக்கு வைத்தியம் பார்க்கும் டாக்டர் நான்…

மிட்டாய் மாத்திரைகளை கடையில் வாங்கி புட்டியுனுள் இட்டு நான் எழுதித்தரும் மருந்துச்சீட்டுக்கு மருந்து கொடுக்கும் மருந்து கடை நடத்துபவளாக “ அவள்”.


எங்கள் விளையாட்டு எங்கள் சீனியர்களுக்குப் பிடிக்க வில்லை…அவர்களைச் சொல்லி குற்றமில்லை. மனிதன் வளர வளரத்தான் வக்கிரப்புத்தியும் சேர்ந்து வளர்கிறது.அவர்கள் வளர்ந்தவர்கள்… நான் எழுதிய மருந்துச்சீட்டை அந்தப்பெண்ணிற்கு நான் எழுதிய காதல்(???)கடிதம் என்றார்கள். டேய் இந்த வயசில் லவ் லட்டர் எழுதுறியா? என்றார்கள்…எனக்கு அர்த்தம் புரியவில்லை, அதற்கான வயதும் இல்லை…அதன் பின் அவளுடன் விளையாடக்கூடாது என்று கண்டிக்கப்பட்டதாய் ஞாபகம்…இருந்தாலும் நாங்கள் அந்த பள்ளி படித்த வரை “அவள்” தான் என் நெருங்கிய தோழி…

அதன் பின் வயதுக்கேற்ப ஒரளவு உலக அறிவு வளர… அடிக்கடி காதல் கவிதைகள் எழுதிய பழக்கம் இருக்கிறது.எனக்காக அல்ல என் நண்பர்களுக்காக…

நண்பர்களின் காதலிகளுக்காக நண்பர்கள் நிலையிலிருந்து நான் எழுதிய காதல் கவிதைகள் கிளிக் ஆக …நான் ராசிக்கார கவிஞன் ஆனேன்…உன்னைப்போல வருமா என்று நண்பர்கள் உசுப்பேற்ற …மருந்துக்கு கூட காதல் இல்லாமல் விரட்டி விரட்டி காதல் கடிதம் எழுதினாலும், கல்யாணத்திற்கு முன்பு வரை எனக்காக ஒரு காதல் கடிதம் கூட நான் எழுதியதில்லை… ( நம்புங்க…)

என் எழுத்துக்கள் அனைத்தும் மற்றவர்கள் பெயரிலேயே வெளி வர எழுத்துக்கள் அனைத்தும் முகம் அறியாமலேயே இல்லாமலேயே முகவரி தொலைத்தது.

சென்னையில் சிலவருடம் ஆணி புடுங்கிய காலங்கள்…

சீதாப்பாட்டி ( முத்தமிழ் சீதாம்மா) பழக்கமான தருணம் அது.
அந்த தமிழ் பாட்டியுடன் இலக்கியம் பேசிய தினங்கள்…வாழ்வில் மறக்க இயலா கணங்கள்…
சீதாப்பாட்டிக்கு நான் எழுதிய மடல்கள் தான் என் எழுத்திற்கான பயிற்சிப்பட்டறை…

அதன் பின் துபாய்…

காவிரிமைந்தனின் அறிமுகம்…என்னுள் சிதைந்திருந்த திறன்களை செப்பனிட்ட சிற்பி அவர். அதன் பின் அவரால் அறிமுகப்படுத்திய வானலை வளர்தமிழ், தமிழ்தேர் என்று என் எழுத்தை அங்கீகரிக்க ஒரு கூட்டம்.

அந்த நேரத்தில் தான் பதிவர் உலகம் பற்றி பாட்டி மூலம் அறிந்தேன்…அவரின் தூண்டுதலின் பெயரிலேயே தான் பதிவர் உலகில் புகுந்தேன். முதல் பதிவு எழுதிவிட்டு ஒரு பெருங்கூட்டம் வந்து படிக்கப்போகிறது என்று காத்திருந்த எனக்கு பெருத்த ஏமாற்றம்…என்னைத்தவிர வேறு யாரும் படித்த மாதிரி தெரியலை…ஒரு கமெண்ட் ஆவது வராதா என்று வந்து பார்த்தா வந்த ஒன்று, இரண்டு பேரும் பெயர் வெளியிட விரும்பாத வாசகர்கள்…

சரி நம்ம பதிவை நமது நட்பு வட்டத்திற்குள் மின் அஞ்சல் மூலம் பரப்புவோம் என்று, முதலில் எங்கள் Architect Group ற்கு அனுப்பி வைத்தேன். வெறும் Auto Cad, Site Work என்று வெறுமையாக கழிப்பவர்களுக்கு நம் எழுத்துக்கள் சற்று மாறுதலாக இருக்கட்டுமே என்ற நல்ல எண்ணத்தில் . இரண்டு நாள் கழிச்சி Comment Moderation page பார்த்தால் ஒரு Comment வந்திருந்தது… நம்மையும் ஒரு பொருட்டா நினைச்சி யாரோ ஒருத்தன் Comment போட்டிருக்காண்டா என்று ஆர்வத்துடன் Open பண்ணினா…என் ஜூனியர் ஒருத்தன் அனுப்பியிருந்தான் உள்ளே, Line, Circle, Copy, Erase ன்னு அனுப்பியிருந்தது.எனக்கு ஒன்றும் புரியவில்லை… உடனே அவனிடம் போன் பண்ணி கேட்டால் நீங்க தானே Post a Comment ன்னு போட்டிருந்தீங்க… அதனாலே தான் Auto Cad Comment எழுதி அனுப்பினேன்..நீங்க ஒன்று தான் கேட்டீங்க ஆனா நான் நாலு அனுப்பியிருக்கேன் என்று அவன் ஆர்வத்தில் பேசிக்கொண்டே போக, நான் டரியல் ஆகிப்போனேன்.

சரி இது தான் தோல்வியடைந்து விட்டது…மீண்டும் பதிவர்களுக்கே …மின் அஞ்சலில் அனுப்பினால் என்ன..? என்று எண்ணிய வேலையிலேயே சில மூத்த பதிவர்கள் கனவில் வந்து மிரட்டினார்கள்…ஆகா இவங்க கோபப்பட்டு “மின் அஞ்சலில் தொல்லை தரும் இளம் பதிவர்கள்” என்று மானத்தை வாங்கிப்புட்டா…? வேணாய்யா வேணாம்…தமிழ் மணம், தமிழிஷ் போன்றதிலேயே போதும் என்று ஒரு மனதாக முயல…அதிலும் சூடான இடுக்கையில் இடம் பெற நம் பதிவிற்கு தகுதியில்லையா என்று நம் உள்மனமே நம்மை வம்பிற்கிழுக்க…ரொம்ப மெனக்கெட்டு உக்காந்து யோசிச்சி ஒரு பதிவு போட்டா… அதுவும் இழுத்து ஊத்திக்கும்…

எந்த அடிப்படையில் பதிவுகள் இங்கு அங்கீகரிக்க படுகிறது என்று ஆராய்ந்து பார்த்தால் எல்லாம் நட்பு வட்டத்தின் அடிப்படையில் தான்…பின்னூட்டங்கள்…ஹிட் எல்லாமே பதிவின் தரத்தைப்பொருத்து மட்டுமே வருகிறதா என்றால்…கண்டிப்பாக இல்லை…இங்கு படிப்பவர்களை விட படைப்பாளிகள் அதிகம்…இதில் யாரையும் குறை சொல்ல இயலாது. இருந்தாலும் இதில் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய இருக்கிறது. கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே…ஆம் எதிர்பார்ப்பை குறைத்து எழுதுவதை தொடர்வது மட்டுமே பதிவுலகில் வேரூன்ற ஒரே வழி…

“பாட்டி நானும் பதிவராயிட்டேன்…”

அப்போது எனக்குத்தெரியாது இந்த பதிவர் உலகம் இவ்வளவு சவால் நிறைந்ததென்று…

Related Posts with Thumbnails