மிதிவண்டி ( அது தாங்க சைக்கிள்…) நம்மில் பல பேர் வாழ்க்கையை திருப்பிப் பார்த்தால்… ஞாபகம் வருதே ஞாபகம் வருதே என்று கிராமத்து தெருக்களில் நம்மை பள்ளிப்பருவத்திற்கு அழைத்துச் சென்று, கால் கையில் ஆராத ரணமாகவும் , நெஞ்சத்தில் நீங்கா நினைவாகவும் நம்முடன் வரும் பாலர் பருவத்து வாகனம்…
வண்டியில் ஏறி ஓரம்போ ஓரம்போ எனக் கூக்குரலிட்டு ஆளில்லா இடங்களிலும் மணியடித்து, வயதான கிழங்களை இடித்து, கடலை மிட்டாய் கடித்தபடி கைவிட்டு சைக்கிள் ஓட்டி,பிகர்களை கரக்ட் பண்ணும் விதமாய்
தெருக்களில் வலம் வந்த நாட்களை அசை போடும் இந்த வேளை… இதயத்துள் ஏதோ எழுத்துக்கூட்டி பார்க்க இயலா சுகம்…
அப்போதெல்லாம் எங்கள் ஊரில் எல்லாத் தெருக்களிலும் வாடகை மிதிவண்டி நிறுவனங்கள் இருக்கும்… சைக்கிள் கம்பெனி என்று நாங்கள்
அழைப்போம்…எந்த விடுமுறை என்றாலும் எங்களின் சேமிப்பு அனைத்தும் அந்த நிறுவனங்களுக்கே அர்ப்பணம்… கால் வண்டி, அரை வண்டி, முக்கால் வண்டி, முழு வண்டி என்ற கணக்கு போதனைகள், அந்த பள்ளிபருவத்தில் சைக்கிள் மூலமே ஆரம்பித்தது எனலாம்…
வயதுகள், வளர்ச்சிகள் ஏற ஏற புரோமோஷன் கிடைப்பது போல கால் வண்டியிலிருந்து அரைவண்டி மாறும் போது நமது வட்டாரங்களில் நமக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்குமே அப்பப்பா அந்த அந்த புகழ்ச்சியே தனிதான் போங்க…
சைக்கிளில் பக்கத்து கிராமங்களுக்குச் செல்ல புழுதி புடைச் சூழ கிளம்புவோம்…பசுமை நிறைந்த அந்த தோட்டத்து வீதியில் இளம் தென்றல் முகம் மோதுமே அதற்கு எந்த ஏசிக்காற்றும் இணையாகாது…இதற்கிடையில் சைக்கிள் போட்டியும் நடக்கும், எத்தனை வேகமாக சென்றாலும் பிகர்கள் குறுக்கிட்டால் வண்டி ஆட்டோமெடிக்காக ஸ்லோவாகி விடும் … எட்டு போடுவது, பதினாறு போடுவது என்ற வித்தைகளெல்லாம் அப்பொது தான் அரங்கேறும்…
‘களுக்’கென்று சிரித்துச் செல்லும் அந்த கிராமத்துச் சிட்டுக்களைஅவ்வப்போது டபுள்ஸ் ஏற்றி இதயத்துள் பாரதிராஜா பாணியில் ஓடவிட்டு ரிவைண்ட் பண்ணி பார்ப்பதின் சுகமே அலாதி தான்…
இளையராஜா, ரகுமானுக்கே அறியாத நுணுக்கமான ட்யூன்களை சைக்கிள் பெல்லினால் விரல் நுணியில் வித்தை காட்டி “ ட்ரிங் ட்ரிங் “ என்று சமிஞ்கைகள் பரிமாறிய கணங்கள்…வாழ்வின் மெலோடியஸ் தினங்கள்…
அந்த வயதில் சொந்த சைக்கிள் என்பது எங்களுக்குஒருலட்சியக்கனவு. அதை அடைய ஒவ்வொருவர் தகுதிக்கேற்ப இலக்குநிர்ணயிக்கப்படும்...பெரும்பாலும் அது அடைய முடியாத இலக்குவாகவே இருக்கும், சில பேருக்கு நீ பாஸ் ஆயிட்டா உனக்கு சைக்கிள் வாங்கிதருகிறேன் என்பார்கள்… அவன் தேர்வு பெற மாட்டான் என்பதில் அவன் பெற்றோர்களுக்கு அவ்வளவு நம்பிக்கை…(அந்த நம்பிக்கை வீணாகவில்லை என்பது வேறு விசயம்…)ஸ்கூல் ஃபர்ஸ்ட் வந்தால், தமிழ் நாட்டிலேயே முதல் மாணவனாக வந்தால்…இப்படி எட்ட முடியா இலக்குகள் ஏராளம் அப்போது சொந்தசைக்கிள்வைத்திருப்பவன் பணக்காரன், பைக் வைத்திருப்பவன் பெரும் பணக்காரன் என்பதே அன்றைய எங்கள் பகுதியின் பொருளாதார புள்ளி விபரம்…
‘எரி பொருள் சேமியுங்கள்’ இந்த விளம்பரத்திற்கு நாங்களும் எங்களை அறியாமல் அந்தப்பருவத்தில் பங்காற்றி இருக்கிறோம் என்பதே பெருமையான விசயம் தான்…
இன்று காலம் மாறிவிட்டது… காட்சி மாறி விட்டது… வாழ்க்கை மாறி விட்டது,வசதி கூடி விட்டது…எங்கும் பிரமாண்டம் , எதிலும் பிரமாதம், இயந்திர வாழ்க்கை , ஓய்வில்லா ஓட்டம் …பென்ஸ் , BMW என்று நான்கு சக்கர வண்டி மோகம் மிதிவண்டியின் மார்க்கட்டை நிலைகுலைய செய்து விட்டது…இருந்தாலும் மறக்க இயலவில்லை…
இன்றும் பெரும்புள்ளிகள் அனைவரிடமும் சைக்கிள் உண்டு…சைக்கிளிங் என்ற பெயர் மாற்றத்துடன்…மிதிக்க மிதிக்க மிரண்டு ஓடும் மிதிவண்டி இல்லை இது…நம் உடல் நோக ஓட்டினாலும் ஒரு இன்ஞ் நகரா வண்டி இது.
என் இதயத்துள் ஒரு பேராசை, ஜிம்மிலும், கிளப்பபிலும் சைக்கிளிங் பண்ணும் வேளைஎன் இதயம்தொட்டுச்செல்லும்இந்தஆசை,எத்தனையோகண்டுபிடிப்பை கண்ட விஞ்ஞானிகளுக்கு இது சாத்தியமாகலாம்… அன்று “காணி நிலம் வேண்டும் பராசக்தி” என்றான் பாரதி…இன்று உலகின் சக்தியான விஞ்ஞானிகளிடம் என் வேண்டுகோள் ஒன்று தான்,அது ஒருபுறம் உணர்வுப்பூர்வமானது, மறுபுறம் விஞ்ஞானப்பூர்வமானது, ஆம் ‘விர்ச்சுவல் ரியாலிட்டி’ சம்மந்தபட்டது…
‘கிளப்பில் சைக்கிளிங் செய்தபடி கண்மூட வேண்டும், காட்சிகள் கிராமமாக மாற வேண்டும், பசுமையும்,பறவையும் பார்க்க வேண்டும்… குயிலிசை குரலையும் கேட்க வேண்டும்…கூடி வரும் மான் கூட்டமது கண்டு,மனம் களிப்பில் மது உண்டு…மனமது இறக்கை கட்டி பறக்க வேண்டும்…இறக்கும் முன் மீண்டும் ஒரு முறை பிறக்க வேண்டும் …! ’
2 comments:
என் (ஆரம்ப)முந்தைய பதிவின் "மறு ஒளிபரப்பு" இது.
ரொம்ப கவிதை தனமா இருக்கு சாதாரணமா எழுதியிருக்கலாமே..?
Post a Comment