"சிறகு தொலைத்த சிட்டுக்குருவிகள்" இது ரஹீம் என்ற ஒரு தனிப்பட்ட இளைஞனின் கதை மட்டுமல்ல,கண்ணீரெல்லாம் வியர்வையாகவே இனம் காணப்படும் இந்த அரபுதேசத்தில், தன்னை எரித்து தன் பந்தம் காக்கும் பலத்தியாகச்சுடர்களின் வரலாறு இது…உணர்ச்சிகளை உள் புதைத்து தன் உறவுகளை உயரச்செய்யும் பல உன்னத மனிதர்களின் உண்மை நிலை இது…வாசியுங்கள்..இந்த பாலைவனப்ப்ழுதிக்காற்றை நீங்களும் கொஞ்சம் சுவாசியுங்கள்…
ஒருவேளை பொண்ணு பார்த்து வைத்திருப்பார்களோ..? என்ன சொல்வது ஒத்துக்கொள்ளலாமா..? இல்லை பிடிக்காததை போல் நடிக்காலாமா? என்று சிந்தித்த படி “அம்மா” என்றேன்…
ரஹீமு, எப்படியப்பா இருக்கே? அஜீசு தம்பி வந்திருந்தான், நம்ம இன்ஜினியர் வீடு விலைக்கு வருதாம்..! ஊருலேயே நல்லா வாழ்ந்தவரு, அவசரமா பணம் தேவைன்னு விக்கறாராம்.அதை வாங்கினா, நமக்கும் பெருமையா இருக்கும். எனக்கு சுர்ரென்று கோபம் வந்தது, அடக்கிக்கொண்டு பொறுமையாக, “ அம்மா நமக்கு இன்னொரு வீடு தேவையா ? என்றேன்.“இல்லே ரஹீம், இந்ந்த வீடு பழசாப் போச்சு, அக்காமார்கள் வந்தா தங்கக் கூட வசதியில்லை, இன்ஜினியர் வீடு ரொம்ப வசதியானது, விலையும் கம்மியா வருதாம், ‘ அப்பா, இன்ஜினியர் தம்பி மாதிரி உன்னையும் பெரிய இன்ஜினியர் ஆக்கனும்னு நினைச்சாரு , அது தான் நடக்கலை, அவர் வீட்டையாவது வாங்கி அப்பா கனவை நினைவாக்குடா ரஹீம்’. அம்மா கலங்க ஆரம்பித்தார், எனக்கு என்ன சொல்வதென்று தெரியலை வழக்கம் போல சரி என்றேன். லைன் கட் ஆனது, என் கனவுகளும் தான்…
என் வீட்டு கோபம் சமூகம் மீது திரும்பியது, சே .. என்ன சமூகம் இது? பெண்களை மட்டும் குமராக சித்தரிக்கும் சமூகம், ஆண்களுக்கு இளமை இல்லையா, ஆசை இல்லையா..? வழக்கம் போல, வேலு மாமாவிடம் புலம்பித்தள்ளினேன், மீண்டும் கடன், என் கனவுகள் தள்ளிப்போனது. இடையே சூப்பர்வைசராக பதவி உயர்வு. ஆண்டுகள் உருண்டோடின…
அம்மா, அழைத்திருந்தார்…தனக்கு வயதாகி விட்டதால் எனக்குத் திருமணம் செய்து பார்க்கணும் என்றாள். அவர் சுயநலப் பேச்சை விட அவர் முடிவு என்னை சந்தோஷப் படுத்தியது…எத்தனை கிண்டல்கள், கேலிகள்! உனக்கெல்லாம் கல்யாணமே ஆகாது என்ற எக்கலிப்பு..! எல்லாவற்றிற்கும் முற்றுப்புள்ளியாய் என் மனைவி வந்தாள். சூழ்நிலை காரணமாக காத்திருந்தாலும், தவமாய் தவமிருந்து கிடைக்கப்பெற்றது போல ஒரு பெண்டாட்டி! அன்பு, அடக்கம், மதிப்பு, மரியாதை ஒரு வார்த்தை அதிர்ந்து பேசாத குணம்..விடுமுறையின் மதிப்பு தெரிந்ததே இந்த முறை தான்…

பயண நாள் வந்தது. ஆண்கள் அழக்கூடாது தான் ஆனால் என்னால் அடக்க இயலவில்லை!என் மனைவியும் வாடிப்போனால். ஆனால் அழவில்லை , அழுகையை அழுது வடிப்பதை விட அடக்கி வைப்பது மிகக்கொடுமையானது, எனக்காக அவள் அதை செய்தாள்.. என்னுள் பெருமிதம் ! எனக்காக, எனக்காக மட்டுமே எதையும் செய்ய, என்னை மட்டும் நினைக்க ஒரு ஜீவன் கிடைத்துவிட்டது. அன்று விமானக் கழிவறையில் அதிக நேரம் செலவிட்டேன், அழுவதற்கு..!
துபாய் வந்திறங்கினேன்.. நண்பர்கள் ஆறுதல் சொன்னார்கள், வேலு மாமா அன்பாய் அணைத்துக் கொண்டார், நாள் போக்கில் சரியாகுமென்றார்.மாதம் ஒருமுறை ஊருக்கு பேசும் தொலைபேசி மணிக்கொருமுறையாக மாறியது. என் மனைவி படும் வேதனையை என் அக்காமார்கள் விவரிக்க மனதில் வேதனை இன்னும் அதிக மாகியது. இலக்கியத்தில் பெண்களுக்கு வந்த பசலை நோய் இப்போது எனக்கு வந்தது, முன்பெல்லாம் வருடங்கள் உருண்டோடின இப்போது நாட்களே நகர ஆரம்பித்தன..
இந்த வேதனை இடையே அன்று அலுவலகத்திலிருந்து உற்சாக பானமாய் ஒரு செய்தி. எனக்கு ஃபேமுலி ஸ்டேட்டஸ் வழங்கப்பட்டதாய் ..! காற்றில் பறந்தேன், சந்தோஷ மிகுதியில் சொன்னவரைக் கட்டிக்கொண்டேன், அவர் என் மேலாளர் என்பதை மறந்து…
அறைக்கு வந்தேன் பார்ட்டி கொடுத்தேன் அன்று வேலு மாமாவின் நகைச்சுவையில் பார்ட்டியே களைகட்டியது…
சொந்ததில் உள்ள சில பொறாமை கோஷ்டிகள், "ரஹீமு பொண்டாட்டியை வெளிநாட்டுக்கு எடுக்க போறானாமே.. அங்கே செலவில்லாம் பிச்சுக்கிட்டு போகுமே… "என்று போகிற போக்கில் பத்த வைத்து விட்டுச் செல்ல, கலவரமான அம்மா அக்கா எல்லோரையும் சமாதானபடுத்தி என்னவளை துபாய்க்கு எடுக்க நாள் குறித்து விட்டேன். விடிந்தவுடன் விசா எடுக்க இமிகிரேசன் போகிறேன். குர்ர்ர்ர்ர்’ என்றபடி சற்றே அதிகமாகிய ஏசி சத்தத்தில் நிகழ்காலம் வந்தேன்… மீண்டும் புரண்டு படுத்தேன்…பக்கத்தில் வேலுமாமா முழித்தபடி என்னை பார்த்துக் கொண்டிருந்தார்.
என்ன ரஹீம், நீ இன்னும் தூங்கலையா…?
புன்னகைத்தேன், “ இல்லை மாமா தூக்கம் வரலை”
“மக வரப்போகுதுல்ல அது தான் மருமகனுக்கு குளிரடிக்குது, தூங்கு ரஹீம் நாளைக்கு வேலைக்கு போகனும்”
இல்லை மாமா, “நாளைக்கு நான் வேளைக்கு போகலே..” என்றேன்
“ஏன் ? என்ன ஆச்சு..?” பதறினார்
“விசா எடுக்கப் போறேன், அப்புறம் வீட்டுக்கு 6 மாசம் அட்வான்ஸ் கேக்குறாங்க, கையிலே இருக்கிற அரியர்ஸ் பணத்தை கொடுக்கப் போறேன், டிக்கட்டுக்கு இனி தான் தேத்தணும்..”
வீட்டு சாமானுக்கு என்ன பண்ணப் போறே? அக்கறையுடன் கேட்டார்
கிரிடிட் கார்டு தான்..” நான்
"பேலன்ஸ் இருக்கா…?"
"ஏதோ இருக்கு மாமா” என்றேன்
"புள்ளை வரும் போது வெறும் கையோடவா இருப்பே ? இந்த மாசம் ஒரு (கிரிடிட் )கார்டை கட்டி குளோஸ் பண்ணிடலாம்ன்னு கொஞ்சம் பணம் சேத்து வச்சிருக்கேன் அதை எடுத்துக்கோ.."
"வேண்டாம் மாமா , உங்க கிட்டே எத்தனை தடவை தான் வாங்குறது.. அதுவும் அந்த கார்டை முடிக்கனுங்கறது உங்க ரொம்ப கால ஆசையாச்சே..?"
"அட விட்டுத்தள்ளு ரஹீம் இந்த சனியன் வாலை புடிச்சா என்னாகும்னு நமக்குத் தெரியாதா என்ன..?, எனக்கென்ன .. ஒரே மகள், அவ கல்யாணத்தை பண்ணிட்டா பெரிய கடன் முடிஞ்சிடும் இதுவெல்லாம் சும்ம…"
வேலு மாமா பிக்கப் டிரைவராக இருக்கிறார்.. எங்கள் அறையின் மூத்த குடிமகன்.. எப்போதும் கலகலப்பாய் இருப்பவர்,, அவரின் உதவி செய்யும் குணமறிந்து ஏமாற்றிச் சென்றோர் ஏராளம். சிந்தித்த படி உறங்கி போனேன்.
சீக்கிரமே விடிந்துவிட்டது. இமிக்ரேஷன் சென்றேன், சில மணி நேரத்தில் விசா ரெடி. கண்களில் கண்ணீர்.., இல்லை கண்ணீர் வந்தது… இது ஆனந்த கண்ணீர்..! இனி பணத்தை வீட்டுக்காரரிடம் கொடுத்து விட்டால் வீடும் ரெடி…இரண்டு நாளில் என்னவள் என் அருகில் !போன் செய்ய ஆவல் எழுந்தது.. வீட்டு வேலையையும் முடித்து விட்டு போன் செய்யலாம் என்று அறைக்கு விரைந்தேன்.வாசலில் வேலு மாமாவின் பிக்கப் நின்றது, ஏன் என்ன ஆயிற்று இவருக்கு ஏன் வேலைக்கு போகவில்லை ..? என்று யோசித்த படி உள்ளே நுழைந்தேன்.
வேலு மாமா பதற்றத்துடன் போனில் பேசிக்கொண்டிருந்தார், ஓகே ஓகே , நான் எப்படியாவது அனுப்பறேன்… போனை வைத்து விட்டு என்னிடம் வந்தார்…அவரிடம் என்று மில்லாமல் பதட்டம் காணப்பட்டது,
ரஹீம் என் மகளுக்கு ஆக்ஸிடெண்ட் ஆயிடுச்சாம், ரொம்ப சீரியஸ்ஸாம் ஆபரேசன் பண்ணனும்னு டாக்டர் சொல்லிட்டாராம், வேலு மாமா கதறி அழத்தொடங்கினார்…சிரித்து, சிரிக்க வைத்தே பார்த்து பழக்கப்பட்ட மாமா அழுதது மனதை பிழிந்தது…கண்ணில் நீரை வரவழைத்தது… உடனே ஆபரேசன் பண்ணச்சொல்ல வேண்டியது தானே மாமா…?
“ ஆபரேஷனுக்கு இரண்டு லட்சம் வேணுமாம் ரஹீம், உடனே அவ்வளவு பணத்திற்கு நான் எங்கே போவேன்…
நான் கொஞ்சமும் யோசிக்க வில்லை. என்னிட மிருந்த பணத்தை அப்படியே அவரிடம் கொடுத்தேன், யோசிக்காதீங்க மாமா, உடனே இந்த பணத்தை அனுப்புங்க, தேவை பட்டா நீங்களும் கிளம்புங்க…மீதி பணத்தை நான் ஏற்பாடு பண்ணி அனுப்பறேன்…”
"ரஹீம் !!?" அவர் உறைந்தார்…வேணாம் ரஹீம் இது உன் சந்தோசத்தின் சாவி… இது வேணாம்டா”
“பரவாயில்லை மாமா, ஐந்து அக்காக்களுக்காக என் வாழ்வை பெரும்பாலும் கழிச்சுட்டேன், இது என் தங்கச்சிக்கு செய்றதா நினைச்சுக்குறேன், கிளம்புங்க மாமா”
வேலு மாமா என் கையை இறுகப் பற்றினார். அந்த அழுத்தத்தில் பாசத்தின் வலிமை தெரிந்தது.அவர் பணத்தை எடுத்துக் கொண்டு கிளம்பினார். நான் ஏசியை போட்டு விட்டு கட்டிலில் அமர்ந்தேன்… கையிலிருந்த விசாவை உற்றுப்பார்த்தேன்… கசக்கி வீசினேன்..
டெலிபோன் மணி ஒலித்தது. மறுமுனையில் என்னவள் “ மச்சான் இன்னிக்கு விசா எடுக்க போனீங்களே என்னாச்சி , அஜீசு சாச்சா எப்ப டிக்கெட் போடன்னு கேட்டாங்க, உங்களை சீக்கிரம் பார்க்க போறென்ன்னு கை கால் ஓட வில்லை…நீங்க லட்டெர்லே அனுப்புன முத்தத்தை எல்லாம்கணக்கெழுதி வச்சிருக்கேன், அங்கே வந்ததும் மச்சானுக்கு டபுளா தருவதற்கு” என்றுமில்லாமல் இன்று அவள் ஆசைகளை அடுக்கிக்கொண்டே போக,
நான் சிறகொடிந்த பறவையாய் சிலையானேன்.