அக்னி அவதாரங்கள்




ஒளியின் மறு உருவே –அண்ட
வெளியின் முதல் உருவே இப்புவியில்
உனக்குத்தான் எத்தனை
அவதாரம்..?

முகம் சிவந்தால் கனல்-புவியை
முத்தமிட்டால் அனல்
கோபம் கொண்டால் தீ- திருக்
கோயில் என்றால் தீபம்
வெகுண்டெழுந்தால் சுவாலை-நீ
விளைந்திருந்தால் அது பாலை…

நீ சாதனையாளர்களை
சலனப்படுத்திய
அக்கினிப்பொறிகள்…
ஏவுகணையாய் எம் அபுல் கலாமை
இமயம் உயரச்செய்த
அக்கினிச் சிறகுகள்…
பார் புகழ எம் பாரதியை
பாட்டெழுதச் செய்த
அக்னிக் குஞ்சுகள்…

நீ எடுப்பார் கைப்பிள்ளை..!
தீவிரவாதிகளின் கலாபக்காதலி
கொள்ளையர்களின் குலவிளக்கு
அநாகரீக அரசியலின் குடிசை மாற்று வாரியம்..
அடுப்பில் உனை அடைத்தால்
அறுசுவை உணவு…
அணுவில் உனை அடைத்தால்
கருகிடும் உலகு..!
நீ எடுப்பார் கைப்பிள்ளை..!

நீ மானிடர்களின் சாபக்கேடு
அன்பாய் எம்மை அணைத்தாலும்
வம்பாய் போய்விடும்
பாசமாய் உனைத்தொட்ட போதும்
மோசமாய் போய்விடும்
நீ மானிடர்களின் சாபக்கேடு

நீ பாசக்காரப் பயல்
அடங்காப்பிடாரி உன்னை
அடக்க இருவரால் மட்டுமே இயலும்
ஒன்று உன் அன்னை மணல் –மற்றொன்று
உன் காதலி தண்ணீர்..!
எத்தனையோ பேரின் கண்ணீருக்கு
அடங்காதவன் உன் காதலி
தண்ணீருக்கு மட்டுமே அடங்குவாய்
அவள் அணைத்தால் மட்டுமே- நீ
அணைவாய்..
நீ பாசக்காரப் பயல்

அக்கினியே
அன்பாய் ஒரு வேண்டுகோள்
ஆக்கம் மட்டும் தொட்டு விடு
அழிக்கும் குணமதை விட்துவிடு
உன் நோக்கம் மட்டும் சரியானால்- இப்புவி
போற்றும் சக்தி நீ தானே..

1 comments:

Anonymous said...

//அடுப்பில் உனை அடைத்தால்
அறுசுவை உணவு…
அணுவில் உனை அடைத்தால்
கருகிடும் உலகு..!//

அசத்தல் கவிதை..!

Related Posts with Thumbnails