பெண்கள் வயசுக்கு வந்தா படிக்கக் கூடாதா...?

இஸ்லாமிய சமுதாயத்தில் "பெண் வயசுக்கு வருதல்" எனும் இயற்கை நிகழ்வை காரணம் காட்டி சமூகத்தில் நசுக்கப்படும், பெண்கல்வி, பெண் முன்னேற்றம், போன்ற செயல்களைச் சாடும் சிறுகதை இது.

கதை எங்கள் ஊர் வட்டார மொழியில் கதை பின்னப்பட்டுள்ளதால் அதற்கான அருஞ்சொற்பொருளை கதையின் அடியில் கொடுத்துள்ளேன்.


(சிறுகதை எழுத்தாளர் நண்பர் திருச்சி சையதுவால் தொகுக்கப் படவிருக்கும் இஸ்லாமிய சிறுகதை தொகுப்பிற்கு அளிக்கப்பட்ட சிறுகதை இது. )
பெரிய மனுசி
“ஆயிஷா இனி ஸ்கூலுக்கு வராதாம்” சக நண்பனின் வார்த்தைகள் என்னுள் சாட்டையடியாகப் பதிந்தன.

“ ஏண்டா” பதற்றம் என்னுள்

“அது பெரிய மனுசி ஆயிடுச்சாம்”

'அது எப்படி நானும் அவளும் ஒண்ணாம் வகுப்பிலிருந்து ஒன்றாகப்படிக்கிறோம், நான் பெரிய மனுசனாகலை அது மட்டும் எப்படி,,,?' விடை தெரியாத கேள்விகள் என்னுள் முட்டி மோத அன்று இரவு என்றும் இல்லாத அளவு ஆயிசாவின் நினைவு என்னைச் சுற்றிச் சுற்றி வந்தது..


ஆயிசா என் முதல் பள்ளித்தோழி…பள்ளி செல்லும் வழியில் என்னுடன் பயணப்படுபவள்…என்னை விட உயரம், தெத்துப்பல் சிரிப்பு, நல்ல அறிவாளி முதல் மதிப்பெண்ணைத் தட்டிச்செல்ல எங்களுக்குள் ஒவ்வொரு பரீட்சைக்கும் போட்டா போட்டி இருந்தாலும்,,,நட்பில் எங்கள் நெருக்கம் கண்டு பள்ளியே வியந்து நிற்கும்…


அடுத்த நாள் பள்ளிக்குச் சென்ற போது நண்பன் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது…அவன் சொன்னது பொய்யாக இருக்க கூடாதா என்று மனசு ஏங்கியது. நடந்து செல்லும் தூரத்தில் பள்ளி என்பதாலும்,அன்று மாட்டு வண்டிப்பயணம் கூட வசதியானவர்களுக்கு மட்டுமே சொந்தம் என்பதாலும் என் பள்ளிப்பயணம் முழுவதும் நடை பயணமே…எங்கள் வீட்டிலிருந்து இரண்டாவது முடுக்கை* கடக்கும் போது கடலில் கலக்கவரும் நதி போல் எனக்காக காத்திருப்பாள்.இன்று அந்த இடத்தில் வெறுமை…முடுக்கின் வழியே அவள் வீட்டை எட்டிபார்த்தேன்.ஆயிசாவின் லாத்தா* நின்றிருநதார்கள்.அவரிடமே கேட்டுவிடுவது என்று அருகில் சென்றேன்.

“ரியாஸ், என்ன ஸ்கூலுக்கு கிளம்பியாச்சா…”

“ஆமாம் லாத்தா அது தான் ஆயிசாவை கூட்டி போகலாம்னு வந்தேன்…என்றேன் தயங்கியபடி…

என் சத்தத்தைக் கேட்டு ஆயிசாவின் உம்மாவும் வெளியே வந்தார்…
நான் சலாத்தி* வழியே ஆயிசா தெரிகிறாளா என்று ஊடுருவி பார்க்க முயன்றேன்…அவள் தென்பட வில்லை…

“இனி ஆயிசா ஸ்கூலுக்கு வராது வாப்பா..” ஆயிசாவின் உம்மா.

“ஏன்” இனம் புரியாத ஏக்கத்துடன் நான்.

“அவ பெரிய மனுசி ஆயிட்டா..” ஆயிசா உம்மா முற்றுப்புள்ளி வைத்தார்கள்
ஏமாற்றத்துடன் பள்ளி நோக்கி நடந்தேன்..



‘அவ பெரிய மனுசி ஆயிட்டாளாம் ஸ்கூலுக்கு வரமாட்டாளாம் இது எப்படி பதிலாகும்…போன வாரம் வகுப்பில் லீலா டீச்சர் , பெரிய ஆளா வரனும்னா நல்லா படிக்கணும் என்று சொன்னது நினைவுக்கு வந்தது. ஆயிசா நல்லா படிச்சதுனாலே பெரிய மனுசி ஆயிட்டாளா..?’ வகுப்பில் அவள் ஞாபகம் இருமடங்கானது.

நேற்றுவரை என் கூடவே இருந்தவள் இன்று அவள் வீடு செல்லும் போது கூட நம்மைப்பார்க்க வரலையே…குழப்பம் தொடர்ந்தது…

இரவு சாப்பிடும் போது உம்மாவிடம் கேட்டேன்…
“ உம்மா நான் பெரிய மனுசனாயிட்டா என்னை ஸ்கூலுக்கு அனுப்ப மாட்டியா…? “

“நீ நல்லா படிச்சா தாண்டா பெரிய மனுசனாவே” டீச்சர் சொன்ன அதே வார்த்தை..”

“அப்ப ஏன் ஆயிசா பெரிய மனுசியாயிட்டான்னு ஸ்கூலுக்கு விட மாட்டேன்றாங்க”

“அவ பொம்பளப்புள்ளடா”

“அது என்ன பொம்பளபுள்ளைக்கு ஒண்ணு ஆம்பளை புள்ளைக்கு ஒண்ணு…”

“கெப்பர்தனமா* பேசாமே போய் தூங்குடா..” அம்மா குரலில் சற்று கடுமை.

அன்று விடை தெரியாத வினாக்களுடன் உறங்கிப்போனேன்.

வருடங்கள் உருண்டோடின…நான் படித்து டாக்டராகி எங்கள் ஊரிலேயே கிளினிக் ஆரம்பித்ததென்று என் வாழ்வில் பல அத்தியாயங்களுக்குப் பின் ஆயிசாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அன்று அஸர்* தொழுகையை முடித்து விட்டு வீடு வந்த போது வரண்டாவில் ஒரு பொண்ணுடன் உம்மா பேசிக்கொண்டிருந்தார்கள், அவள் கையில் எட்டு வயசு மதிக்கத்தக்க ஒரு சிறுமி காய்ச்சலில் நடுங்கிய படி…நான் பெரும்பாலும் வீட்டில் வைத்து நோயாளிகளைப் பார்ப்பதில்லை..யார் இவர்கள் என்று எண்ணிய படி வந்த என்னைப்பார்த்த உம்மா…

“ரியாஸ் வாப்பா இது யாரென்று தெரியுதா…பதிலுக்கு காத்திருக்காமல் பதிலையும் சொன்னார், இது நம்ம ஆயிசாடா…அது புள்ளைக்கு ரொம்ப முடியலைன்னு உன்னை பார்க்க வந்திருக்கு…”

“ஆயிசாவா”…எத்தனை வருடங்களாயிற்று…புன்முறுவலுடன் பார்த்தேன்.அவளிடம் முன்பிருந்த உற்சாகமில்லை…அடையாளமும் தெரியவில்லை.இருந்தாலும் அதே தெத்துப்பல் சிரிப்பு…வறுமையின் வாட்டம் அவளைச்சுற்றி தெரிந்தது.




“ எப்படிருக்கே ஆயிசா? “என்ற படி அவ மகளை பரிசோதிக்க ஆரம்பித்தேன்…

“நல்லா இருக்கேன் டாக்டர்” வார்த்தையில் மரியாதை என்னை அன்னியப்படுத்தியது.

“நீ பார்த்துக்கிட்டுயிரு ரியாஸ் வராத புள்ள வீட்டிற்கு வந்திருக்கு, நான் சாயா எடுத்துக்கிட்டு வர்றேன்” என்று கூறிய படி பதிலை எதிர்பாராமல் உம்மா உள்ளே சென்றார்.

நான் ஆயிசாவை நோக்கினேன்…

“ரெண்டு நாளா காய்ச்சல், நானும் சளிக்காச்சல் என்று மருந்து கொடுத்துட்டு விட்டுடேன்.. இப்ப ரொம்ப கொதிக்க ஆரம்பிச்சிடுச்சி…ஊரெல்லாம் மலேரியா, டைபாயிடுன்னு வந்து இப்ப சிக்கன் கூனியா,பன்ணி காய்ச்சல் வேறெ பரவுதாம் பயமா இருக்கு டாக்டர்…”

“பயப்பட ஒண்ணும் இல்லே…பார்த்திடலாம்..”

ஆபிஸ் ரூமிற்கு சென்று ஸ்டெதஸ்கோப்பால் சோதித்தபடி கேட்டேன்…

“:ஏன் ஆயிசா உனக்கு என்னை ஞாபகம் இருக்கா..”

“எப்படி மறக்கும் டாக்டர்…சின்னப்புள்ளையிலே குண்டா இருப்பீங்க…நாம சேர்ந்து தானே ஸ்கூலுக்கு போவோம்…உங்களுக்கெல்லாம் ஹைஸ்கூலு, காலேஜ்ன்னு எவ்வளவோ நினைச்சி பார்க்க இருக்கும் ஆனா ஆறாவது வரை படிச்ச இந்த மக்கிற்க்கு நினைச்சிப்பார்க்க சந்தோசமான நாட்கள்ன்னா அது தானே…டாக்டர்”

“நான் டாக்டர் இல்ல ஆயிசா உனக்கு எப்பவுமே நான் “குண்டு ரியாஸ்” தான்.”

ஆச்சரியப்பார்வைப்பார்த்தாள்…”பரவாயில்லையே எல்லாத்தையும் ஞாபகம் வச்சிருக்கீங்களே…”

“ஒட்டக ஆயிசா” கூட ஞாபகம் இருக்கு…

சிரித்தாள்...

உன் மாப்பிள்ளை எங்கே இருக்கார்…

சிரிப்பு மறைந்தது…

“உங்களுக்குத்தெரியாதா அவங்க எனக்கு வார்த்தை சொல்லிட்டாக *”

எனக்குத்தூக்கி வாரிப்போட்டது.

“ஏன்”

“அவங்க ரொம்ப படிச்சவங்க…அவங்களுக்கு படிக்காத இந்த மக்குக்கூட ஒத்து வரலையாம்” சொல்லும் போதே கண்ணில் நீர் கோர்த்தது…

“ஆமா வாப்பா, இந்தப்புள்ளைக்கு படிக்கிற வயசுலே கட்டிக்கொடுத்துட்டாங்க வந்தவனோ அதிமேதாவி, அது நொட்டை, இது சொத்தைன்னு எடுத்ததுக்கெல்லாம் சண்டை…இப்ப எல்லாத்தையும் இழந்துட்டு நிற்கிறா…இவ காக்கா* தான் அக்கச்சியாவை* வச்சிகாப்பாத்துறான்”
.உள்ளிருந்து வந்த உம்மா காபி ஆத்திய படி பேசிய வார்த்தைகளில் காபியின் சூடு குறைந்தது… எனக்கு சூடு ஏறியது…

சமுதாயத்தின் மீது கோபம் திரும்பியது…வயசுக்கு வந்துட்டா படிப்பை நிறுத்தும் பழக்க வழக்கம் மீது வெறுப்பு அதிகமாகியது… நல்ல படிக்க வேண்டிய ஒரு பெண்ணின் வாழ்வு என் கண் முன்னேயே கரைந்து போனதை என்னால் ஜீரணிக்க இயலவில்லை…

அன்று இரவு தஹஜ்ஜத்* துவாவில் சமுதாய நலனையும் சேர்த்துக்கொண்டேன்…

இரண்டு நாட்கள் கழித்து ஆயிசா மகளுடன் கிளினிக் வந்தாள்…குழந்தையின் உடல்நிலை நன்கு தேரியிருந்தது.

ஸ்டெதஸ்கோப்பை எடுத்த படி “உங்க பேரென்னா” என்றேன்.

“சபானா”


“வெரிகுட் நாக்கை நீட்டுங்க…ஆ குட்…ரொம்ப நல்ல இம்ரூமெண்ட் இனி ஒரு கவலையும் இல்லை” என்றபடி ஆயிசாவை பார்த்தேன்.

முகத்தில் புன்னகை…

“சபானா எத்தனாவது படிக்கிறீங்க”

“ஃபோர்த்…என்றவள் சிறு இடைவெளிக்குப் பிறகு

“டாக்டர் அங்கிள் நான் பெருசா ஆனதும் உங்களை மாதிரி டாக்டரா ஆவேன்” என்க,

நான் ஆயிசாவைப்பார்த்தேன் தலை குனிவாள் என்று எதிர்பார்த்தேன்…ஆச்சரியம் தலை நிமிர்ந்தாள்…நீண்ட பெருமூச்சு விட்டவள்,அழுத்தமாகச் சொன்னாள்.
“இப்பவெல்லாம் படிச்சா மட்டும் தான் பெரிய மனுசி ஆக முடியும்”

அவள் அழுத்த திருத்த உச்சரிப்பில் எனக்கு ஆயிரம் அர்த்தம் தெரிந்து.

வட்டாரத்தமிழ்
*முடுக்கு – சந்து, தெரு, *லாத்தா – அக்கா, சலாத்தி-திரை, *காக்கா –அண்ணன், *வார்த்தை சொல்லுதல் – விவாகரத்து, *கெப்பர் தனம் –அதிக பிரசங்கித்தனம், *அஸர் – மாலை வேளைத்தொழுகை ,
*தஹஜ்ஜத் – நடுநிசித்தொழுகை, *அக்கச்சியா - சகோதரி

Related Posts with Thumbnails