என் காதலும் புனிதமானது தான்…இது ஒரு சிதைந்த இதயத்தின் சிணுங்கல்…

இது என் கதையல்ல…என் கவிதை. இது என் கல்லூரி காலத்தில் என்னை என் பேனாவிற்கே அறிமுகமில்லா வேளையில் எனக்கும் கவிதை வருமென்று என்னை உணர வைத்த கவிதை…இது என் நண்பனின் கதை மட்டுமல்ல,காதலை உணர்ந்த பெரும்பாலோனோரின் வாழ்வில் நடக்கும் நிகழ்ச்சி…



அவன் எனக்கு மிக நெருக்கமான நண்பன்…அவன் உணர்வுகளை உதிர்க்கத் தெரியாத ஊமை…காதல் யாரை விட்டது…? அவனையும் தொட்டது ! காதலை சொல்லாமலேயெ அவனுள் தாஜ்மகால் கட்டி முடித்தான் கண்ணீரில்…!

அவன் வேதனையில் நான் விசும்பினேன்…என்னுள் உறங்கிய படைப்பாளி அவனால் விழித்தான், படைப்பாளிக்கே உரிய கூடு விட்டு கூடு பாயும் வித்தை உணர்ந்து அவனாய் மாறி பேனாவுடன் தவமிருந்தேன்…அந்த ஊமைக்கனவை மொழிபெயர்க்கும் விதமாக இந்த கவிதையை எழுதி முடித்தேன்…அவன் கரம் கொடுத்தேன்…வாசித்தான்…நீண்ட நேரம் ! கவிதையை முடிக்கும் வேளை அவன் கண்களிலிருந்து ஒரு துளி கண்ணீர் கவிதை வரியில் விழுந்தது… அவன் நிமிர்ந்தான்… தன் காதல் கனவுகளை தாஜ்மஹாலாய் வடித்த அந்த கட்டிடக்கலை வல்லுனரை ஷாஜஹான் பார்த்த அந்தப்பார்வை அவன் விழிகளில் தெரிந்தது… என் முதல் கவிதைக்கு கிடைத்த பெரும் அங்கீகாரம் அது…அந்த நெடிய கவிதையை உங்கள் பார்வைக்கு பரிமாறுகிறேன்… படிப்பீர்கள் என்ற நம்பிக்கையில்…

(நீளம் கருதி படிக்க வேண்டாம் என்று முடிவு செய்தவற்களுக்கு பதிவில் உள்ள " வண்ண வரிகளை" மட்டும் படித்து மறக்காமல் பின்னூட்டம் இட்டுச்செல்லவும்)



“வஸீரா”
நான் உச்சரித்த உன்னதமான
பெயர்
நான் ரசித்த சிறந்த
கவிதை
நான் நேசிக்கும்
அழகுப்பதுமை...

என் இறந்தகாலத்தின்
இறவா நினைவுகளை
இதயம் திறந்துபார்க்கிறேன்…
அப்படியே பசுமையாய்
உன் நினைவுகள்
உன்னை அறிமுகப்படுத்திய
அந்த நிகழ்ச்சி
என் நெஞ்சில்நிழலாடுகிறது…
அன்று வகுப்பறையில்
மதிப்பெண்கள் வருகிறது
வழக்கமாக என் பெயர் இருக்கும்
முதல் இடத்தில் ஒரு “பெண்” பெயர்
வாசித்தேன்
“வஸீரா”

யார் இந்த வசீகரமான
பெயருக்குச் சொந்தக்காரி..?
என்னுள் ஏதோரசாயன மாற்றம்
எட்டாத வேகத்தில்என் இதயத்துடிப்பு
எனக்கு என்னவாயிற்று…?
நான் ஏன் இப்படிஉணர்ச்சி வயப்படுகிறேன்..?
என் சிந்தனையெல்லாம் அந்த
முகம் காணாத பெண்ணின்
முந்தானைச் சுற்றித் திரிகிறதே…?
சிந்தனையின் முடிவில்
முகம் பார்க்காமலேயே
உன்முகவரி மனனம் செய்கிறேன்…
உனக்கு ஞாபகம் இருக்கிறதா…?
நாம் சந்தித்த அந்தஇனிய நிமிடங்கள்
பெயர் மட்டுமே தெரிந்ததேவதையை சந்திக்கிறேன்
எத்தனை அழகு..!
அஜந்தா எல்லோரா ஓவியங்கள்
ஒரு பெண்ணாகஉருவெடுத்து விட்டனவா…?
மோனாலிஸாவை சித்திரத்தில்
கண்டு சித்தனாகியிருக்கிறேன்,
அது எப்படி என் நேரில்…?
நான் சித்திரமானேன்
என் இதயம் சிதறிக்கொண்டிருந்தது…


நீங்கள் தான் அஹமதா..?
ஒரு வாத்தியத்தை வாசித்தாற்ப்போல்
உன் வார்த்தைகள் செவி புகுந்து
என் இதயத்தின் அடிப்பாகத்தில்
அடைக்கலம் புகுந்தது…
உன் உச்சரிப்பில் என் பெயரின்
பெருமை உணர்ந்தேன்…
பெருமிதம் கொண்டேன்
வழக்கமான வார்த்தை
வெளிநடப்புக்கிடையே
ஆம் என்றேன்…

அன்று முதல்
நம் சிநேகம் ஆரம்பித்தது…
நீ சிரிக்கும் போதெல்லாம்
நான் சிலையாகியிருக்கிறேன்
நீ வருந்தும் போது
வாத்தியமாகி சோகராகம்
வாசித்திருக்கிறேன்
நீ சினம் கொண்டால்
நான் சிதைந்திருக்கிறேன்
ஆனால் இதயம் திறக்கவில்லை
என்ன காரணம் ..?
எண்ணிப்பார்க்கிறேன்…

அச்சம்...
என் அன்பின் பிணைப்பிற்கு பெயர்
காதல் என்று சொல்ல
எனக்கு அச்சம்…
ஒரு வேளை நீ மறுத்தால்…
முயலவில்லை முடியவில்லை
என்பது வேறு
முயன்றும் முடிய வில்லை
என்பது வேறு
உன் விசயத்தில்முயலவில்லை முடியவில்லை
என்று கூறவே ஆசைப்பட்டேன்
உன் இதயக் கோட்டையை கைப்பற்ற வேண்டும்
என்பதை விட குப்பை என்று
எனக்கு நீ குட்பை சொல்லி விடக்கூடாது
என்பதிலேயே குறியாகஇருந்தேன் …

நாட்கள் நகர்ந்தன
பள்ளி இறுதி நாளும் வந்தது
பசுமை யான நினைவுகளோடுபிரிந்தோம்…
பிரிவது கொஞ்சம் சாவது போல
எனும் பிரான்ஸ் பழமொழிக்கு
அன்று அர்த்தம் புரிந்தது


அன்று என் கண்கள்நீங்கிச்சென்றவள்
இன்றும் என் கண்களில்கண்ணீராய்…




என் இதயத்தில் உன் நினைவுகள்
நிழலாடும் போதெல்லாம்
என் விழித்திரையில் கண்ணீர்த்துளிகள்
தள்ளாடுகின்றன….


உன்னை நினைத்துக் கதறி
அழத்தோன்றியது…
என் ஆண்மை தடுத்தது
காணும் இடமெல்லாம்
உன் பெயர் கதறத் தூண்டியது
என் தன்மானம் தடை விதித்தது

உன்னை மறக்க முயற்சித்தேன்…
சாலையில் செல்லும்
மனங்கவர்மகளிர் பார்த்தால் உன் ஞாபகம்
சோலையில் பூக்கும்
மணங்கமழ் மலர்கள் பார்த்தால் உன் ஞாபகம்
எப்படி முடியும் உன்னை மறக்க…?

மணலைப் பார்த்தால்உன் பெயர் எழுதினேன்
மழலை பார்த்தால்உன் பெயர் சூட்டினேன்
கடலைப் பார்த்தால்உன் பெயர் கதறினேன்
கலையைப் பார்த்தால்உன் பெயரிட்டேன்
எப்படி முடியும் உன்னை மறக்க…?

உன்னை சந்தித்த நாட்களை விட
உனை சிந்தித்த நாட்களே அதிகம்
உன்னை எண்ணும் போதெல்லாம்
தூரிகை ஒன்று என் இதயமெங்கும்
ஸ்லோமோஷனில் உன்னைவர்ணம் தீட்டுகிறது…
அது என் இதயம் மட்டும்அறிந்த ஒவியம்…!

பாவம் உலகப்புகழ்
ஓவியர்களுக்குக் கொடுத்து வைக்கவில்லை…
ரவிவர்மா உனை சந்தித்திருந்தால்
வேறு ஓவியத்தை சிந்தித்திருக்க மாட்டான்
லியானோர் டாவின்சி உனை கண்டிருந்தால்
உனை வரைந்து மோனோலிஸா என்றிருப்பான்
பிக்காஸோ உனை பார்த்திருந்தால்
நீயே என் ஆயுள் மாடலென்று போற்றிருப்பான்
பாவம் உலகப்புகழ்
ஓவியர்களுக்குக் கொடுத்து வைக்கவில்லை…


உன் நினைவுகள் கரையான்களாய்
இருந்திருந்தால்
இன்று என் இதயம் முழுதும்
அரிக்கப்பட்டிருக்கும்
உன் நினைவுகள் இனிப்புகளாய்
இருந்திருந்தால்
என்றோ நான் சக்கரை நோயாளியாய்
செத்திருப்பேன்
உன் நினைவுகள் வார்த்தைக்கும்
வரிக்கும் கட்டுப்படாதது


இப்படி உனை எண்ணி எண்ணி
இறந்து கொண்டிருந்த போது தான்
என் செவிக்கெட்டிஇதயம் பிளந்தது
‘நீ வேறொருவனை காதலிக்கிறாய்’என்ற
அந்த வார்த்தை அம்புகள்
உண்மையில் முடியவில்லை
என்னால் நம்பமுடியவில்லை
அவன் மீண்டும் உறுதிபடுத்தினான்
என் உறுப்புகள் உயிரிழந்தன
உள்ளமது ஊமையானது
என்னை அறியாமல் வெளியானகண்ணீர்..
அல்ல அல்லகண்களிலிருந்து வரும் தண்ணீர்
அல்லவா கண்ணீர்
இதயத்திலிருந்து கண்களுக்குப்பொங்கும்
குருதித்திரவத்திற்க்குஎன்ன பெயர்…?
பெயர் தெரியாத திரவம்என் கண்களில்...

மீண்டும் உறுதிப்படுத்தினான்
இடி விழுந்தது என் இதயத்தில்
இடிந்து விழுந்தது என் இதயக்கோட்டை
எனக்கு மட்டுமே சொந்தம்
என்றுஎன்று எண்ணிக்கொண்டிருந்தவள்
இன்று வேறொருவனுக்கு சொந்தம்
என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளஇயலவில்லை…
என் இதய அரியணையில் என்றோ
ராணியானவள் இன்று
வேறொருவன் இதயத்தில் மகாராணி
என்பது மனதுக்கொப்பவில்லை…

உனை இன்னொருத்தன்
காதலிக்கிறான்
என்பதை என் இதயம் தாங்கும்
பலாச்சுளைகளில் ஈக்கள்மொய்ப்பதற்க்கு
தடா போட முடியுமா
ஆனால் நீ இன்னொருத்தனை
காதலிக்கிறாய் என்பதைத்தான்
என்னால் தாங்க இயலவில்லை
இலவு காத்த கிளியாக மாற
எனக்கு சம்மதமில்லை
கதறி அழுதேன்…இதயத்துள்
வேறு என்ன செய்ய இயலும்…?

ஆனால் மறந்து விட வில்லையே…
எப்படி முடியும்
அந்த இனியநிகழ்வுகளை மறக்க
எப்படி முடியும்…?

தமிழில் உயிர் எழுத்து எத்தனை
என்றால் மூன்று என்கிறேன்
ஆங்கிலத்தில் கேட்டால்
ஏழு என்கிறேன்
மற்றவர்களுக்கு வேண்டுமானால்
இது வேடிக்கை யாக இருக்கலாம்

உன் பெயரில் இடம்பெற்ற
எழுத்துக்கள் தான்
எனக்கு "உயிர்"எழுத்துக்கள்
என்று அவர்கட்குதெரிய
வாய்ப்பில்லை தான்…

உண்மையில் அந்த எழுத்துக்கள் தான்
தவம் செய்திருக்க வேண்டும்
உனக்கு பெயரமைத்துக் கொடுத்ததற்க்கு
உனக்குத்தெரியுமா
உன்னால் நேசிக்கபபட்டவன்
என்று தெரிந்த பின்புதான் உன் காதலனையும்
நேசிக்க ஆரம்பித்தேன்
நீ நேசித்தது விஷ ஜந்து என்றாலும்
அதையும் பூஜிப்பேன்…

என் காதலை மறக்க
செத்து மடி என்றாளும்
அதையும் செய்வேன்
ஆனால் தற்கொலைக்குத்
தேர்ந்தெடுக்கும் விஷத்தில் கூட
உன் பெயரின் எழுத்துக்கள்
எங்கேனும் உள்ளனவா..?என்று
தேர்ந்தெடுத்துதான் குடிப்பேன்
சாவிலும் உன் நினைவுஎன்னை
இன்னொரு முறைவாழ வைக்கும் எனும்
சூத்திரம் அறிந்தவன் நான்…

நண்பர்கள் உனை மறந்துவிடச்சொன்னார்கள்…
முயற்சித்தேன்உனை மறக்க முயன்ற
ஒவ்வொருநொடியும்
நீ என் நினைவில் நின்றாய்….
காலை விழித்ததுகாபி தந்தாய்
குளிக்கும் போது முதுகு தேய்த்தாய்
குளித்து முடிந்ததும் தலை துவட்டினாய்
உன் உணவை எனக்கூட்டி
உன் மடியை தலையனையாக்கிஎனை
உறங்க வைத்தாய்
இப்படி என் அன்றாட வேலை கூட
உன்னால் செய்யப்படுவதாய் பிரமை…
முயற்சித்தேன்..மீண்டும் மீண்டும்முயற்சித்தேன்..
மில்லி மீட்டர் மீல்லி மீட்டராய்
என் இதயம் விட்டு இடம் பெயர்ந்தாய்
நீ முழுமையாக என் இதயம் விட்டு
நகரும் நாள் என் வாழ்நாளின்
முடிவு நாள் என்பதை நான் அறிவேன
இருந்தாலும் முயற்சிப்பேன்
ஒரு நாள் என் இதயத்தில்
நீ ஆழமாக அறைந்த
ஆணியை அகற்றி விடுவேன்
என்ற நம்பிக்கை எனக்குள்ளது
ஆனால் அதன் காயம்
நான் சாகும் வரை
ஈரமாகவே இருக்கும்
இரத்தக் கசிவுடன்…!

“ஏமாற்றிய இதயத்தின்
வஞ்சகத்தை அறிந்த பின்பும்நேசிக்கும் வரை
"காதல் புனிதமானது தான்”
என்று என்றோ படித்த ஞாபகம்

உன் இதயம் வேறொருவனை
நேசிக்கிறது என்பதை
அறிந்த பின்னும் நான் உன்னை
நேசிக்கும் வரை
என் காதலும் புனிதமானது தான்…!

என் பள்ளிப்பருவமும், பதிவர் உலகமும்…

“பாட்டி நானும் பதிவராயிட்டேன்”

நான் வலைப்பூ ஆரம்பித்தவுடன் ஏற்பட்ட சந்தோஷத்தை என் எழுத்து வேகத்திற்கு எண்ணெய் ஊற்றி எனர்ஜி தந்த சீதாப்பாட்டிக்கு அமெரிக்காவிற்கு அழைத்து பகிர்ந்து கொண்ட தருணத்தை எண்ணிப்பார்க்கிறேன்.

அப்போது எனக்குத்தெரியாது இந்த பதிவர் உலகம் இவ்வளவு சவால் நிறைந்ததென்று….

நான் எப்போது எழுத ஆரம்பித்தேன் என்பது என் நினைவில் இல்லை ஆனால் என் பள்ளி பருவத்தில் நான் எழுதாத எழுத்திற்கு கிடைத்த விமர்சனங்கள்…என்னுள் மறக்க முடியாத பாகத்துள் பதிவாகியிருக்கிறது.



அப்போது நான் நடுநிலைப்பள்ளி படித்துக்கொண்டு இருந்தேன் என்று நினைக்கிறேன்.அது ஒரு கோ-எஜுகேசன் பள்ளி…அந்த வயதில் ஆண்,பெண் என்று பிரித்து பார்க்கும் பக்குவம் இல்லாததனால் எனக்கு தோழர்களை விட தோழிகள் அதிகம்.அதிலும் “அவள்” எனக்கு நெருங்கிய தோழி…பள்ளிக்கூட பாதையில் என்னுடன் பயணப்படுபவள், நாள் முழுதும் என் கூடவே இருப்பாள்…அந்த வயதில் என்னென்ன கதை பேசினோம் என்று இன்று என் நினைவுகளிலிருந்து மீட்டெடுக்க இயல வில்லை…என்றாளும் இன்றும் அவளை எண்ணினால் என் நினைவுகளில் எட்டிபார்ப்பது…தெத்துப்பல் தெரிய அவள் சிரிப்பு…புத்தகத்திற்கிடையே அவள் வளர்த்த மயில் இறகு...அவ்வப்போது அவள் கடித்து தந்த கடலை மிட்டாய்…


இடைவேளை நேரங்களில் நாங்கள் சேர்ந்தே விளையாடுவோம்…வழக்கமான விளையாட்டுக்களை விட நாங்களே கண்டுபிடித்த (??) சில விளையாட்டுக்கள் அப்போது எங்களுக்குள் பிரபலம்… அதில் ஒன்று டாக்டர் விளையாட்டு.தீர்ந்து போன விக்ஸ் டப்பாவினால் செய்யப்பட்ட ஸ்டெதஸ்கோப் கொண்டு நோயாளியாய் நடிக்கும் நண்பர்களுக்கு வைத்தியம் பார்க்கும் டாக்டர் நான்…

மிட்டாய் மாத்திரைகளை கடையில் வாங்கி புட்டியுனுள் இட்டு நான் எழுதித்தரும் மருந்துச்சீட்டுக்கு மருந்து கொடுக்கும் மருந்து கடை நடத்துபவளாக “ அவள்”.


எங்கள் விளையாட்டு எங்கள் சீனியர்களுக்குப் பிடிக்க வில்லை…அவர்களைச் சொல்லி குற்றமில்லை. மனிதன் வளர வளரத்தான் வக்கிரப்புத்தியும் சேர்ந்து வளர்கிறது.அவர்கள் வளர்ந்தவர்கள்… நான் எழுதிய மருந்துச்சீட்டை அந்தப்பெண்ணிற்கு நான் எழுதிய காதல்(???)கடிதம் என்றார்கள். டேய் இந்த வயசில் லவ் லட்டர் எழுதுறியா? என்றார்கள்…எனக்கு அர்த்தம் புரியவில்லை, அதற்கான வயதும் இல்லை…அதன் பின் அவளுடன் விளையாடக்கூடாது என்று கண்டிக்கப்பட்டதாய் ஞாபகம்…இருந்தாலும் நாங்கள் அந்த பள்ளி படித்த வரை “அவள்” தான் என் நெருங்கிய தோழி…

அதன் பின் வயதுக்கேற்ப ஒரளவு உலக அறிவு வளர… அடிக்கடி காதல் கவிதைகள் எழுதிய பழக்கம் இருக்கிறது.எனக்காக அல்ல என் நண்பர்களுக்காக…

நண்பர்களின் காதலிகளுக்காக நண்பர்கள் நிலையிலிருந்து நான் எழுதிய காதல் கவிதைகள் கிளிக் ஆக …நான் ராசிக்கார கவிஞன் ஆனேன்…உன்னைப்போல வருமா என்று நண்பர்கள் உசுப்பேற்ற …மருந்துக்கு கூட காதல் இல்லாமல் விரட்டி விரட்டி காதல் கடிதம் எழுதினாலும், கல்யாணத்திற்கு முன்பு வரை எனக்காக ஒரு காதல் கடிதம் கூட நான் எழுதியதில்லை… ( நம்புங்க…)

என் எழுத்துக்கள் அனைத்தும் மற்றவர்கள் பெயரிலேயே வெளி வர எழுத்துக்கள் அனைத்தும் முகம் அறியாமலேயே இல்லாமலேயே முகவரி தொலைத்தது.

சென்னையில் சிலவருடம் ஆணி புடுங்கிய காலங்கள்…

சீதாப்பாட்டி ( முத்தமிழ் சீதாம்மா) பழக்கமான தருணம் அது.
அந்த தமிழ் பாட்டியுடன் இலக்கியம் பேசிய தினங்கள்…வாழ்வில் மறக்க இயலா கணங்கள்…
சீதாப்பாட்டிக்கு நான் எழுதிய மடல்கள் தான் என் எழுத்திற்கான பயிற்சிப்பட்டறை…

அதன் பின் துபாய்…

காவிரிமைந்தனின் அறிமுகம்…என்னுள் சிதைந்திருந்த திறன்களை செப்பனிட்ட சிற்பி அவர். அதன் பின் அவரால் அறிமுகப்படுத்திய வானலை வளர்தமிழ், தமிழ்தேர் என்று என் எழுத்தை அங்கீகரிக்க ஒரு கூட்டம்.

அந்த நேரத்தில் தான் பதிவர் உலகம் பற்றி பாட்டி மூலம் அறிந்தேன்…அவரின் தூண்டுதலின் பெயரிலேயே தான் பதிவர் உலகில் புகுந்தேன். முதல் பதிவு எழுதிவிட்டு ஒரு பெருங்கூட்டம் வந்து படிக்கப்போகிறது என்று காத்திருந்த எனக்கு பெருத்த ஏமாற்றம்…என்னைத்தவிர வேறு யாரும் படித்த மாதிரி தெரியலை…ஒரு கமெண்ட் ஆவது வராதா என்று வந்து பார்த்தா வந்த ஒன்று, இரண்டு பேரும் பெயர் வெளியிட விரும்பாத வாசகர்கள்…

சரி நம்ம பதிவை நமது நட்பு வட்டத்திற்குள் மின் அஞ்சல் மூலம் பரப்புவோம் என்று, முதலில் எங்கள் Architect Group ற்கு அனுப்பி வைத்தேன். வெறும் Auto Cad, Site Work என்று வெறுமையாக கழிப்பவர்களுக்கு நம் எழுத்துக்கள் சற்று மாறுதலாக இருக்கட்டுமே என்ற நல்ல எண்ணத்தில் . இரண்டு நாள் கழிச்சி Comment Moderation page பார்த்தால் ஒரு Comment வந்திருந்தது… நம்மையும் ஒரு பொருட்டா நினைச்சி யாரோ ஒருத்தன் Comment போட்டிருக்காண்டா என்று ஆர்வத்துடன் Open பண்ணினா…என் ஜூனியர் ஒருத்தன் அனுப்பியிருந்தான் உள்ளே, Line, Circle, Copy, Erase ன்னு அனுப்பியிருந்தது.எனக்கு ஒன்றும் புரியவில்லை… உடனே அவனிடம் போன் பண்ணி கேட்டால் நீங்க தானே Post a Comment ன்னு போட்டிருந்தீங்க… அதனாலே தான் Auto Cad Comment எழுதி அனுப்பினேன்..நீங்க ஒன்று தான் கேட்டீங்க ஆனா நான் நாலு அனுப்பியிருக்கேன் என்று அவன் ஆர்வத்தில் பேசிக்கொண்டே போக, நான் டரியல் ஆகிப்போனேன்.

சரி இது தான் தோல்வியடைந்து விட்டது…மீண்டும் பதிவர்களுக்கே …மின் அஞ்சலில் அனுப்பினால் என்ன..? என்று எண்ணிய வேலையிலேயே சில மூத்த பதிவர்கள் கனவில் வந்து மிரட்டினார்கள்…ஆகா இவங்க கோபப்பட்டு “மின் அஞ்சலில் தொல்லை தரும் இளம் பதிவர்கள்” என்று மானத்தை வாங்கிப்புட்டா…? வேணாய்யா வேணாம்…தமிழ் மணம், தமிழிஷ் போன்றதிலேயே போதும் என்று ஒரு மனதாக முயல…அதிலும் சூடான இடுக்கையில் இடம் பெற நம் பதிவிற்கு தகுதியில்லையா என்று நம் உள்மனமே நம்மை வம்பிற்கிழுக்க…ரொம்ப மெனக்கெட்டு உக்காந்து யோசிச்சி ஒரு பதிவு போட்டா… அதுவும் இழுத்து ஊத்திக்கும்…

எந்த அடிப்படையில் பதிவுகள் இங்கு அங்கீகரிக்க படுகிறது என்று ஆராய்ந்து பார்த்தால் எல்லாம் நட்பு வட்டத்தின் அடிப்படையில் தான்…பின்னூட்டங்கள்…ஹிட் எல்லாமே பதிவின் தரத்தைப்பொருத்து மட்டுமே வருகிறதா என்றால்…கண்டிப்பாக இல்லை…இங்கு படிப்பவர்களை விட படைப்பாளிகள் அதிகம்…இதில் யாரையும் குறை சொல்ல இயலாது. இருந்தாலும் இதில் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய இருக்கிறது. கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே…ஆம் எதிர்பார்ப்பை குறைத்து எழுதுவதை தொடர்வது மட்டுமே பதிவுலகில் வேரூன்ற ஒரே வழி…

“பாட்டி நானும் பதிவராயிட்டேன்…”

அப்போது எனக்குத்தெரியாது இந்த பதிவர் உலகம் இவ்வளவு சவால் நிறைந்ததென்று…

உண்மைத்தமிழன், நட்புடன் ஜமால்,எம்.எம்.அப்துல்லா தேர்தல் சீட்டு விவகாரம்…பிரபலப்பதிவர் அபிஅப்பா ஆதங்கம்…நிஜமாவே நல்லவன் கோவிக்கண்ணன் தொடர்பு அம்பலம்…

நான் சமீபத்தில் எழுதிய வரலாற்றுச் சிறப்பு மிக்க அரசியலில் பதிவர்கள்…உண்மைத்தமிழன், நட்புடன் ஜமால்,எம்.எம்.அப்துல்லாவிற்கு சீட்டு உறுதி…அண்ணாச்சி தலைமையில் ரகசியக்கூட்டம்... என்ற பதிவிற்கு அண்ணன் அபி அப்பா எழுதிய //அட மகா பாவிமனுஷா! எல்லார் டவுசரையும் ஒரு பதிவிலேயெ கிழிச்சா என்ன அர்த்தம். ஆனா சொல்லீட்டென் எனக்கு மாயவரம் சீட்டுக்கொடுக்கலைன்னாஇன் பிளாக் முன்னாடி டீ குடிப்பேன்:-))) // என்ற ஒரு பின்னூட்டத்தின் தாக்கமே இந்த பதிவிற்கு காரணம்.

நான் பதிவர் உலகத்திற்குள் காலடி எடுத்து வைத்து ஒரு வருடத்திற்கு மேலானாலும் சில தவிர்க்க இயலாத காரணங்களால் கடந்த வருடம் முழுதும் எழுத இயலா நிலை...இப்போதும் திரும்ப ஆரம்பித்தவுடன் துபாய் பற்றிய இரண்டு சீரீயஸ் பதிவுகள்...ரொம்ப சீரியஸா போனா “ஆக்ஸன் பதிவராகி” விடுவோம் என்பதால் இடையே இப்படி ஒர் நகைச்சுவை பதிவுவாக மேற்கண்ட பதிவை எழுதினாலும்… நான் வலைப்பூ ஆரம்பித்த காலத்தில் அரட்டை அரங்கத்தையும் அன்றைய முக்கிய பதிவர்களையும் கோர்த்து அன்று நான் எழுதிய (டவுசர் கிழித்த) ஒரு பதிவு அன்றே நல்ல பாராட்டை வாங்கித்தந்தது…

இந்த விசயம் தெரியாமல் அபிஅப்பா என்னிடம் டவுசர் கிழித்த சம்பவத்தை கேட்க எனக்கு மருதமலை படத்தில் வடிவேலுவிடம் “நான் உங்களை அடிசிருக்கேன் ஏட்டையா” என்ற ஜோக் ஞாபகம் வர இனி அபி அப்பாவிற்கும் எனக்கும் நடந்த உரையாடலை நீங்களே கேளுங்க…

நன்றி:அபி அப்பா

பதிவை படித்து விட்டு அபி அப்பா..

அபி அப்பா: அட மகா பாவிமனுஷா! எல்லார் டவுசரையும் ஒரு பதிவிலேயெ கிழிச்சா என்ன அர்த்தம்.யாரு ராஸா நீ

நான் : என்ன அபி அப்பா என்னத்தெரியலையா… நான் உங்களை காமெடி பண்ணி பதிவு போட்டிருக்கேனே…

அபி அப்பா: (ஆச்சரியத்துடன்) காமெடிப் பதிவு போட்டிருக்கியா ….எப்பமா…?

நான் : நல்லாத்திங்க் பண்ணிப்பாருங்க ஞாபகத்திற்கு வரும்…

அபி அப்பா: அந்த மூணு பதிவர்கள் சேர்ந்துக்கிட்டு “Me the first” Me the second” “Me the third “ன்னு கலாய்ப்பாங்களே அந்த குருப்பா…

நான் : இல்லேங்க…

அபி அப்பா: ஆ அந்த அஞ்சி பதிவர்கள் சேர்ந்துக்கிட்டு ஒரு நாள் புல்லா பின்னூட்டம் போட்டே கொன்னாங்களே அந்த குருப்பா

நான் : இல்லேங்க…

அபி அப்பா: அதுவும் இல்லையா…ஹூம் ஒண்ணு ரெண்டு பேரு நம்மலைப்பத்தி பதிவு போட்டா ஞாபகம் இருக்கும்….நம்மைச் சுத்தி தான் பதிவர் வட்டமே கும்மி அடிக்குதே…(ஞாபகம் வந்தவராய்) டேய் அன்னிக்கி அண்ணாச்சி, தமிழச்சி, குசும்பனோட என்னையும் கும்மி எடுத்தியே அவனா நீ…

நான் : ஆமா அபிஅப்பா…கரிக்கிட்டா கண்டுபுடிச்சிட்டீங்களே…

அபி அப்பா: அதை எப்படிப்பா மறக்க முடியும் ஆன ஒண்ணுப்பா அன்னிக்கி நீ அடிச்சா காமெடிக்கு அப்பறம் எவன் எழுதினாலும் தாங்கக்கூடிய ஒரு சக்தி வந்துடுச்சியா இந்த உடம்புலே…

நான் : அதை எல்லாத்தையும் தாங்கிக்கிட்டு பதிவர் வட்டத்திலே இருக்கிறதே ஒரு பெரிய சாதனை தான் அபி அப்பா…

அபி அப்பா: அதனாலே தானடா பதிவர் வட்டமே "என்னை ரொம்ப நல்லவன்னு" சொல்றீங்க… ஆமா நீ எப்படி ராஸா இருக்கே…?

நான் : எங்கே அபி அப்பா நான் அப்படியே தான் இருக்கேன்.. ஆனா அன்னிக்கு உங்களைப்பத்தி காமெடி பதிவு போட்ட கோவிகண்ணன், நிஜமாவே நல்லவன், எல்லாம் பெரிய பதிவர் ஆயிட்டாங்க…

அபி அப்பா: நான் சென்ஸ்…எப்படிடா பெரிய பதிவர் ஆனாங்க எப்படி ஆனாங்க…எல்லாரும் என்னைப்பத்தி எழுதுனதுக்கு அப்புறம் தான் ஆனாங்க… அந்த கோவிக்கண்ணன் கதையை சொல்றேன் கேளு…அவர் ஒரு நாளைக்கு பத்து பதிவு எழுதுவார் ஆனா அப்ப எல்லாம் பெரிய பதிவர் ஆகலே…ஒரு நாளு நம்ம பதிவு பக்கம் வந்தாரு ஒரு பின்னூட்டம் தாப்ப எழுத சொன்னேன்…என்ன மூடிலே இருந்தாரோ என்னை கிழிகிழின்னு கிழிச்சி ஒரு பதிவு போட்டுடாரு…நான் அப்படியே சாக் ஆயிட்டேன்…அன்னையிலே இருந்து தான் கோவியாரு கோவியாருன்னு? ஒரே நாளுலே பேமஸ் ஆயிட்டாரு, அந்த நிஜமாவே நல்லவன் ஒரு நாளைக்கு இருபது பின்னூட்டம் போடுவாரு எனக்கும் ஒரு பின்னூட்டம் போட்டா என்னனு தாய்யா கேட்டேன்…”அபி அப்பாவாலே பதிவர் வட்டத்திலிருந்து பிரிகிறேன்” பொலிச்சுன்னு ஒரு பதிவை போட்டுட்டாரு…அப்புறம் எல்லோரும் சேர்ந்து அவரை பெரிதாக்கி இன்னிக்கி அவரு நிஜமாவே நல்லவரு ஆயிட்டாரு…
ஆனா ரெண்டு பேரும் மரியாதை தெரிஞ்சவங்கடா… அந்த கோவிக்கண்ணன் நான் என்ன மொக்கை பதிவெழுதினாலும் ஒரு பின்னூட்டம் விடாமா போக மாட்டாரு…அந்த நிஜமாவே நல்லவன் ஒரு படி மேலே ஒரு பதிவுக்கு பத்து பின்னூட்டம் விடாமே போக மாட்டாரு…இது தெரியாமா என்கிட்டேயே வந்து பெரிய பதிவராயிட்டாரு, பெரிய பதிவராயிட்டாருன்னு பீச்சிக்கிட்டு இருக்கே…சரி அத விடு உன் பதிவெல்லாம் எப்படி போய்கிட்டிருக்கு…

நான்: (நொந்த படி)என்ன அபி அப்பா என்ன தான் மூச்சி திணற திணற எழுதினாலும் ஒரு நாளைக்கு நாளு பேரு வந்து எட்டி பார்க்கிறாங்க…மாசத்திற்கு ஒரு பின்னோட்டம்…கம்ப்யூட்டர் தெரிஞ்சாவது நட்புடன் ஜமால் மாதிரி எதாவது கிளாஸ் எடுக்கலாம்…நாமா படிச்ச படிப்புக்கு டீ கடையிலே கிலாஸ் எடுக்கத்தான் லாயக்கு…அதனாலே நான் ஒரு முடிவு பண்ணிட்டேன்…நானும் ஒரு நாளைக்கு நுறு ,முன்னூறு ஹிட் வாங்கி…பெரிய பதிவராகனுன்னு

அபி அப்பா: ஆகனும்டா ஆகனும்

நான்: அதுனாலே நானு உங்களைப் பத்தி எழுதி பெரிய ஆளா வரணும்னு முடிவு பண்ணிட்டேன்.ஏன்னா நீங்க ரொம்ப ராசிக்காரார் ஆயிட்டே…

அபி அப்பா : இன்னுமாடா இந்த உலகம் என்னை நம்புது… ஹய்யோ ஹய்யோ…

( இது போன்ற பதிவுகள் வெளியாக அபி அப்பா போன்றோரின் தாராள மனப்பான்மைக்கு முதல் நன்றியினைக்கூறி தொடர்ந்து ஆதரித்து வருவோர் அளிக்கும் ஆதரவே இன்னும் சிறப்பாக எழுத ஊக்குவிக்கும் என்பதால் உங்கள் தொடர் ஆதரவை பின்னூட்டங்கள் மூலமும், வாக்களிப்பின் மூலமும் தாராளமாக தரும்படி கோரிக்கை வைத்து… விரைவில் மீண்டும் கலக்கலுடன்…கீழைராஸா)


அண்ணாச்சி, தமிழச்சி, அபி அப்பா, குசும்பனை கும்மிய முந்தய பதிவு….

அரசியலில் பதிவர்கள்…உண்மைத்தமிழன், நட்புடன் ஜமால்,எம்.எம்.அப்துல்லாவிற்கு சீட்டு உறுதி…அண்ணாச்சி தலைமையில் ரகசியக்கூட்டம்...

என் இனிய வலைப்பூவாசிகளே…

இது தேர்தல் நேரம் அரசியல் களம் சூடு பிடித்து விட்டது, மூன்றாவது அணி,நாலாவது அணி என்று தொகுதிகளைவிட கூட்டணிகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டு போகிறது. எல்லாத்துறையினரும் அரசியலில் போட்டிபோட்டு அரசியலில் குதிக்கும் போது பதிவர்களாகிய நாமும் அதில் குதித்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையின் பலன் தான் இந்த பதிவு…நம் பதிவர்களுக்கு ஆதரவு கிடைக்கிறதோ இல்லையோ இந்த பதிவுக்கு நிச்சயம் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உங்கள் நண்பன் கீழைராஸா….



தமிழ்மண அலுவலகம் அன்று திருவிழா போல் காணப்பட்டது… எல்லாப் பதிவர்களும் ஒன்று கூடினால் சொல்லவா வேண்டும் …அது பதிவர்கள் அரசியலில் குதிப்பதற்கான ரகசியக்கூட்டம் (!!!) என்றாலும் ரகசியமாக எல்லோரும் தன் பங்கிற்கு பதிவு போட்டு விட்டு வந்ததால் அது ஒரு பொதுக்கூட்டம் போல் காட்சியளித்தது…எல்லா நாட்டிலிருந்தும் பதிவர்கள் வந்து குழுமியதால் கட்டுப்படுத்துவது சற்று கடினமாகவே இருந்தது…கூட்டம் குறிப்பிட்ட நேரத்தில் ஆரம்பிக்க அண்ணாச்சி தலைமையேற்க அவர் சகாக்கள் சீட்டை தக்க வைத்துக் கொண்டனர்.




அண்ணாச்சி: என்னங்கடே அண்ணாச்சி எல்லோரும் வந்தாச்சாடே…

நட்புடன் ஜமால்: அண்ணாச்சி Me the first

அண்ணாச்சி: ஆரம்பிச்சியாடே உன் வேலையை….

அனானி: அண்ணாச்சி Me the first

ஏழெட்டு பேர் சேர்ந்து : Me the first

குசும்பன்: ஆகா கிளப்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க…பதிவுலே தான் இப்படின்ன இங்கேயுமா…

அண்ணாச்சி: நிறுத்துங்கடே யாராவது “Me the first” இருந்துட்டு போங்கடே என்னை பேச விடுங்கடே

( கூட்டத்தில் சலசலப்பு ஓய்கிறது )

அண்ணாச்சி வடிவேலு பாணியில் கண்ணை மூடிக்கொண்டு…தனக்கு தானே” அப்பா எங்கே மதிக்காமே போயிடுவாங்களோன்னு பயந்துட்டேன்…என்ன இருந்தாலும் பதிவர் உலகத்துலே உனக்குன்னு ஒரு மரியாதை இருக்குடே…”காலரை தூக்கி விட்டபடி பெருமூச்சி விடுகிறார்…

அபி அப்பா: அண்ணாச்சி “ அது “ தானே நினைச்சீங்க….

குசும்பன் : அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

அண்ணாச்சி: மனதுக்குள் ( பாவி மக்கா மேலேயும் கீழேயும் பாக்குதுங்க எப்படித்தான் கண்டுபிடிக்கிறாங்களோ…ஹூம்ம்

டிபிசிடி: அடவுலே இருக்க விட மாட்டாய்ங்க போலிருக்கே !!

அண்ணாச்சி: சரி சரி விசயத்திற்கு வாங்கடே…நாம கூடியிருக்கிறது எதுக்குன்னா…அரசியல் என்கிற சாக்கடையை சுத்தம் பண்ணும் விதமாக நாம அரசியலே குதிக்க போறோம்னு உங்க எல்லோருக்கும் தெரியும்.அது விசயமா ஒவ்வருவராக வந்து உங்களை நீங்களே அறிமுகப்படுத்தி, நீங்க அரசியலுக்கு எப்படி சரிப்பட்டு வருவீங்கன்னு சுருக்கமா பேசுங்கடே…

நட்புடன் ஜமால்: Me the first

அபி அப்பா: வேணாம்…வேணாம்…அழுதுடுவேன்…

சென்ஸி: இந்தப் பிரச்சனையே வேணாம்னு தான் பதிவர்கள் பெயரை சீட்டுலே எழுதி வச்சிருக்கோம் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுப்போம்….

(குலுக்கல் முறையில் முதலில் உண்மைத்தமிழன் பெயர் வருகிறது )



உண்மைத்தமிழன்: என் இனிய வலைத்தமிழ் மக்களே…

கோவிக்கண்ணன்: வந்துட்டார்யா வலைத்தமிழ் பாரதி ராஜா…

உண்மைத்தமிழன்: என் இனிய வலைத்தமிழ் மக்களே…” பிறந்து வளர்ந்ததிலிருந்து சொல்லிக் கொள்ளும் படியான சாதனைகள் எதுவும் இதுவரை இல்லை” என்று என் வலைப்பூ முகப்பில் எழுதி வைத்திருப்பதால், இவன் எந்த சாதனையும் புரியாதவன் என்று தப்புக்கணக்கு போட்டு விடக்க்கூடாது…” உண்மைத்தமிழன்” என்ற ஒன்று போதாதா ? நான் அரசியலுக்கு சரியான ஆள் என்பதற்கு…அரசியல் பற்றி நான் எழுதிய கொலைவெறி பதிவுகளைக் கண்டு தமிழ் நாடே டரியல் ஆகிக்கிடப்பது உங்களுக்கு தெரியாதா…?

அனானி: நீங்க எழுதினாலே நாங்க டரியல் ஆவது சகஜம் தானே…

உண்மைத்தமிழன்: பதிவர் வட்டத்தை , பதிவர் சதுரமாக்கியது என் சாதனை இல்லையா…

குசும்பன்: நாங்களெல்லாம் பதிவர் முக்கோணம், பதிவர் ஐங்கோணம், பதிவர் எங்கோணம்னு போயிக்கிட்டு இருக்கோம்…இவரு என்ன கப்பித்தனமா பேசிக்கிட்டு இருக்காரு…

உண்மைத்தமிழன்: அரசியல் பற்றி எனக்குத்தெரியாத விசயமா…1969…ல்

டிபிசிடி: அம்மாடியோவ் ஆரம்பிச்சிட்டாருய்யா…அண்ணாச்சி ஒரு சீட் கன்பார்ம்னு இவரை உட்கார வையுங்க இல்லை இந்த மீட்டிங் முடியுற வரை இந்த புள்ளி விபரம் மட்டும் தான் தொடரும்….

அண்ணாச்சி: சரி சரி உமக்கு சீட் கன்பார்ம் அண்ணாச்சி…

உண்மைத்தமிழன்: அண்ணாச்சி இப்படித்தான் 1972 ல்...( என்று ஆரம்பிக்க ஏழெட்டு பதிவர்கள் கைத்தாங்களாக அவரைத் தூக்கி வந்து சீட்டில் அமரச்செய்கின்றனர்…

அடுத்த குலுக்கலில் எம்.எம்.அப்துல்லா

அவர் பேச ஆரம்பிக்கும் முன்பே பின்னூட்டத்துடன் சிலர்…

நசரேயன் : அப்துல்லா என்ன பேசப்போறார்ன்னு தெரியலை ஆன Me the first…மீதி அவர் பேசி முடிந்ததும்…

குசும்பன்: எத்தனை அண்ணாச்சி வந்தாலும் உங்களை திருத்த முடியாதப்பா….

எம்.எம். அப்துல்லா: ஒண்ணுமில்லைச் சும்மன்னு தான் கூட்டிக்கிட்டு வந்தாங்க இங்கே வந்தா அரசியல்ன்னு சொல்றாங்க…என்னை பேச விட்டதே பெருசு.. இதிலே என்னைப்பத்தி நானே பேசனுமா… என்ன கொடுமைசார் இது…இருந்தாலும் இரயிலோடு விளையாடின்னு என் பால்ய அனுபவங்களை படியுங்கள்…

( அது பாலியல் அனுபவங்கள்னு காதில் விழ பதிவர்கள் தாங்கள் கொண்டு வந்த மடிக்கணிப்பொறியை தட்டி அந்தப் பதிவை தேட ஆரம்பிக்கின்றனர்…ஒரே நிமிடத்தில் ஆயிரக்கணக்கான ஹிட்)

எம்.எம். அப்துல்லா: நான் தெருவிளக்கில் படித்து , கவர்னருக்கே கை கொடுத்தவன்… என்று ஆரம்பிக்க…

மறு பேச்சே இல்லாமல் சீட் கன்பார்ம்…

அண்ணாச்சி: குசும்பு அது என்னங்கடே எல்லோரும் பேச பேச யாரோ ஒருத்தர் வந்து ஸ்மைல் பண்ணிட்டு மட்டும் போய்கிட்டு இருக்காரே யார் அது…

குசும்பு: அது வேற யாரு நம்ம மங்களூரு சிவா தான்…

அண்ணாச்சி: இங்கேயுமாங்கடே…

அடுத்த குலுக்கலில் நட்புடன் ஜமால்

நட்புடன் ஜமால்: என்னைப்பத்தி நானே சொல்லக்கூடாது… இருந்தாலும் சொல்றேன்… ஒரு மறு மொழி கிடைக்காதானு எல்லோரும் ஏங்கிகிட்டு இருக்கப்போ எனக்கு ஒவ்வொருத்தங்களும் அஞ்சி ஆறு மறுமொழி விடுவாங்க…நான் ஒரு ஓட்டு வாங்குனா ஐஞ்சி ஓட்டு வாங்கின மாதிரி…

டிபிசிடி: அதுக்க்கெல்லாம் மச்சம் வேணுமய்யா…

நட்புடன் ஜமால்: அப்புறம் எந்த பிரச்சனையும் இல்லாமே நெட்டுலே ஓட்டளிக்கிற ஒரு கூகில் சாப்ட்வேர் பத்தி உங்களுக்கு விளக்கலாம்னு இருக்கேன்…

அண்ணாச்சி: ஜமால் இங்கேயும் கற்போம் வாருங்களாடே… உமக்கு சீட் கன்பார்ம்டே…

ஹேமா: எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் ...தமிழ் மணத்திலே தான் சூடான இடுக்கையில் எனக்கு இடம் தரலை இங்கேயாவது சீட்டு தரலாம்ல…

அண்ணாச்சி : இது என்னங்கடே…

குசும்பன்: அண்ணாச்சி அரசியல்னு வந்தாச்சி…இப்ப லேடீஸ் செண்டிமெண்ட் ரொம்ப முக்கியம்…புதுகை தென்றல், பாசமலர், அன்புடன் அருணா, ஹேமான்னு நாளஞ்சி பொண்ணுங்களுக்கு சீட்டை கன்பார்ம் பண்ணுங்க… அப்ப தான் நம்ம சீட் தப்பும்…

அபிஅப்பா: அப்ப, அபி யோட அப்பாங்கறதினாலே எனக்கும் சீட் கன்பார்ம் இல்லையா அண்ணாச்சி…

குசும்பன்: அண்ணாச்சி இவரு டேஞ்சரஸ் ஃபெல்லோ இவரை கேர்புல்லாத்தான் ஹேண்டில் பண்ணனும்….

அனானி: அண்ணாச்சி தீர்ப்பை மாத்தி சொல்லு…

அண்ணாச்சி : நான் எங்கடே தீர்ப்பு சொன்னேன் …பதிவுலே தான் படிக்காமே பின்னூட்டம் போடுவே இங்கேயுமாடே…

தம்பி: அண்ணாச்சி நிலைமை மோசமா போயிடும் போல கூட்டத்தை ஒரு மணி நேரம் தள்ளி வையுங்க…

அண்ணாச்சி : அண்ணாச்சி எல்லோரும் களைப்பா இருப்பீங்க …போய் ஒரு பதிவு போட்டுட்டு வாங்க…மேலே பேசலாம்….

கீழைராஸா : என்னங்க… முதல் பகுதியை இப்படியே முடிச்சிக்கறேன்…அரசியலுக்கு உங்களை இழுத்துட்டேன் என்று ஆள்வைத்து அடிப்பது, ஆட்டோ வைத்து தூக்குவது இப்படி கொலை வெறியோடு செயல்படாமே காமெடியா மட்டும் எடுத்துக்கொண்டு உங்களின் பின்னூட்டங்களை தருமாறு அன்புடன் வேண்டுகிறேன்…என் பேரு இல்லையே என்று யாரும் வருத்தப்பட வேண்டாம்…கண்டிப்பா நீங்க எல்லோரும் இடம்பெறுவீங்க ஆன உங்களின் ஆதரவின் அளவைப்பொருத்து அடுத்த ஆணியை புடுங்க முயற்சி செய்யப்படும்.

துபாய், வளைகுடா பொருளாதாரச் சலனத்திற்கு காரணம் யார்…? உலகப் பொருளாதார வீழ்ச்சியின் பிண்ணனிக் கதை என்ன?

இரண்டு வருடம் முன்பு வளைகுடா பொருளாரச் சலனம் வருமென்று யாராவது கூறியிருந்தால் அவரை பைத்தியக்காரனென்று எள்ளி நகையாடியிருப்பார்கள்…

சென்ற வருடம் துபாயில் ஆள்குறைப்பு நடைபெறும் என்று யாராவது ஆருடம் சொல்லியிருந்தால் அவரை கல்லால் அடித்துக் கொன்றிருப்பார்கள்.ஆனால் இன்று…

அமெரிக்காவில் நடந்த பொருளாதார வீழ்ச்சி வெறியாட்டம் இன்று இங்கு காலடி எடுத்து வைத்து விட்டது என்றே தோன்றுகிறது… இதற்கு யார் காரணம் இந்த கேள்விக்கு என்க்கு ச்மீபத்தில் வந்த ஒரு மின்னஞ்ச்ல் கதை விடையாக அமைந்தது…அந்த மசால இடப்பட்ட மொழிபெயர்ப்பு உங்கள் பார்வைக்கு…


ஒரு வயதான பெரியவர் சாலையோர உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார்…அவருக்கு எழுதப்படிக்கத்தெரியாது…அதனால் அவர் செய்திதாள் எதுவும் படிப்பதில்லை…காது சரியாக கேட்காது என்பதால் வானொலி செய்திகளும் அவருக்கு எட்டாத ஒலி…

இருந்தாலும் உணவத்தொழில் அவருக்கு கைவந்த கலை…விதவிதமான உணவுகளை அறிமுகம் செய்து வியாபாரத்தை பலப்படுத்தி வந்தார்…பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி மென்மேலும் வியாபாரம் பெருகியதால் மேலும் பல வேலையாட்களை சேர்த்து உணவகத்தின் இடத்தை விஸ்தரித்து, அந்தப்பகுதியின் சிறந்த உணவகமாக மாற்றி வெற்றிகரமாக நடத்தி வந்தார்…

நாளாக நாளாக உணவகத்தில் கூட்டம் அலை மோதியதால் சமீபத்தில் பட்டபடிப்பை முடித்து வேலை தேடிவந்த தன் மகனையும் அதே உணவகத்தொழிலில் ஈடுபடச்செய்தார்…

மகனும் ஆர்வத்துடன் தொழிலில் ஈடுபட்டான்…இருந்தாலும் உலகப்பொருளாதார சலனம் பற்றி செய்திகள் படிக்க படிக்க குழம்பியவனாக…அப்பாவிடம் வந்தான்…”அப்பா ஒரு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி நம்மை நோக்கி வந்து கொண்டிருப்பதை தாங்கள் அறிவீரா..?
“இல்லை மகனே அது என்ன பொருளாதார நெருக்கடி…?” இது அப்பா.
“உலக நாடுகளின் பொருளாதாரம் சரிந்து மிக மோசமான நிலையில் உள்ளது இங்கும் நிலை மிக மோசமான நிலை நோக்கி போய் கொண்டிருக்கிறது…அந்த மோசமான நிலையை சமாளிக்க நாம் தயாராக வேண்டும்” மகன்.

அப்பா யோசிக்க ஆரம்பித்தார்…மகன் பெரிய படிப்பெல்லாம் படித்தவன் உலக விசயங்களை செய்திதாள்,வானொலி, டெலிவிசன் மூலம் கரைத்து குடித்தவன் அவன் சொல்வதை லேசாக (சுலபமாக) எடுத்துக்கொள்ளக்கூடாது…

அடுத்த நாளிலிருந்து அதிரடி மாற்றங்கள்…
விதவிதமான உணவு அறிமுகங்களை நிறுத்தினார்.வித்தியாசம் கருதி அவர் கடை வந்த கூட்டமும் நின்றது…
புதிய திட்டங்களை புறந்தள்ளினார்…புதுமை கருதி வந்த கூட்டம் பூஜ்ஜியம் ஆனது.
ஆழம் தெரியாமல் ஆள்குறைப்பு செய்தார்…
திறமையான தொழிலாளர்கள் இடம் பெயர்ந்தார்கள்…உணவின் தரம் குறைந்தது…படிபடியாக தொழில் முற்றிலும் தடை பட்டது.

அப்பா மகனிடம் சொன்னார்…

“ மகனே நமக்கு இப்போது தொழில் அறவே இல்லை…நாம் இப்போது பொருளாதார வீழ்ச்சியின் மத்தியில் சிக்கியிருக்கிறோம் என்று நினைக்கிறேன்.எது எப்படியோ நீ சொன்னது சரியாக போய் விட்டது.உன் யோசனை படி நடந்ததால் நாம் பெரும் நஷ்டத்தில் இருந்து தப்பினோம்…என்ன வென்றாலும் படிச்சவன் படிச்சவன் தாண்டா..”




இப்ப சொல்லுங்க.. இந்த நிலை யாரால் வந்தது…?




Related Posts with Thumbnails